வீரசிவாஜி – விமர்சனம்
நாயகன் விக்ரம் பிரபு (சிவாஜி) பாண்டிச்சேரியில் கால் டாக்சி டிரைவராக இருக்கிறார். அவருக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. என்றாலும், வினோதினி அவரை தம்பி போல பார்த்துக்கொள்கிறார். அவரும் வினோதினியை அக்காவாக பாவித்து உறுதுணையாக இருக்கிறார். வினோதினிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அந்த சிறுமியும், விக்ரம் பிரபுவும் ரொம்ப பாசமாக இருக்கிறார்கள்.
ஒரு நாள் சாலை விபத்தில் நாயகி ஷாம்லியை பார்க்கிறார் விக்ரம் பிரபு. பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். மோதலில் தொடங்கும் இவர்களின் சந்திப்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. அதைத் தொடர்ந்து யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோருடனும் இவருக்கு நட்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், வினோதினியின் மகளுக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட, உடனே அறுவை சிகிச்சை செய்ய 25 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. விக்ரம் பிரபு தன்னிடம் உள்ள கால்டாக்சியை விற்று ரூ. 5 லட்சம் கொண்டு வருகிறார். ஆனால், அந்த பணம் அறுவை சிகிச்சைக்கு போதுமானதாக இல்லாததால் யோகி பாபு – ரோபோ சங்கர் மூலம், குறைந்த பணத்துக்கு அதிக பணம் தருவதாக கூறும் ஜான் விஜய்யை சந்திக்கிறார்.
அவரிடம் தன்னிடம் இருக்கும் ரூ.5 லட்சத்தையும் கொடுக்கிறார் விக்ரம் பிரபு. மறுநாள் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறும் ஜான் விஜய், மறுநாள் யாருக்கும் தெரியாமல் ஓடி விடுகிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் விக்ரம் பிரபு, அவரை தேடிக் கண்டுபிடிக்க புறப்படுகிறார். ஒருகட்டத்தில் ஜான் விஜய்யை பிடித்து, தனக்கு சேரவேண்டிய மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வேளையில், அவருடைய கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகிறது.
இந்த விபத்தில் விக்ரம் பிரபுவின் தலையில் அடிப்பட்டு, அவருக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போகிறது. இறுதியில், விக்ரம் பிரபுவுக்கு பழைய நினைவுகள் திரும்பி வந்ததா? அவர் கொண்டு வந்த பணத்தை வைத்து சிறுமிக்கு ஆபரேஷன் நடந்ததா? என்பது மீதிக்கதை.
விக்ரம் பிரபு கால் டாக்சி டிரைவராக வந்தாலும், படம் முழுக்க வண்ண வண்ண உடைகளில் வருகிறார். அவர் அதிரடி சண்டைக் காட்சிகளில் பின்னி பெடல் எடுக்கிறார். ஆனால், காதல் காட்சிகளில் ரொம்பவே கஷ்டப்படுகிறார்.
குழந்தை நட்சத்திரமாக பிரபலமடைந்த ஷாமிலி, பல வருடங்களுக்குப் பிறகு தற்போது கதாநாயகியாக மாறியிருக்கிறார். உண்மையில் அஜித்தின் மைத்துனியான இவர், இந்த படத்தில் விஜய் ரசிகையாக வருகிறார். இவருடைய நடிப்பு பரவாயில்லை. வழக்கமான ஹீரோயின் போல் காதல், டூயட்டுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.
படத்திற்கு மிகப் பெரிய பலமே யோகி பாபு – ரோபோ ஷங்கர் கூட்டணியின் காமெடிதான். ‘ரமேஷ் – சுரேஷ்’ என்ற பெயர்களில் வலம் வரும் இவர்களின் காமெடி, படம் முழுக்க ரசிகர்களுக்கு கலகலப்பூட்டி இருக்கிறது. ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், வினோதினி உள்ளிட்டோர் தங்கள் பாத்திரம் உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தை கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திக்கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் கணேஷ் விநாயக். இமான் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர். குறிப்பாக “சொப்பன சுந்தரி” பாடல் எழுந்து நின்று ஆட வைக்கிறது. “தாறுமாறு” பாடலும் ரசிக்கும் ரகம். பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. சுகுமார் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறது.
‘வீர சிவாஜி’ – ரசிக்கலாம்!