மகாவீர்யர் – விமர்சனம்

மொழி: மலையாளம்

நடிப்பு: நிவின்பாலி, ஆஷிப் அலி, லால், ஷான்வி ஸ்ரீவத்சவா, சித்திக் மற்றும் பலர்

இயக்கம்: அப்ரித் ஷைனி

தயாரிப்பு: பாலி ஜூனியர் பிக்சர்ஸ் & இண்டியன் மூவி மேக்கர்ஸ்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

மலையாளத்தில், தரமான இலக்கியப் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு, உன்னதமான திரைப்படங்கள் எடுக்கப்படுவது அடிக்கடி நிகழ்வது தான். அந்த வகையில் பிரபல மலையாள இலக்கியவாதியான எம்.முகுந்தன், மன்னராட்சி நிகழ்வுகளையும், தற்கால நீதிமன்ற நடைமுறைகளையும் இணைத்து, நாட்டில் நடக்கும் பல்வேறு அவலங்களைத் தோலுரிக்கும் விதமாக எழுதிய புதுமையான கதையை அடிப்படையாகக் கொண்டு, முற்றிலும் வித்தியாசமான, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ‘மகாவீர்யர்’ திரைப்படத்தை படைத்தளித்திருக்கிறார்கள்.

மன்னர் லாலுக்கு விசித்திரமான ஒரு நோய். விக்கல் நோய். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், என்னென்ன மருந்துகள் உட்கொண்டாலும் விக்கல் எடுத்துக்கொண்டே இருப்பது மட்டும் நின்றபாடில்லை. எனில், விக்கலை நிறுத்த என்ன தான் வழி? “நான் இதுவரை கண்டிராத, என்னையே மயக்கத் கூடிய ஒரு பேரழகியைக் கொண்டு வா” என்று தனது அமைச்சரான ஆஷிப் அலிக்கு உத்தரவிடுகிறார் மன்னர். இந்த உத்தரவை தலைவணங்கி ஏற்கும் அமைச்சர், ஒரு பேரழகியைக் கண்டுபிடித்து அழைத்துவர குதிரையில் புறப்படுகிறார்.

0a1a

அபூர்ணாநந்தன் என்ற பெயர் கொண்ட சாமியாராக ஊருக்குள் வருகிறார்  நிவின் பாலி. கோயில் அருகே உட்கார்ந்து அருள்பாலிக்கும் அவர், கோயிலில் இருந்த அனுமார் சிலையைத் திருடிவிட்டார் என்று குற்றம் சாட்டி,  காவல் துறையினர் கைது செய்து அவரை நீதி மன்றத்தில் கொண்டு போய் நிறுத்துகிறார்கள். அது தற்கால நீதிமன்றம்!

அதே நீதிமன்றத்துக்கு மன்னர் லாலும், அமைச்சர் ஆஷிப் அலியும் அழைத்து வரப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுகிறார்கள். மன்னர் லாலின் உத்தரவின்பேரில் பேரழகி ஷான்வி ஸ்ரீவத்சவாவை அமைச்சர் ஆஷிப் அலி கவர்ந்து சென்றார் என்பது குற்றச்சாட்டு.

தன் மீதான வழக்கில் தனக்காக வாதாடி வெற்றிபெறும் சாமியார் நிவின் பாலி, மன்னர் லால் மற்றும் அமைச்சர் ஆஷிப் அலி ஆகியோர் சம்பந்தப்பட்ட விவகாரத்தையும் தீர்த்து வைக்க முன்வருகிறார். அவர் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பது மீதிக்கதை.

நிவின்பாலி, சாமியாராக வருகிறார். சாந்தமான முகத்துடன் அவர் செய்யும் சாகசங்கள் அருமை. அவர் மீதான வழக்கில் அவர் வைக்கும் வாதங்கள் வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. இரண்டாம்பாதியில், கதையின் முக்கிய திருப்புமுனைக் காட்சி அவராலேயே நடக்கிறது. அதை பிரமாதமாகச் செய்து அப்ளாசை அள்ளுகிறார் நிவின் பாலி.

மன்னராக நடித்திருக்கும் லால், அமைச்சராக நடித்திருக்கும் ஆஷிப் அலி, நீதிபதியாக நடித்திருக்கும் சித்திக் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஏழைக் குடும்பத்துப் பேரழகியாக வந்து அனைவரையும் கவர்கிறார் ஷான்வி ஸ்ரீவத்சவா. நீதிமன்றத்தில் அவர் அரை நிர்வாணமாக நிற்கும்போதும், தரையில் உருளும்போதும் அனுதாபத்தைப் பெறுகிறார்.

படத்தின் பெரும்பகுதி நீதிமன்ற அறைக்குள்ளேயே நடந்தாலும் அங்கு நடக்கும் நிகழ்வுகள் நம் விலா நோக சிரிக்க வைக்கின்றன. குறிப்பாக, ஒரு வழக்கில் மனைவிக்குக் கொடுக்க வேண்டிய ஜீவனாம்சப் பணத்தை ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்களாகக் கொடுப்பதும், அதைத் தொடர்ந்துவரும் காட்சிகளும் நகைச்சுவை சரவெடி..

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இக்கதையைத் தேர்ந்தெடுத்துப் படமாக்கிய இயக்குநர் அப்ரித் ஷைனி பாராட்டுக்குரியவர்.

’மகாவீர்யர்’ – வரவேற்கவும், ரசிக்கவும் தக்க புதுமையான முயற்சி!