குற்றமே தண்டனை – விமர்சனம்

’குற்றமே தண்டனை’ படம் பார்த்தேன்.

எளிமையான, அதேநேரம் வலிமையான திரைப்படம்.

ஒரு எதார்த்த க்ரைம் திரில்லர்.

குறைவான கதாபாத்திரங்கள், வெகு இயல்பான நடிப்பு, இம்மி பிசகாமல் முடிவு நோக்கிப் பயணிக்கும் திரைக்கதை, ஆர்ப்பாட்டமில்லாத நுட்பமான ஒளிப்பதிவு… இவையெல்லாம் இப்படத்தை நல்ல அனுபவமாக்குகின்றன.

படத்தின் பெரும்பலமாய் இளையராஜாவின் பின்னனி இசை.

இதேபடம் தமிழில் இல்லாமல் வேறு புரியாத மொழியில் இருந்து, உடன் சப்டைட்டிலும் இருந்தால், உறுதியாய் இதை உலகப் படம் என்று சொல்வோம். தமிழ் படமாச்சே… என்ன சொல்லப் போறாங்களோ ரசிகப் பெருமக்கள் மற்றும் இணையப் பாயும்புலிகள்…

மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள்.

பொன் சுதா

# # #

படத்தின் இயக்குனர் எம்.மணிகண்டனுக்கு முதலில் நன்றி – தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும் போதுமான அறிவுண்டு என்று நம்பி இப்படி ஒரு படம் தந்ததற்காக! மரியாதைகெட்ட உலகமுங்க இது. அதுவும் மலையாளிகள் அளவுக்குக்கூட தமிழர்களுக்கு அறிவில்லையோ என்று, பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் எழுதியெழுதி, வாசித்த எனக்கே tunnel vision வந்துட்டதாக பயந்துபோய் இருந்தேன். நமக்கும் அறிவிருக்கு என்று மதிக்க ஒருவர் களமிறங்கினால் அவருக்கு நன்றி சொல்ல வேண்டுமா, இல்லையா?

‘Tunnel vision’ என்றால் என்னவென்று, இன்று காலையில்தான் எங்கள் டாக்டரம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். இந்தச் சொல்லாடல், dtNEXT(தினத்தந்தி)-ல் ‘குற்றமே தண்டனை’ விமர்சனத்தில் கண்டிருந்தது. அது விமர்சனம்கூட இல்லை; படக்குழுவினரை, பத்திரிகை அலுவலகத்துக்கு வருவித்து, சந்தித்த வாய்ப்பில் எழுதப்பட்டதொரு ‘We’re OK; You’re OK’ வகையான எழுத்தியாப்பு.

ஒரு கொலை நேர்ந்துவிடுகிறது; செய்தது இவரோ அவரோ என்று கொஞ்சூண்டு கதை சொல்லி, சிறந்த நடிகர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டாலே பாதிவெற்றி கிட்டிவிட்டதாகப் பாராட்டி, “இது off-beat படமல்ல; வணிகப் படம்தான்” என்று இயக்குனர் சொன்னதாகப் பதிந்திருந்தார்கள்.

தலைப்பும், ‘குற்றமே தண்டனை’ என்றிருக்கிறதா? கொலை, உண்மையை அறிவதில் குழப்பம் என்றுவேறு தினத்தந்தி சொல்கிறதா? “Rashomon” அகிரா குரோஸவாவுக்கு முதல் மரியாதை செய்துவிட்டாரோ? ஆனால், இதன் இயக்குனர் மிஷ்கின் இல்லையே, ‘காக்கா முட்டை’ மணிகண்டன் ஆயிற்றே?

வயதானதால் மறந்திருக்கும், எதற்கும் இன்னொரு தடவை பார்த்துவிடுவோம் என்று உட்கார்ந்து, காலையில்தானே, ‘ரஷோமோன்’ படத்தை மீண்டும் பார்த்தேன். (எவ்வளவு வீட்டுப் பாடம்!) யப்பா! என்னா வடிவம்! என்னா உள்ளடக்கம்! என்னா நடிப்பு! என்னா விறுவிறுப்பு! 1950களில் வெளிவந்த படம் அது. நான்கூட பிறந்திருக்கவில்லை அப்போது.

அதனளவுக்கு விறுவிறுப்பாக இதனியக்கம் இருக்க வாய்ப்பில்லை என்றுதான் போனேன். ஆனால்…

நாயகனுக்கு tunnel vision என்பதை எடுத்த எடுப்பிலேயே வெளிப்படுத்தி நம்மை பரபரப்பிற்குள் ஆழ்த்திவிடுகிறார். அவனே முக்காலே அரைக்காலே மாகாணிக் குருடு. அவனிடம் வந்து, “அண்ணா, ரோடு கிராஸ் பண்ணி விடுறீங்களா’ண்ணா?” என்று ஒரு குருட்டுப்பெண் வேண்டுவதும், இளையராஜா பின்னணி இசையில் இளகுவதும், ஆஹா!

விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம்… இவர்களையெல்லாம் நகரவாசிகளாக, இவ்வளவு மிடுக்காக இதற்கு முன்பு நான் பார்த்த ஞாபகம் இல்லை. நாசரும் உள்ளார். இவர்களெல்லாம் இருந்தால் அப்புறம் நடிப்புக்கு என்ன குறை? பூஜா தேவார்யா (தேவ+ஆர்யா) கூட கச்சிதம். தனக்கு வேலை போனதைச் சொல்கிற காட்சியில் அவரது முகபாவம், அளவோடு. அது போதும்.

“இனிமேல் நீ இங்கே வராதே” என்று நாசர், விதார்த்திடம் வார்த்தையால் கதவடைக்கிற கட்டத்தில், நம்மைப் போல் அறவாழிகளுக்கு, அது சரிதான் என்று தோன்றும். ஆனால் அதுதான் நம் உள்ளுணர்வை விழிப்பூட்டும் தருணம் என்று உணர்ந்திருக்க மாட்டோம். இறுதியில் வந்து, உள்ளுணர்வாகவே தொடுப்புக் கூட்டும் அது. விதார்த்தின் கேரக்டரைசேஷன், அவரது நடிப்பும், மிக அருமை!

ஒரு வாயொடுவாய் முத்தம், திரைபோட்டு, அதாவது ஒரு தலையை இன்னொரு தலை மறைத்தாற்போல் காட்டுவது வழக்கமாயிருந்த சிவாஜி கணேசன் காலத்திலும் அவர், வெளிப்பட்டு, தன் உதடுகளைத் துடைத்தால்தான் நமக்குப் புரியும். இப்போதும், மர்மத்தை அவிழ்த்தால்தான் புரியும் என்கிற மதிப்பீடு வசனகர்த்தாக்களின் வன்முறை விளக்கங்களால் விளங்கும். ஆனால் எம்.மணிகண்டன், கடைசியில், யூகித்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிடுகிறார்.

“ரஷோமோன்” படத்தின் கடைசிக் காட்சியில் அந்தத் துறவி, இன்னும் இந்த உலகில் மனிதாபிமானம் இருக்கிறது என்று காண்பித்ததற்காக விறகுவெட்டிக்கு நன்றி சொல்வார், இல்லையா? அப்படி இன்னும் தமிழ்நாட்டில் அறிவிருக்கிறது என்று நம்பியதற்காக மணிகண்டனுக்கு மீண்டும் நன்றி!

“ரஷோமோன்” வேறு வகை; “குற்றமே தண்டனை” வேறு.

– ராஜா சுந்தரராஜன்