டி ப்ளாக் – விமர்சனம்

நடிப்பு: அருள்நிதி, அவந்திகா மிஸ்ரா, சரண்தீப், தலைவாசல் விஜய், உமா ரியாஸ், ரமேஷ் கண்ணா, ஆதித்யா கதிர், விஜய்குமார் ராஜேந்திரன் மற்றும் பலர்

இயக்கம்: விஜய்குமார் ராஜேந்திரன்

இசை: ரோன் ஈத்தன் யோகன்

ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

அருள்நிதி நடிப்பில் இதற்குமுன் வெளியான கிரைம் த்ரில்லர் படங்களும், ஹாரர் த்ரில்லர் படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அது கொடுத்த நம்பிக்கையில், ‘டி ப்ளாக்’ படத்தை சைக்கோ கிரைம் த்ரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். ‘எருமைச்சாணி’ எனும் யூடியூப் சேனலில் நடித்து பிரபலமான விஜய்குமார் ராஜேந்திரன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.

ஓர் இளம்பெண் சிறை பிடிக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, கதறும் காட்சியுடன் படம் தொடங்குகிறது.

கதை 2006-ல் நடப்பதாக காட்டப்படுகிறது. கோவை மாவட்டத்தில், ஓர் அடர்ந்த காட்டுக்குள் மாணவர்களும், மாணவிகளும் தங்கிப் படிக்கும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இருக்கிறது. இக்கல்லூரியில் முதலாமாண்டு படிப்பில் சேர வரும் மாணவராக நாயகன் அருள்நிதி அறிமுகமாகிறார்.

கல்லூரியைச் சுற்றியுள்ள அடர்ந்த காட்டுக்குள் சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிப்பதால், யாரும் மொட்டை மாடிக்குப் போகக் கூடாது; மாலை 6 மணிக்கு மேல் கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியே செல்லக் கூடாது; இரவு 9 மணிக்கு மேல் எந்த அறையிலும் விளக்கு எரியக் கூடாது என்பன போன்ற கடும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது கல்லூரி நிர்வாகம்.

ஓரிரவு. ‘டி பிளாக்’ எனப்படும் கேர்ள்ஸ் ஹாஸ்டலின் மொட்டை மாடிக்கு நாயகன் அருள்நிதியின் சினேகிதியும், பரத நாட்டிய கலைஞருமான சுவாதி என்ற மாணவி செல்ல நேரிடுகிறது. அந்த மொட்டை மாடியில் அவர் கொல்லப்படுகிறார். அவரது சடலம் மறுநாள் காலையில் காட்டுக்குள் கிடக்கிறது. அவரை கொன்றது சிறுத்தை என கல்லூரி நிர்வாகத்தினரும், பேய் என்று சில மாணவர்களும் நம்புகிறார்கள்.

கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளை மீறும் கேர்ள்ஸ் ஹாஸ்டல் மாணவிகளுக்கு, சுவாதிக்கு நேர்ந்த கதி ஏற்படுவது தொடர்கிறது. இந்த அக்கிரமத்தைச் செய்வது யார், அல்லது எது என்பதை கண்டறிய அருள்நிதியும் அவரது நண்பர்களும் களத்தில் குதிக்கிறார்கள். இந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? மர்மக்கொலைகளின் பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது மீதிக்கதை.

0a1b

பொறியியல் கல்லூரி மாணவராக வரும் நாயகன் அருள்நிதி, கதாபாத்திரத்துக்குத் தேவையான நேர்த்தியான நடிப்பை வழக்கம் போல் வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகனின் காதலியாகவும், சக மாணவியாகவும் வரும் அவந்திகா மிஸ்ரா, இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் மட்டுமே தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வரலாம்.

கல்லூரி முதல்வராக வரும் தலைவாசல் விஜய், ஹாஸ்டல் வார்டனாக வரும் உமா ரியாஸ், கல்லூரி வாட்ச்மேனாக வரும் ரமேஷ் கண்ணா தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஆதித்யா கதிரின் டைமிங் காமெடிகள் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றன. ஜாலியாக நடிக்கக்கூடிய இயக்குநர் விஜய்குமார் ராஜேந்திரனுக்கு சீரியஸ் ஆக்டிங் ஒத்துவரவில்லை. நடிகர் சரண்தீப் ஆக்ரோஷமாக மிரட்டியிருக்கிறார்.

யூடியூப் பிரபலமான எருமைச்சாணி விஜய்குமார் ராஜேந்திரன், இயக்குனராக அறிமுகமாகும் தனது முதல் படத்தை தரமான படமாகக் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார். சில காட்சிகளை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு, விறுவிறுப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். எனினும், படத்தின் ஒன்லைன் நன்றாக இருந்தாலும், கதை கட்டமைப்பு மற்றும் திரைக்கதை ஆழமானதாக இல்லை. இரண்டாம் பாதியில் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் கூட்ட இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்தின் சஸ்பென்ஸ் மற்றும் திகில் காட்சிகளுக்கு பின்னணி இசை உயிர் கொடுத்திருக்கிறது. அரவிந்த் சிங் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.

 ’டி ப்ளாக்’ – பார்க்கலாம்!