யானை – விமர்சனம்

நடிப்பு: அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி மற்றும் பலர்

இயக்கம்: ஹரி

இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: கோபிநாத்

மக்கள் தொடர்பு: சதீஷ்

ஆக்சன், குடும்ப செண்டிமெண்ட், காதல், நகைச்சுவை போன்ற பலசரக்குகளுடன் இயக்குனர் ஹரி மீண்டும் தன் ஃபார்முலாக்கடையை விரித்திருப்பது தான் ‘யானை’.

பி.ஆர்.வீரபாண்டியன் – சுருக்கமாக பி.ஆர்.வி (ராஜேஷ்) குடும்பம் செல்வ வளமும் தொழில் வளமும் நிறைந்த பிரபலமான பெரிய குடும்பம். பி.ஆர்.வி., அவரது மூத்த தாரத்து பிள்ளைகளான பி.ஆர்.வி.ராமச்சந்திரன் (சமுத்திரக்கனி), பி.ஆர்.வி.சிவச்சந்திரன் (போஸ் வெங்கட்), பி.ஆர்.வி.ஜெயச்சந்திரன் (சஞ்சீவ்), இவர்களின் மனைவிகள், குழந்தைகள், பி.ஆர்.வி.யின் இளைய தாரத்தின் (ராதிகா) ஒரே மகன் பி.ஆர்.வி.ரவிச்சந்திரன் (அருண் விஜய்) என எண்ணற்றோர் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.

ரவிச்சந்திரன் வேற்றுத் தாய் பிள்ளை என்பதால் அவரை அவரது சகோதரர்கள் பாரபட்சமாக நடத்துகிறார்கள். இக்குடும்பத்தினருக்கு ஏற்கெனவே சமுத்திரம் (ஆடுகளம் ஜெயபாலன்) குடும்பத்தினருடன் வெட்டுக்குத்து பிரச்சனை இருந்துவரும் நிலையில், பி.ஆர்.வி.யின் மூத்த மகனான ராமச்சந்திரன் மகள் (அம்மு அபிராமி) வழியில் புதுப்பிரச்சனை முளைத்து விஸ்வரூபம் எடுக்கிறது. குடும்பம் ரெண்டு படுகிறது. தன் தாயுடன் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் ரவிச்சந்திரன், இந்த பெரிய குடும்பத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் தன்னந்தனியே யானை பலத்துடன் எப்படி எதிர்கொள்கிறார் என்பது மீதிக்கதை.

நாயகன் ரவிச்சந்திரனாக வரும் அருண்விஜய், உடலை இறுக்கி மீசையை முறுக்கி கெத்தாக தோற்றம் தருகிறார்.. அண்ணன்களின் குழந்தைகளிடம் பாசம், ஜெபமலர் என்ற கிறிஸ்தவப் பெண்ணாக வரும் பிரியா பவானி சங்கரிடம் காதல் என இளகியவராக வந்து இதயத்தைத் தொடுகிறார். அதே நேரத்தில் அரிசி ஆலையில் நடக்கும் ஒரு பெரிய சண்டைக்காட்சியில்  அவ்வளவு சக்தியை வெளிப்படுத்தி ஓர் அரக்கன் போல்  அடித்துத் துவம்சம் செய்து பிரமிக்கவும் வைக்கிறார்

சமுத்திரக்கனி, போஸ்வெங்கட், சஞ்சீவ், ஐஸ்வர்யா, அம்முஅபிராமி, ராஜேஷ், ராதிகா, வ.ஐ.ச.ஜெயபாலன், கேஜிஎஃப் புகழ் ராமச்சந்திரராஜு,தலைவாசல் விஜய், யோகி பாபு, இமான் அண்ணாச்சி உட்பட பெரிய நட்சத்திர பட்டாளமே திரை முழுக்க ஆக்கிரமித்திருக்கிறது.

கதை புதிதில்லை, திரைக்கதையிலும் புதுமையில்லை என்பது படத்தின் பலவீனம்.

வழக்கமான அரிவாள் வெட்டு குத்து., இறால் பண்ணை, செல்வாக்கான பெரிய குடும்பம் அவர்களின் பகையாளி, பகையைத் தீர்க்கும் ஹீரோ என இயக்குனர் ஹரி இதுவரை அரைத்த அதே மசாலாவை தனது மச்சானை வைத்து மீண்டும் ஒரு முறை அரைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் கதைக்களங்களும் கதை சொல்லும் பாணியும் அதிவேகத்தில் புதுமை பெற்று எங்கோ சென்று கொண்டிருக்கும்போது ஹரி இன்னும் ரெண்டு பாட்டு, நாலு பைட்டு, மூன்று சுமாரான நகைச்சுவைக் காட்சிகள் என வெந்த தோசையை மீண்டும் மீண்டும் திருப்பிப் போடுவது சோர்வு.

ஹரி படங்களில் பெண்களைப் பாதுகாக்கும் தலையாய கடமை ஆண்களுக்கு இருக்கும். பெண்களின் தலையில் தான் குடும்பத்தின் கவுரவமே இருக்கும். அதுதான் இந்த சினிமாவிலும் உள்ளது. தன் வீட்டுப் பெண் வேற்று மத இளைஞனை காதலிக்கிறாள் என்பதே பெரிய அவமானம் எனக் கருதும் ஒரு பிற்போக்கு கூட்டம் தான் ஹரியின் ஜிகினா கதாபாத்திரங்களாகத் தொடர்ந்து கட்டமைக்கப்படுகின்றன. பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியும். ஹரியின் முதல் திரைப்படம் வெளியாகும் முன்பே பெண்கள் படித்து பல முன்னேற்றங்களை அடைந்து விட்டனர். ஆனால் இயக்குநரோ மீண்டும் மீண்டும் காதலித்த ஒரு பெண் கதாபாத்திரத்தை “ஐயோ குடும்ப மானத்த வாங்கிட்டியே” என காட்டிக் கொண்டிருக்கிறார். ஹரி தன்னை அப்டேட் செய்து கொள்ளாவிட்டால் கஷ்டம் தான்.

கோபிநாத்தின் ஒளிப்பதிவில் படத்தின் வேகம் தெரிகிறது. பாடல்காட்சிகள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.

ஜீ.வி.பிரகாஷின் இசையில் ’ஏலம்மா ஏலே, போதைய விட்டு வாலே’ உள்ளிட்ட எல்லாப்பாடல்களும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் காட்சிகளின் வேகத்துக்கு ஈடுகொடுத்திருக்கிறது.

’யானை’ – குடும்பத்துடன் ஒருமுறை பார்க்கலாம்!