சத்தமின்றி முத்தம் தா – விமர்சனம்

நடிப்பு: ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஷ் பேராடி, வியான், நிஹாரிகா மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ராஜ்தேவ்

ஒளிப்பதிவு: யுவராஜ்.எம்

படத்தொகுப்பு: ஜி.மதன்

இசை: ஜுபின்

தயாரிப்பு: ’செலிபிரைட்  புரொடக்ஷன்ஸ்’ கார்த்திகேயன்.எஸ்

பத்திரிகை தொடர்பு: மணவை புவன்

படத்தின் தலைப்பு கொஞ்சம் கிளுகிளுப்பாக இருந்தாலும், படத்தின் கதை அத்தனை கிளுகிளுப்பானது இல்லை. ‘தலையில் அடிபட்டு, கடந்த கால நிகழ்வுகளை மறந்துவிட்ட ஒரு பெண்; அவரை தன் மனைவி என சொந்தம் கொண்டாடும் இரண்டு ஆண்கள்’ என்ற முடிச்சை மையமாகக் கொண்டு, சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டிருக்கிறது ‘சத்தமின்றி முத்தம் தா’ திரைப்படம்.

0a1mஇரவு. முகமூடி அணிந்த ஒரு மர்ம உருவம் கையில் ஆயுதத்துடன் துரத்திக்கொண்டு வர, அச்சத்தில் நடுங்கியபடி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி சாலையில் ஓடுகிறார் நாயகி சந்தியா (பிரியங்கா திம்மேஷ்). அப்போது எதிரே வந்த கார் மோதி, தூக்கி வீசப்பட்டு, தலையில் அடிபட்டு, ரத்தம் வழிய சாலையில் மயங்கிக் கிடக்கிறார். அந்த வழியே இன்னொரு காரில் வந்த நாயகன் (ஸ்ரீகாந்த்), ரத்த வெள்ளத்தில் கிடக்கும் சந்தியாவைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ‘சந்தியா…” என்றபடி அவரைத் தூக்கிக் கொண்டுபோய் மருத்துவனையில் சேர்க்கிறார். தன் பெயர் ரகு என்றும், சந்தியாவின் கணவர் என்றும் மருத்துவமனையில் சொல்லுகிறார் நாயகன்.

ஐந்தாறு கொலைகள் செய்திருக்கும் அடையாளம் தெரியாத மர்மக் கொலைகாரன் சம்பந்தப்பட்ட வழக்குகளை புலனாய்வு செய்துவரும் அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்வர்டு (ஹரிஷ் பேராடி), சந்தியா சந்தித்த விபத்து குறித்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு வந்த அவரது கணவர் ரகுவிடம் விசாரணை நடத்த முடிவு செய்கிறார். ஆனால் அவரது பார்வையில் படாமல் அவரைத் தவிர்த்துவிடுகிறார் நாயகன்.

பல நாட்கள் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பின் சந்தியா உயிர் பிழைத்தாலும், மூளையில் ஏற்பட்ட உள்காயம் காரணமாக கடந்தகால பழைய நினைவுகளை அடியோடு மறந்துவிடுகிறார். டிஸ்சார்ஜ் செய்தபின் அவரை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் நாயகன்.

கொலை செய்யும் எண்ணத்துடன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு மர்ம மனிதர்களை, சந்தியாவின் கண் எதிரே குத்திக் கொலை செய்து, வீட்டுத் தோட்டத்தில் குழி தோண்டி புதைக்கிறார் நாயகன். இதை பார்த்த சந்தியா பயத்தில் நடுங்குகிறார். இப்படிப்பட்ட கொலைகாரன் என் கணவனாக இருக்க முடியாது என நினைக்கிறார். ஆனால், பள்ளிக்கூட குரூப் போட்டோவில் தானும் நாயகனும் இருப்பதைப் பார்த்தவுடன், அது சம்பந்தமான பழைய ஞாபகம் சந்தியாவுக்கு வருகிறது. பள்ளிப்பருவத்தில் தாங்கள் இருவரும் காதலித்தது நினைவுக்கு வர, உற்சாகமாகிறார். “நீ விக்னேஷா? ரகு என பெயர் மாற்றிக் கொண்டாயா? நாம் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டோமா?” என்று ஆனந்தப் பரவசம் அடைகிறார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள இன்னொரு போலீஸ் நிலையத்துக்கு, கையில் சந்தியாவின் புகைப்படத்துடன் வருகிறார் ஓர் இளைஞர் (வியான்). அங்குள்ள போலீஸ் இன்ஸ்பெக்டரிடம், “என் பெயர் ரகு. இவர் என மனைவி சந்தியா. சில நாட்களுக்கு முன்பிருந்து இவரைக் காணவில்லை” என புகார் கொடுக்கிறார்.

உண்மையில், சந்தியாவின் நிஜ கணவர் யார்? போலி யார்? போலி ஏன் சந்தியாவின் கணவராக நடிக்கிறார்? பின்னணி என்ன? போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்வர்டு தேடும் கொலைகாரன் நாயகன் தான் என தெரிகிறது. அவர் ஏன் கொலைகள் செய்தார்? அவரை இன்ஸ்பெக்டர் எட்வார்டு தேடிப்பிடித்து கைது செய்தாரா? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘சத்தமின்றி முத்தம் தா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக, நாயகி சந்தியாவின் கணவர் என சொந்தம் கொண்டாடுபவராக, கூலிக்கு கொலை செய்தாலும் நல்லவர்கள் மீது கருணை காட்டுபவராக நடித்திருக்கிறார் ஶ்ரீகாந்த். ஓர் இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றியிருக்கும் அவர், பெரும்பாலான காட்சிகளில் சாந்த சொரூபியாக, ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதே நேரம், ஆக்‌ஷன் காட்சிகளில் ஆக்ரோஷமாக அதிரடியில் இறங்கி, நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

நாயகி சந்தியாவாக நடித்திருக்கிறார் பிரியங்கா திம்மேஷ். விபத்தில் அடிபட்டு பழைய சம்பவங்களை மறந்துவிட்டு, எது உண்மை? எது பொய்? என புரியாமல் குழம்பி, ’எடுப்பார் கைப்பிள்ளை’ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து, அனுதாபத்தை அள்ளுகிறார். பயம், பதட்டம், கோபம், ரொமான்ஸ் என சகல உணர்வுகளையும் துல்லியமாக வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

சந்தியாவின் கணவர் என  சொந்தம் கொண்டாடும் இன்னொரு நபராக நடித்திருக்கிறார் வியான். இவரது கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருந்துள்ள போதிலும், இவரது நடிப்பில் தடுமாற்றம் தெரிகிறது. இன்னும் பயிற்சி தேவை.

போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்வர்டாக நடித்திருக்கிறார் ஹரிஷ் பெராடி. எப்போது வில்லனாக மாறுவாரோ என்று பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோதிலும், அப்படி எல்லாம் எதுவும் செய்யாமல், நல்ல போலீஸ் அதிகாரியாகவே படம் முழுக்க வந்து தனது அனுபவ நடிப்பை வழங்கியிருக்கிறார்.

ஷீலா என்ற கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நிஹாரிகா. இளம் பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக இவரது கதாபாத்திரத்தில் தேவைக்கும் அதிகமாகவே கவர்ச்சி திணிக்கப்பட்டிருக்கிறது.

சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் ஜானரில், ஆள்மாறாட்ட அம்சத்தை இணைத்து, சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் ராஜ்தேவ். கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிப்புக் கலைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களைத் திறம்பட வேலை வாங்கியிருக்கிறார். திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு, காட்சிகளில் உள்ள செயற்கைத் தன்மையை நீக்கியிருந்தால் இன்னும் கூடுதலாக படத்தை ரசித்திருக்கலாம்.

ஜுபின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓ.கே ரகம். குறிப்பாக, ‘செம்பரம்பாக்கம் ஏரியளவு” பாடலில் கிக் அதிகம். இவரது பின்னணி இசை படத்திற்கு பலம்.

கதைக்குத் தேவையான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவராஜ்.

‘சத்தமின்றி முத்தம் தா’ – திடீர் திடீரென வரும் திருப்பங்களுக்காக பார்த்து ரசிக்கலாம்!