டைனோசர்ஸ் – விமர்சனம்

நடிப்பு: உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் பிரியா தேவா, மானேக்‌ஷா, கவின் ஜெய்பாபு, ஜானகி, அருண் மற்றும் பலர்

இயக்கம்: எம்.ஆர்.மாதவன்

ஒளிப்பதிவு: ஜோன்ஸ் வி.ஆனந்த்

படத்தொகுப்பு: ஆர்.கலைவாணன்

இசை: போபோ சசி

தயாரிப்பு: ‘கேலக்ஸி பிக்சர்ஸ்’ ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்

தமிழக வெளியீடு: ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

படத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு, ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியிலிருந்து முற்றாக அழிந்துபோன ‘டைனோசர்ஸ்’ எனும் உயிரினம் பற்றிய அறிவியல் படம் அல்லது அறிவியல் புனைவுப்படம் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். அப்படி எண்ணி திரைப்பட ரசிகர்கள் டைவர்ட் ஆகட்டும் என்ற ”புத்திசாலித்தனத்துடன்” படக்குழு இந்த தலைப்பை வைத்திருந்தாலும் நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம். உண்மையில், “நான் சாகவில்லை, சார்மார்களே…” என்ற பொருளில் தான் ‘Die No Sirs’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

படப்பிடிப்புக் கருவி கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து ‘வடசென்னை’ என்றாலே அடி-தடி, வெட்டு-குத்து, கொலை –கொள்ளை, ரவுடித்தனம் என்பதாக தமிழ்த் திரையுலகில் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ‘டை னோ சர்ஸ்’ திரைப்படமும் வடசென்னையை கதை நிகழும் களமாகக் கொண்டது தான் எனும்போது, இதன் கதை எதனை மையமாகக் கொண்டிருக்கும் என்பதை விளக்கிச் சொல்லி விளங்க வைக்க வேண்டியதில்லை!

வடசென்னை எண்ணூர் பகுதியில் உள்ள காக்கா நகரைச் சேர்ந்த பிரபல தாதா சாலையார் (மானேக்‌ஷா). பத்து பதினைந்து இளைஞர்களை அடியாட்களாக வைத்துக்கொண்டு, படுபாதகச் செயல்களைச் செய்து, மாநகரையே நடுநடுங்கச் செய்துகொண்டிருப்பவர்.

சாலையாருக்கு எதிராக போட்டிதாதாவாக இருப்பவர் கிளியப்பன் (கவின் ஜெய்பாபு). அவரது மைத்துனரான – அதாவது அவரது தங்கையின் கணவரான – மனோவை, சாலையாரின் அடியாட்கள் எட்டுப்பேர் சேர்ந்து வெட்டிக் கொன்றுவிடுகிறார்கள். அவர்களை கிளியப்பன் உயிருடன் விட்டு வைக்க மாட்டார் என்பதால், பாதுகாப்பு கருதி, அவர்களை போலீசில் ஒப்படைத்து சிறைக்கு அனுப்ப முடிவு செய்கிறார் சாலையார். அவரது யோசனையை ஏற்று ஏழு பேர் சிறை செல்கிறார்கள். எட்டாவது நபரும் கொலைக்குழுவின் முக்கிய ஆளுமான துரைக்கு (மாறா) திருமணமாகி ஒன்பது நாட்கள் தான் ஆகியிருப்பதால், அவன் சரணடைய மறுக்கிறான். நட்புக்காக துரைக்கு உதவ முன்வரும் தனா (ரிஷி), துரைக்குப் பதிலாக எட்டாவது நபராக சிறைக்குச் செல்கிறான்.

தனது மைத்துனரைக் கொன்ற முக்கிய கொலையாளியான துரை சுதந்திரமாக வெளியே தான் இருக்கிறான் என்ற விஷயம் கிளியப்பனுக்குத் தெரிய வருகிறது. இதனையடுத்து கிளியப்பனின் ஆட்கள் துரையை பயங்கரமாக துரத்திச் சென்று, ஓட ஓட வெட்டி, கொடூரமாகக் கொன்று சாய்க்கிறார்கள்.

கொல்லப்பட்ட துரையின் தம்பி நாயகன் மண்ணு என்ற ‘ஆற்றல் மண்’ (உதய் கார்த்திக்). வன்முறை கூடாது என்ற கொள்கைப் பிடிப்புடன், சகலரையும் சகலத்துக்காகவும் கலாய்த்துக்கொண்டு, தானுண்டு தன் காதலுண்டு என்று இருந்தவன். அண்ணன் துரை கொல்லப்பட்ட பிறகு, அவனது நல்லியல்புகளையும், தாதாக்களின் கீழ்த்தரமான சுயநலன்களையும் புரிந்துகொள்ளும் மண்ணு, தொடர்ந்து வன்முறைக்கு எதிரான உணர்வுடன் இருந்தானா? அல்லது ரவுடியிசம் விரித்த சூழ்ச்சிவலையில் விழுந்தானா? என்பது ‘டைனோசர்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1e

இப்படத்தின் நாயகன் மண்ணு என்ற ’ஆற்றல் மண்’ ஆக வருகிறார் உதய் கார்த்திக். முதலில் சாதாரணமாக வந்துபோகும் அவரது கதாபாத்திரம், ஒரு கட்டத்துக்குப் பிறகு படத்தையே தாங்கிப் பிடிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடுகிறது. வன்முறை பக்கம் போக மாட்டேன் என்ற உறுதியுள்ள அவர், காட்சிக்குக் காட்சி கேலியும் கிண்டலும் செய்து, காமெடியாகப் பேசி, கலகலப்பூட்டி, நம்மை வயிறு நோக சிரிக்க வைக்கிறார். அதனால், அவர் அடுத்து எந்தக் காட்சியில் வருவார் என்று பார்வையாளர்களை எதிர்பார்க்க வைத்துவிடுகிறார். அசால்டான அவரது அலப்பரையான நடிப்பு, எதிர்காலத்தில், தமிழ்த்திரையுலகில் ஒரு நல்ல இடத்தை அவருக்கு பெற்றுக் கொடுக்கும் என்று நம்பலாம்.

நாயகனின் காதலி தீபா கதாபாத்திரத்தில் வரும் சாய் பிரியா தேவா, காதலிக்கத் தூண்டும் அழகுடன் வசீகரிக்கிறார். அவரது நடிப்பை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயன்படுத்தியிருக்கலாம்.

தாதா சாலையாராக வரும் மானேக்‌ஷாவும், போட்டிதாதா கிளியப்பனாக வரும் கவின் ஜெய்பாபுவும் சரியான செலக்‌ஷன். இருவரும் போட்டிபோட்டு மிரட்டலாக நடித்து தத்தமது கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.

நாயகனின் அண்ணன் துரையாக வரும் மாறா, ‘உயிரைக்கொடுத்து’ சிறப்பாக நடித்திருக்கிறார். நட்புக்கும், தியாகத்துக்கும் இலக்கணமான தனா கதாபாத்திரத்தில் வரும் ரிஷி, நிறைவான நடிப்பை வழங்கி, ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். அதுபோல் நாயகனின் அம்மா ‘சின்ன குழந்தை’யாக வரும் ஜானகி உள்ளிட்ட சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் வரும் ஏனைய நடிப்புக் கலைஞர்களும் கவனம் பெறுகிறார்கள்.

ரவுடித்தனத்தை மிகையுணர்ச்சியுடன் சொல்லும் வழக்கமான தாதா கதை தான் என்றாலும், படத்தை வித்தியாசப்படுத்தவும், பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவம் தரவும் படத்தை ரொம்ப ஜாலியாக நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குனர் எம்.ஆர்.மாதவன் பாராட்டுக்கு உரியவர். பெரிய அளவில் அறிமுகம் இல்லாத நடிப்புக் கலைஞர்களைக் கொண்டு, விறுவிறுப்பான திரைக்கதை மூலமும், ரசனையான வசனங்கள் மூலமும்  படத்தை சுவாரஸ்யப்படுத்தியிருப்பது சிறப்பு. படத்தின் முதல் பாதி ஓடி நின்றதே தெரியவில்லை. அத்தனை பரபரப்பு, விறுவிறுப்பு. அதே அளவு பரபரப்பும், விறுவிறுப்பும் இரண்டாவது பாதியிலும் இருக்குமாறு கவனமாக கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்க முடியும்.

வடசென்னையை ’ரத்தமும் சதையுமாக’ படம் பிடித்துக் காட்டியிருக்கும் ஜோன்ஸ் வி.ஆனந்த்தின் ஒளிப்பதிவும், போபோ சசியின் மண்வாசனையுடன் கூடிய இசையும் இயக்குனரின் கதை சொல்லலுக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன.

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியின் பொருளை, படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன் பூரணமாக புரிந்துகொள்வது அவரது தொழிலுக்கு நல்லது. எவ்வளவு தான் நல்ல காட்சியாக இருந்தாலும், அதன் நீளத்தைக் குறைத்து கிரிஸ்ப்பாகக் காட்டாமல் ’தேமே’ என்று உட்கார்ந்திருப்பது ஒரு படத்தொகுப்பாளருக்கு அழகு அல்ல.

‘டைனோசர்ஸ்’ – நிறைய ரத்தத் தெறிப்பும், நிறைய நகைச்சுவைத் தெறிப்பும் கொண்ட வித்தியாசமான படம்; பார்த்து ரசிக்கலாம்!