கஜினிகாந்த் – விமர்சனம்

‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய சர்ச்சைக்குரிய ‘அடல்ட் காமெடி’ ரக திவ்ய திரைப்படங்களை தமிழ் சமூகத்துக்கு அருளி, தாய்மார்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த கோபத்துக்கு ஆளான இயக்குனர் சன்தோஷ் பி.ஜெயக்குமாரை, பாலியல் வக்கிர மன நோயிலிருந்து மீட்டெடுப்பதற்கான மருந்து ஒருவழியாய் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்பதற்கான அடையாளம் தான் ‘கஜினிகாந்த்’ திரைப்படம்.

இயக்குனர் சன்தோஷ் பி.ஜெயக்குமார் தனது அழுகிய மூளையைப் பயன்படுத்தி சுயமாக கற்பனை செய்து கதை, திரைக்கதை பண்ண வேண்டாம் என்று தடுத்து, வெற்றிகரமாக ஓடிய அந்நிய மொழித் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி அவரிடம் கொடுத்து, “தம்பி, நீங்க ரொம்ப யோசிக்காமல், இந்த கதையை லைட்டா பட்டி, டிங்கரிங் பார்த்து, இதை அப்படியே தமிழில் எடுத்துக் கொடுங்க, போதும்” என்று சொல்வது தான் அவரை பாலியல் வக்கிர மன நோயிலிருந்து மீட்டெடுப்பதற்கான மருந்து. இந்த மருத்துவப் பரிசோதனை முயற்சிக்குக் கிடைத்த வெற்றி தான் ஓரளவு டீசண்டான ‘கஜினிகாந்த்’ திரைப்படம்.

நானி, லாவண்யா திரிபாதி நடிப்பில், மாருதி தாசரி எழுத்து – இயக்கத்தில், 2015ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம் ‘பலே பலே மஹாதிவோய்’. ‘நீ ஒரு சுவாரஸ்யமான மனிதன்’ என பொருள்படும் தலைப்பைக் கொண்ட இந்த தெலுங்குப் படம் ஆந்திராவில் சக்கைப் போடு போட்டு வசூலை வாரிக் குவித்தது. இந்த படத்தின் கதை, திரைக்கதையைத் தான் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யாமல், ஆர்யா – சாயிஷா நடிப்பில் தமிழில் ரீமேக் செய்து, ‘கஜினிகாந்த்’ என்ற – குடும்பத்துடன் பார்க்கக்கூடிய – காமெடி படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சன்தோஷ் பி.ஜெயக்குமார்.

0a1o

கதை நாயகன் ஆர்யாவின் அப்பா ஆடுகளம் நரேன் ஒரு ரஜினி பைத்தியம். நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் தன் மனைவியை வற்புறுத்தி, ரஜினி நடித்த ‘தர்மத்தின் தலைவன்’ படத்துக்கு அழைத்துச் செல்கிறார். திரையில் ‘ஞாபக மறதி’ கதாபாத்திரத்தில் வரும் ரஜினி இறக்கும்போது, திரையரங்கில் நரேனின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அதற்கு ‘ரஜினிகாந்த்’ என்று பெயர் வைக்கிறார் நரேன்.

சிறுவயது முதலே இந்த ரஜினிகாந்துக்கு ‘ஞாபக மறதி’ (Mind Divesion) ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. அவர் ஒரு வேலையை செய்துகொண்டிருக்கும்போது இன்னொரு வேலை வந்தால், முந்தைய வேலையை அப்படியே மறந்துவிட்டு புது வேலையைச் செய்யத் தொடங்கிவிடுவார். இதனால் கடுப்பாகும் நரேன், ஞாபக மறதியாளனாக சூர்யா நடித்த ‘கஜினி’ படத்தை நினைவில் கொண்டு, “உனக்கு ரஜினிகாந்த்னு பேர் வச்சதுக்கு பதிலா கஜினிகாந்த்னு வச்சிருக்கலாம்” என்று திட்டித் தீர்க்கிறார். (இதனால் தான் படத்துக்கு இந்த டைட்டில்!)

தாவரவியல் விஞ்ஞானியாக இருக்கும் ரஜினிகாந்துக்கு தன் நண்பர் சம்பத்தின் மகளை திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடத்துகிறார் நரேன். முதலில் சம்மதிக்கும் சம்பத், ரஜினிகாந்த்தின் ஞாபக மறதி பற்றி தெரிந்துகொண்ட பின் “உனக்கு பெண் தர மாட்டேன்” என்று ஆவேசமாக மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில், குழந்தைகளுக்கு குச்சுப்பிடி நடனம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியையான வந்தனாவை (சாயிஷாவை) கண்டதும் ஒருதலையாய் காதல் கொள்கிறார் ரஜினிகாந்த். அவர் ஞாபக மறதியாய் செய்யும் செயல்கள் எல்லாம், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பெரிய சமூகத் தொண்டுகள் போல் தெரிகின்றன வந்தனாவுக்கு. இதனால் அவருக்கும் ரஜினிகாந்த் மீது காதல் வருகிறது.

தன் தந்தையை சந்திக்க வருமாறு ரஜினிகாந்திடம் கூறுகிறார் வந்தனா. அப்படி சந்திக்கப் போன இடத்தில் தான், தன் மகள் காதலிப்பது ஞாபக மறதி பேர்வழியை என்பது சம்பத்துக்கும், தனக்கு பெண் தர முடியாது என்று துரத்திவிட்டவரின் மகள் தான் வந்தனா என்பது ரஜினிகாந்துக்கும் தெரிய வருகிறது.

சம்பத் போடும் முட்டுக்கட்டை போதாதென்று, வந்தனா மீது மையல் கொண்டு அவரை மனைவியாக்கிக் கொள்ளத் துடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியும் இடையில் வில்லனாக முளைத்து வீராப்பு காட்டுகிறார். இந்த தடைகளையெல்லாம் கடந்து வந்தனாவை ரஜினிகாந்த் எப்படி கரம் பிடிக்கிறார் என்பது மீதிக்கதை.

இதர கதாபாத்திரங்களின் வசவுக்கும், கலாய்ப்புக்கும் ஆளாவதன் மூலம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் நாயக கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமானவர் ஆர்யா என்பது ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திலேயே நிரூபிக்கப்பட்டு விட்டது. இந்த ‘கஜினிகாந்த்’ படத்திலும் அதை உறுதி செய்திருக்கிறார் ஆர்யா. அவர் ஒரு வேலை செய்துகொண்டிருக்கும்போது, அதை அப்படியே மறந்துவிட்டு புதுவேலைக்குத் தாவும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை சிரிக்க வைக்கின்றன. உதாரணமாக, சம்பத்தை வரச் சொல்லிவிட்டு, அதை மறந்து வேறு வேலைகளில் ஈடுபடுவது, தன் காரை இடித்த டூ வீலர் இளைஞர்கள் ரூ.15ஆயிரம் நஷ்டஈடு கொடுக்க தயாராக இருக்க, “ரூ.10ஆயிரம் தான் தருவேன்” என்று அடம் பிடித்து அவர்களுக்கே பணம் கொடுத்து அனுப்புவது, பிச்சைக்காரருக்கு பணம் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு டூ வீலர் சாவியை கொடுப்பது, திருப்பதிக்குப் போவதாக நினைத்துக்கொண்டு காரை பெங்களூருக்கு திருப்புவது போன்றவை எல்லாம் கலகலப்புக்கு உத்தரவாதம்.

வந்தனாவாக வரும் நாயகி சாயிஷா நன்றாக காதலிக்கிறார். நடனம் ஆடுகிறார். நாயகனின் ஞாபக மறதி பற்றி தெரியாமல், அவரை வியந்து போற்றும் காட்சிகளில் தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார். என்றாலும், அவரது மெலிந்த உடம்பைப் பார்க்க ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. நடிப்புக்கு வாங்கும் சம்பளத்தில் கொஞ்சத்தை சாப்பாட்டுக்கும் செலவு செய்யுங்கள் சாயிஷா!

ஆர்யாவின் நண்பனாக வரும் சதீஷ் காமெடியில் ஸ்கோர் செய்திருக்கிறார். அவர் பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் திரையரங்கில் அப்ளாஸ் பறக்கிறது. இன்னொரு காமெடி நடிகரான கருணாகரன், சதீஷ் அளவுக்கு ஸ்கோர் செய்ய முடியாமல் போனது ஏமாற்றமே.

இந்த படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் –ஆடுகளம் நரேன் தான். பல படங்களில் மூக்கு விடைத்த வில்லனாகவும், அழுமூஞ்சி அப்பாவாகவும் வந்த நரேன், இதில் பயங்கரமாக காமெடி பண்ணி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.

சம்பத், நீலிமா, உமா பத்மநாபன் என படத்தில் வரும் அனைவரும் தங்கள் பாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பல்லுவின் ஒளிப்பதிவும், பாலமுரளிபாலுவின் இசையும் படத்துக்கு பலம்.

‘கஜினிகாந்த்’ – குடும்பத்துடன் பார்த்து சிரித்து மகிழலாம்!