ஏ1 – விமர்சனம்

காமெடியனாக இருந்து கதாநாயகனாக மாறியபின் எந்த ரூட்டில் பயணிப்பது? காமெடி ரூட்டிலா? அடிதடி ஆக்சன் ரூட்டிலா? என்று தடுமாறிக்கொண்டிருந்த சந்தானத்துக்கு, ‘ஏ1’ படத்தின் வெற்றியும், இப்படத்துக்கு கிடைக்கும் வரவேற்பும் நிச்சயம் தெளிவை ஏற்படுத்தும். காமெடி நாயகன் ரூட் என்பது தான் அந்த தெளிவாக இருக்க முடியும். அந்த அளவுக்கு ‘ஏ1’ திரைப்படம் காட்சிக்குக் காட்சி வாய்விட்டு சிரிக்க வைத்து ரசிகர்களின் அப்ளாஸை அள்ளுகிறது.

’தளபதி’ படத்தில் வரும் ஷோபனா வீரமிக்க ரஜினியை காதலிப்பதைப் போல, பார்ப்பன சாதியைச் சேர்ந்த நாயகி திவ்யா (தாரா அலிஷா), தன் சாதியைச் சேர்ந்த வீரமிக்க ஒருவனைக் கண்டுபிடித்து காதலித்து கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறாள். அவளை பார்ப்பன போலீஸ்காரன் ஒருவன் காதலிப்பதாகச் சொல்ல, அவனுக்கு ’ரிட்டயர்டு ரவுடி’களோடு மோதும் அடிதடி டெஸ்ட் வைக்கிறாள் திவ்யா. அந்த போலீஸ்காரன் பயந்து ஓடிவிட, நெற்றியில் நாம்ம் போட்ட நாயகன் சரவணன் (சந்தானம்) அறிமுகமாகி ரவுடிகளைப் பின்னியெடுக்கிறான். உடனே அவனுக்கு முத்தம் கொடுத்து தன் காதலைச் சொல்கிறாள் திவ்யா. அவளது காதலை சரவணனும் ஏற்றுக்கொள்கிறான். ஆனால் அவன் தன் சாதிக்காரன் அல்ல, கடலோர குப்பத்துப் பையன் என தெரிந்ததும் காதலை திவ்யா முறித்துக்கொள்கிறாள். அதன்பின் அவளது தந்தை அனந்தராமன் (யாட்டின் கார்யேகர்) நெஞ்சுவலியால் மயங்கி விழ, அவரை சரவணன் மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்ற, இதை அறிந்த திவ்யா சரவணனை மீண்டும் காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஆனால், இவர்களது காதலை நாயகியின் தந்தை அனந்தராமன் ஏற்க மறுக்கிறார். விரக்தியில் நண்பர்களோடு சேர்ந்து அளவுக்கதிகமாக மது அருந்தும் சரவணன், அனந்தராமனை கொன்றாவது காதலியை திருமணம் செய்ய வேண்டும் என போதையில் புலம்புகிறான். அவனது புலம்பலை / விருப்பத்தை நிறைவேற்றுவதாக நினைத்துக்கொண்டு நண்பர்கள் அனந்தராமனை கட்த்திக் கொண்டுபோய் விஷத்தை வாய்க்குள் ஊற்றி குடிக்க வைத்து கொன்றுவிடுகிறார்கள். இந்த கொலைப் பழியிலிருந்து சரவணன் மீண்டானா? காதலியை கரம் பிடித்தானா? என்பது மீதிக்கதை.

j4

சரவணனாக வரும் நாயகன் சந்தானம், தனது டைமிங் ஒன்லைன் காமெடியால் ரசிகர்களை விலா நோக சிரிக்க வைத்திருக்கிறார். தன்னுடைய நண்பர்களாக வரும் மாறன், தங்கதுரை, கிங்ஸ்லி ஆகியோருக்கு ஸ்கிரீன் ஸ்பேஸ் தந்து, அதிக காட்சிகளில் நடிக்கவும் சிரிக்க வைக்கவும் வாய்ப்பு கொடுத்து, காமெடியில் ஸ்கோர் செய்யச் செய்து, படம் சுவாரஸ்யமாக நகர உறுதுணையாக இருந்திருக்கிறார்.

திவ்யாவாக வரும் அறிமுக நாயகி தாரா அலிஷா அழகாகவும், பார்ப்பன இளம்பெண் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாகவும் இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை திறம்பட பயன்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகனின் அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன், பக்கத்து வீட்டுக்கார்ராக வரும் மனோகர், போலீஸ் அதிகாரியாக வரும் சாய்குமார், ’பிளாக் மெயில் தாதா’வாக வரும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் தங்கள் பங்குக்கு நகைச்சுவையை அள்ளி இறைத்து கூடுதல் காமெடிக்கு உத்திரவாதம் அளித்திருக்கிறார்கள்.

சந்தானம் படத்துக்கு வரும் ரசிகர்கள் அவரிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை 100 சதவிகிதம் அறிந்து வைத்திருக்கிறார், எழுதி இயக்கியிருக்கும் ஜான்சன்.கே. அதனால் தான் மெல்லிய கதையைக் கையிலெடுத்து, அதில் காட்சிக்குக் காட்சி காமெடி கலந்து ரசிக்கத் தக்க வெற்றிப்படமாக அவரால் கொடுக்க முடிந்திருக்கிறது. அவருக்கு நமது பாராட்டுகள்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் அனைத்துப் பாடல்களும் ரசிக்கும் வகையில் இருக்கின்றன. குறிப்பாக, ‘மாலை நேர’ பாடல் மனதில் நிற்கிறது.

இப்படத்தை இரண்டு மணி நேரப் படமாக குறைத்து சுவாரஸ்யத்தை அதிகப்படுத்திய படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் பாராட்டுக்கு உரியவர்.

‘ஏ1’ –  காமெடி பிரியர்களுக்கு செம விருந்து!