கசட தபற – விமர்சனம்

நடிப்பு: சந்தீப் கிஷன், சாந்தனு, பிரேம்ஜி, பிரியா பவானி சங்கர், ரெஜினா, விஜயலட்சுமி

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்

இயக்கம்: சிம்பு தேவன்

தயாரிப்பு: வெங்கட்பிரபு

ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘கசட தபற’.

கவசம், சதியாடல், தப்பாட்டம், பந்தயம், அறம்பற்ற, அக்கற என்ற 6 கதைகளை அறிவியல் கோட்பாடுகளை கொண்டு ஒரே கதையாக இயக்கி இருக்கிறார் சிம்பு தேவன்.

தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் பிரேம்ஜியின் உதவும் மனப்பான்மையை பார்த்து காதலிக்கிறார் ரெஜினா. இருவரும் காதலித்து வரும் நிலையில், ரெஜினாவின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேம்ஜி மீது திருட்டு பட்டம் கட்டி அடியாட்களை வைத்து கடத்திவிடுகிறார். கவசம் என்ற தலைப்புடன் தொடங்கும் இந்த கதை, மற்ற 5 கதைகளுடன் சேர்ந்து பயணிக்கிறது.

இறுதியில் பிரேம்ஜி என்ன ஆனார்? பிரேம்ஜி, ரெஜினாவின் காதல் ஒன்று சேர்ந்ததா? மற்ற கதைகளின் கதாபாத்திரங்கள் எப்படி இவர்கள் வாழ்க்கையில் பயணிக்கிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நமக்கு நன்கு தெரிந்த பல முகங்கள் நடித்திருக்கிறார்கள். கவசம் கதையில் வரும் பிரேம்ஜி வெகுளித்தனமான நடிப்பையும், ரெஜினா அழகான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

யூகி சேது அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

சதியாடல் கதையில், மகன் மீது அதிக பாசம் வைத்து இருக்கும் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார் சம்பத். மகனாக வரும் சாந்தனுவின் நடிப்பு அசத்தல். செண்ட்ராயன் கவனிக்க வைத்திருக்கிறார்.

தப்பாட்டம் கதையில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வரும் சந்தீப் கிஷன், மேல் அதிகாரியின் அழுத்தம், குடும்பத்தினரின் அழுத்தம் என்று நடிப்பில் அசத்தி இருக்கிறார். கணவர் மீது அக்கறை கொண்டவராக வரும் பிரியா பவானி சங்கரின் நடிப்பு அருமை.

பந்தயம் கதையில் ஹரீஷ் கல்யாண் அலட்டல் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அறம்பற்ற கதையில் விஜயலட்சுமியும், அக்கற கதையில் வெங்கட்பிரபுவும் நடிப்பில் பளிச்சிடுகிறார்கள்

.இந்த கதையை திரைக்கதையாக உருவாக்க கடினமான உழைப்பை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சிம்பு தேவன். தெளிவான திரைக்கதை படத்திற்கு பெரிய பலம். பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அனைத்தும் மனதில் பதியும் அளவிற்கு உருவாக்கி இருக்கிறார்.
மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் ஆகிய 6 பேர் படத்தொகுப்பாளர்களாக பணியாற்றி உள்ளனர். ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகிய ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்து உள்ளனர். விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, பாலசுப்ரமணியம், எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன் ஆகியோர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். இவர்களின் முழு பங்களிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘கசட தபற’ சிறப்பு.