கொளஞ்சி – விமர்சனம்

சமுத்திரகனி, சங்கவி தம்பதியின் மகன் கிருபாகரன் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனுக்கு அந்த வயதுக்கே உரிய குறும்புத்தனங்கள் அதிகமாக இருக்கிறது. சமுத்திரகனி அவனை கண்டிக்கிறார். இதனால் அப்பா மீது கோபமும் வெறுப்பும் உண்டாகிறது.

அந்த வெறுப்பு ஒரு பக்கம் அதிகமாகிக்கொண்டே போக இன்னொரு பக்கம் ஒரு எதிர்பாராத சம்பவத்தின் மூலம் சமுத்திரகனி, சங்கவிக்கு இடையே மோதல் ஏற்பட்டு பிரிகின்றனர். அம்மாவுடன் கிருபாகரன் வந்துவிடுகிறார். சமுத்திரகனியின் பாசத்தை கிருபாகரன் புரிந்துகொண்டாரா? தாய், தந்தை இருவரும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

மிக எளிமையான கதையை அழகான கிராமத்து பின்னணியில் காதல், காமெடி கலந்து உணர்வுபூர்வமாக தனராம் சரவணன் இயக்கி இருக்கிறார். அவருக்கு தயாரிப்பிலும் வசனத்திலும் மூடர் கூடம் எம்.நவீன் துணை நின்று இருக்கிறார். சமுத்திரகனி மூலம் சமூகத்துக்கு தேவையான அதிரடி வசனங்களை பேச வைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகள்.

சமுத்திரகனிக்காகவே தயார் செய்த கதாபாத்திரம் போல பாத்திரத்துடன் ஒன்றி போகிறார். மகனை கண்டிக்கும்போதும் ஊரில் இருக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகளை சாட்டையடி வசனங்கள் மூலம் எதிர்க்கும்போதும் பொறுப்புள்ள மனிதராக மனதில் பதிகிறார். சமுத்திரகனியின் மகனாக வரும் கிருபாகரன் தான் படத்தின் நாயகன். சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். அவர் செய்யும் சேட்டைத்தனங்களும் ரசிக்க வைக்கின்றன.

சங்கவி தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். இனி அவருக்கு அம்மா, அக்கா வேடங்கள் நிறைய வரும். படத்தின் இளம் ஜோடியான ராஜாஜி, சைனா நர்வார் இருவரும் இளமை, குறும்புக்கு பொறுப்பு எடுத்துள்ளனர். இவர்களின் காதலை வைத்து நசாத் அடிக்கும் ஒருவரி காமெடிகளால் தியேட்டர் கலகலக்கிறது.

பிச்சைக்காரன்’ மூர்த்தி, ருஜீல் கிருஷ்ணா, ரஜின், நாடோடிகள் கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா என மற்றவர்களும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்து இருக்கிறார்கள். விஜயன் முனுசாமியின் ஒளிப்பதிவில் கிராமத்து வீடுகளும் ஆறும் அந்த ஒற்றைப்பாறையும் கதையோடு ஒன்ற வைக்கிறது. பாடல்களில் கமர்சியல் தூக்கலாக இருந்தாலும் பின்னணி இசையில் நம்மை நடராஜன் சங்கரன் கவர்கிறார். அத்தியப்பன் சிவாவின் படத்தொகுப்பு படத்தை சுவாரசியமாக நகர்த்துகிறது.

தந்தை-மகன் உறவில் பருவ வயதில் ஏற்படும் சிக்கல்கள் தான் கதைக்களம். எளிய கதையில் ஆங்காங்கே சுவாரசியமான வசனங்கள் மூலம் சிரிக்கவும் கைதட்டவும் வைக்கிறார்கள். ஆனால் பலமான வில்லனோ திருப்பமோ இல்லாத திரைக்கதை என்பதால் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடிவது பலவீனம். அதேபோல் காதல் காட்சிகள் திணிக்கப்பட்டு இருப்பதை போன்ற உணர்வும் ஏற்படுகிறது.

சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் நல்ல கருத்தை குடும்பத்துடன் பார்க்கும் வகையில் பொழுதுபோக்காக சொன்ன விதத்தில் கொளஞ்சி பாராட்டுகளை பெறுகிறான். படம் பார்ப்பவர்கள் தங்கள் அப்பாவுடனும் மகனுடனும் படத்தின் கதாபாத்திரங்களை பிணைத்துக் கொள்வார்கள்.

’கொளஞ்சி’ – பாசப் பிணைப்பு.

Read previous post:
a1
ஏ1 – விமர்சனம்

காமெடியனாக இருந்து கதாநாயகனாக மாறியபின் எந்த ரூட்டில் பயணிப்பது? காமெடி ரூட்டிலா? அடிதடி ஆக்சன் ரூட்டிலா? என்று தடுமாறிக்கொண்டிருந்த சந்தானத்துக்கு, ‘ஏ1’ படத்தின் வெற்றியும், இப்படத்துக்கு கிடைக்கும்

Close