பிஸ்கோத் – விமர்சனம்

நடிகர்கள் : சந்தானம், மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மனோகர்

நடிகைகள் : தாரா அலிஷா பெர்ரி, ஸ்வாதி முப்பாலா, சௌகார் ஜானகி

இசை : ரதன்

ஒளிப்பதிவு : சண்முகசுந்தரம்

தயாரிப்பு : மசாலா பிக்ஸ் & எம்.கே.ஆர்.பி. புரொடக்சன்ஸ்

இயக்கம் : ஆர்.கண்ணன்

வெளியீடு : ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்

இப்படத்தின் கதையில் பிஸ்கட் கம்பெனி முக்கிய அங்கம் வகிப்பதால் இப்படத்துக்கு ‘பிஸ்கோத்’ என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

 பிஸ்கட் கம்பனி ஒன்றை சிறிய அளவில் நடத்திவருகிறார் தர்மராஜன் (ஆடுகளம் நரேன்). மனைவியை இழந்த அவருக்கு ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் பெயர் ராஜா (சந்தானம்). பிஸ்கட்டுகளை புதிய வடிவத்தில் தயாரித்தால் தான் கம்பெனியை முன்னேற்ற முடியும் என்று மகன் ராஜா யோசனை கூற, அதை ஏற்று தர்மராஜன் செயல்படுத்துகிறார். கம்பெனி வளருகிறது. சிறுவன் ராஜாவும் வளருகிறான்.

ஒருநாள் தர்மராஜன் திடீரென மாரடைப்பால் இறந்துவிடுகிறார். அவரது பிஸ்கட் கம்பெனியை அவரது நண்பர் நரசிம்மன் (ஆனந்தராஜ்) அபகரித்துக்கொள்கிறார். அதே கம்பனியில் ஒரு சாதாரண தொழிலாளியாக பணியாற்றுகிறான் ராஜா.

அந்த ஊரில் இருக்கும் முதியோர் இல்லத்திற்கு நாள் தவறாமல் செல்லும் ராஜா, அங்கே இருக்கும் முதியவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கிறான். ஒருநாள் அந்த இல்லத்தின் காப்பாளர் வெளியூர் சென்றுவிட, இரவில் பாதுகாப்புக்காக அங்கே தங்குகிறான் ராஜா. அந்த இல்லத்துக்கு புதிதாக ஒரு பாட்டி (செளகார் ஜானகி) வருகிறார். அவர் யாரிடமும் பேசாமல் இருக்கிறார். ஆனால் ராஜாவிடம் மட்டும் பேசுகிறார். அவர் சொல்லும் ஒரு கதை மறுநாள் அப்படியே ராஜாவின் வாழ்க்கையில் நடக்கிறது. இது பூர்வஜென்மக் கதையாகவும் ராஜாவுக்குத் தெரிய வருகிறது. அதனால் அடுத்தடுத்து பாட்டியை கதை சொல்லச் சொல்லி, அவை நடக்கிறதா என்று பார்க்கிறான் ராஜா. அவை நிஜத்தில் நடப்பதால் பாட்டி மீது மிகுந்த பாசத்தைக் கொட்டுகிறான்.

இந்த நேரத்தில் 500 கோடி ரூபாய் செலவில் மிகப் பெரிய பிஸ்கட் தொழிற்சாலை கட்ட முடிவெடுக்கிறார் நரசிம்மன். அதற்கு அவர் தேர்வு செய்த இடம் முதியோர் இல்லம். அந்த முதியோர் இல்லத்தைக் காலி செய்ய வைக்கும் பொறுப்பு ராஜாவிடம் வருகிறது. அவன் என்ன செய்தான்? முதியோர் இல்லம் இடிக்கப்பட்டதா? பிஸ்கட் கம்பெனி ராஜாவின் கைக்கு வந்த்தா? என்பதே மீதிக்கதை.

0a1b

ஆடம் ஷாங்க்மேன் இயக்கத்தில் ஆடம் சாண்ட்லர் நடிப்பில் 2008-ல் வெளிவந்த படம் ‘பெட்டைம் ஸ்டோரீஸ்’. அந்தப் படத்தைத் தழுவி, நிறைய மாற்றங்கள் செய்து எடுக்கப்பட்ட படம்தான் இந்த ‘பிஸ்கோத்’. பெட்டைம் ஸ்டோரீஸில் பிஸ்கட் கம்பனிக்குப் பதிலாக ஹோட்டல் என்று இருக்கும். பாட்டிக்கு பதிலாக குழந்தைகள் கதை சொல்வார்கள்.

எனினும் இது சுவாரஸ்யமான கதை என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, பாட்டி சொல்லும் கதையில் வரும் பாத்திரங்களில் நிகழ்கால கதையில் வரும் பாத்திரங்களே நடிப்பதால், அட்டகாசமாக இருக்கிறது. 12ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இருந்தாலும், ரோமாபுரியில் நடக்கும் கதையாக இருந்தாலும் அவற்றிலும் மொட்டை ராஜேந்திரனும் லொள்ளுசபா மனோகரும் வந்துவிடுவது, அந்தப் பகுதிகள் கலகலப்பாக நகர உதவுகிறது.

முதல் பாதி படம் ஓடுவதே தெரியவில்லை. விறுவிறுப்பாகவும் படுவேகமாகவும் நகர்கிறது படம். ஆனால், இரண்டாவது பாதி அத்தனை விறுவிறுப்பாக இல்லாததால் படம் முடியும்போது சுமாரான படத்தையே பார்த்த எண்ணம் ஏற்படுகிறது.

ராஜாவாக வரும் சந்தானத்திற்கு இந்தப் படம் நல்ல தீனி. மூன்று, நான்கு வேடங்களில் கலக்கியிருக்கிறார். சந்தானம் – மொட்டை ராஜேந்திரன் – மனோகர் கூட்டணி படம் முழுவதையும் கலகலப்பாகவே நகர்த்திச் செல்கிறது.

சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும்  நடித்துள்ளனர். தாரா அலிஷா பெர்ரி ’ஏ1’ படத்தில் நாயகியாக வந்தவர். முதல் பாதியில் பெரிய அளவில் காட்சிகள் இல்லை. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் இருக்கின்றன. அதைத் தவிர இந்தப் படத்தில் அவருக்கு செய்வதற்கு ஏதும் இல்லை.

பாட்டியாக நடித்திருக்கும் சௌகார் ஜானகிக்கு இது 400வது படம். உற்சாகமாகச் செய்திருக்கிறார்.

பல படங்களின் சாயல்களை வைத்து காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் கண்ணன்.

படத்தில் வரும் பல்வேறு காலகட்டத்திற்கு ஏற்ப பின்னணி இசையிலும் வித்தியாசப்படுத்தியிருக்கிறார் ரதன்.

 சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

’பிஸ்கோத்’ – மனம்விட்டு சிரித்துவிட்டு வரலாம்.

Read previous post:
0a1a
இணையத்தை தெறிக்க வைக்கும் ‘மாஸ்டர்’ டீசர்

நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா

Close