சின்னஞ்சிறு கிளியே – விமர்சனம்

நடிப்பு: செந்தில்நாதன், சாண்ட்ரா நாயர், பேபி பதிவத்தினி

இயக்கம்: சபரிநாதன் முத்துப்பாண்டியன்

தயாரிப்பு: செண்பா கிரியேசன்ஸ் சார்பில் செந்தில்நாதன்

உலகம் முழுவதும் பல்வேறு திரைவிழாக்களில் கலந்துகொண்டு, 24 சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள திரைப்படம் ‘சின்னஞ்சிறு கிளியே’. சந்தேகத்துக்கு இடமின்றி, விருதுக்கு உரிய அருமையான கண்டெண்டை கொண்டிருப்பது தான் இப்படக்கதையின் சிறப்பு.

கதையின் நாயகன் மாணிக்கம் (செந்தில்நாதன்) ஆங்கில மருத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர். நமது பாரம்பரிய இயற்கை வைத்தியத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். இவர் தனது கிராமத்தில் இயற்கை உணவகம் நடத்திவருகிறார்.

இவருக்கும் அதே ஊரில் வசிக்கும் நாயகி தமிழ்ச்செல்விக்கும் (சாண்ட்ரா நாயர்) காதல் மலருகிறது. திருமணம் செய்துகொள்கிறார்கள். தமிழ்ச்செல்வி கர்ப்பவதி ஆகிறார். பிரசவத்தின்போது ஒரு பெண் குழந்தையை பிரசவித்துவிட்டு இறந்துபோகிறார்.

0a1e

தாயில்லாப் பிள்ளையான தன் மகளுக்கு (பதிவத்தினி) ‘சிட்டுக்குருவி’ என பெயர் சூட்டி, அதிக பாசத்தைக் கொட்டி வளர்த்து வருகிறார் மாணிக்கம். சிட்டு ஆறு வயதில் இருக்கும்போது திடீரென்று காணாமல் போய்விடுகிறாள். பதறி தேடி அலையும் மாணிக்கம், சிட்டு பலத்த காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாக முட்புதருக்குள் கிடப்பதைப் பார்த்து அவளைத் தூக்கிவந்து கதறுகிறார்.

சிட்டு உயிர் பிழைத்தாளா? அவளைக் கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பதை சற்றும் எதிர்பாராத புதிய திசையில் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறது மீதிக்கதை.

0a1d

அப்பா – மகள் பாசப் பின்னணியில் ஆங்கில மருத்துவத்தின் விபரீதத்தையும், இயற்கை மருத்துவத்தின் மகத்துவத்தையும் இப்படத்தில் சித்தரித்துக் காட்டியிருக்கிறார்கள். கொள்ளை லாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மருத்துவத்துறைக்குள் புகுந்திருக்கும் கார்ப்பரேட் வணிகத்தை தோலுரித்து அப்பட்டமாக அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். இந்த காரணங்களால் இந்த திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.

கதை நாயகன் மாணிக்கம் பாத்திரத்தில் தயாரிப்பாளர் செந்தில்நாதன் நடித்துள்ளார்.சில காட்சிகளில் அன்பு, கோபம், சோகம் போன்ற உணர்ச்சிகளை துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார். சில காட்சிகளில் அவரது அனுபவமின்மை துறுத்தலாகத் தெரிகிறது. கூடுதல் பயிற்சி அவசியம்.

நாயகி தமிழ்ச்செல்வி பாத்திரத்தில் வரும் சாண்ட்ரா நாயர் அழகாக இருக்கிறார். அளவாக அருமையாக நடித்திருக்கிறார்.

சிட்டுக்குருவியாக வரும் குழந்தை நட்சத்திரமான பதிவத்தினி மிகவும் இயல்பாக நடித்து நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறாள். இந்த பிஞ்சுக்குழந்தைக்கு எதிராக இத்தனை பெரிய கொடுமையா என நினைக்கையில் மனம் கனக்கிறது.

படத்தின் முதல் பாதியில் கதையிலும், இரண்டாம் பாதியில் திரைக்கதையிலும், பரவலாக நடிப்பு மற்றும் மேக்கிங்கிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தால் இந்த படம் இன்னும் அதிக பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கும்.

‘சின்னஞ்சிறு கிளியே’ – கருத்தாழமிக்க படம்!