ஜெய் பீம் – விமர்சனம்

நடிப்பு: சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், இளவரசு

இயக்கம்: த.செ.ஞானவேல்

தயாரிப்பு: 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ஜோதிகா & சூர்யா

ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.கதிர்

இசை: ஷான் ரோல்டன்;.

வெளியீடு: அமேசான் பிரைம் ஓடிடி.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகத் தோன்றிய மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்ற புரட்சிகர தத்துவங்களால் ஈர்க்கப்பட்டவர் வழக்கறிஞர் சந்துரு. (பிற்காலத்தில் நீதிபதியாக உயர்ந்து, பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று, நேர்மையாக நீதி வழங்கி பாராட்டுகள் பெற்று, ஓய்வுபெற்ற அதே சந்துரு தான்!) அவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக ’மனித உரிமை’ வழக்குகளில் ஆஜரானபோது, பாதிக்கப்பட்ட அப்பாவிகளிடமிருந்து சல்லிக்காசுகூட ஃபீஸ் வாங்க மாட்டார் என்று பாராட்டப்பட்டவர். 1990களின் முற்பாதியில் ’மனித உரிமை’ சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று வழக்கறிஞர் சந்துருவிடம் வருகிறது. அந்த வழக்கு மற்றும் அதை சந்துரு கையாண்ட விதம் ஆகிய உண்மைச் சம்பவங்களுடன் சுவாரஸ்யம் மற்றும் விறுவிறுப்புக்காக சிறிது புனைவும் கலந்து, இந்த ஆண்டின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டிருக்கிறது ‘ஜெய் பீம்’ திரைப்படம்.

0a1f

வட மாவட்டம் ஒன்றில் வசித்து வருபவர்கள் ராஜாக்கண்ணு (மணிகண்டன்) – செங்கனி (லிஜோமோல் ஜோஸ்) தம்பதியர். இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒருநாள் ஊர் பெரியமனிதரின் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட, அதை கண்டுபிடித்து அப்புறப்படுத்த ராஜாக்கண்ணுவை அழைத்துச் செல்கிறார்கள். ராஜாக்கண்ணு பாம்பைப் பிடித்து காட்டுக்குள் விடுகிறான். பின்னர் வெளியூர் செங்கல்சூளையில் வேலை பார்க்கக் கிளம்பிப் போகிறான். இப்போது ஊர் பெரியமனிதரின் வீட்டில் நகைகள் களவு போயிருப்பது தெரிய வருகிறது. ராஜாக்கண்ணுவை போலீஸ் சந்தேகிக்கிறது. அவனை ஒப்படைக்கச் சொல்லி அவனது மனைவி செங்கனி மற்றும் உறவினர்களை போலீஸ் காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்குகிறது. இது எதுவும் தெரியாமல் தற்செயலாக ஊர் திரும்பும் ராஜாக்கண்ணுவைப் பிடித்து லாக்-அப்பில் அடைக்கும் போலீஸ், திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி கண்மூடித்தனமாக கட்டிவைத்து அடித்துத் துவைக்கிறது. பின்னர் ராஜாக்கண்ணுவும், அவனுடன் லாக்-அப்பில் இருந்த குட்டப்பன், மொசக்குட்டி ஆகிய இரண்டு உறவினர்களும் இரவோடு இரவாக தப்பியோடி விட்டதாகச் சொல்லுகிறது போலீஸ். நீதி வேண்டி தன்னை அணுகும் செங்கனிக்கு நீதி கிடைக்க வழக்கறிஞர் சந்துரு (சூர்யா) நீதிமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் நடத்தும் சமரசமற்ற போராட்டம் தான் மீதிக்கதை.

மனைவியையும், மகளையும் உயிருக்கு உயிராய் நேசிக்கிற, உயிரே போனாலும் பொய்க்குற்றச்சாட்டை ஏற்க மறுக்கிற, அறம் தவறாத அப்பாவி இருளர் இனத்தவனான நாயகன் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் மணிகண்டன் வாழ்ந்திருக்கிறார். இவரைத் தவிர இந்த கதாபாத்திரத்தில் வேறு எவரும் இத்தனை கனகச்சிதமாகப் பொருந்தி நடிப்பை வெளிப்படுத்தியிருப்பாரா என்பது சந்தேகமே.

ராஜாக்கண்ணு மனைவி செங்கனி கதாபாத்திரத்தில் வரும் லிஜோமோல் ஜோஸ் அச்சுஅசலான இருளர் இனத்துப் பெண்ணாக தன்னை 100 சதவிகிதம் மாற்றிக்கொண்டு, முதலில் கணவனைத் தேடி கண்டுபிடிப்பதற்காகவும், பின்னர் நீதி கோரி நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி-இறங்கி அலையும் அலைச்சல் கண்டு உருகாத பார்வையாளர் எவரும் இருக்க மாட்டார்.

மானுட விடுதலைக்கான கருத்தியலின் அடையாளங்களான மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்கள் இருக்கும் அலுவலகத்தைக் கொண்ட வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அந்த மாமேதைகளைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களமாடுபவராக, நீதிமன்றத்தின் உள்ளும் புறமும் ஒளிரும் சமூகப் போராளியாக பின்னியெடுத்திருக்கிறார். தானொரு மாஸ் ஹீரோ என்ற நினைப்பில், தனக்கு பாடல்கள், டான்ஸ், சண்டைகள் வேண்டும் என்றெல்லாம் எதையும் திணிக்காமல், சந்துரு என்ற யதார்த்தமான கதாபாத்திரத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்டு, மிகச் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். அவரது கேரியரில் இது நிச்சயம் மிக மிக மிக முக்கியமான படம்.

0a1g

விசாரணை செய்யும் ஐ.ஜி. பெருமாள்சாமியாக வரும் பிரகாஷ்ராஜ், அறிவொளி இயக்க ஆசிரியையாக வரும் ரஜிஷா விஜயன், அரசுத்தரப்பு வழக்கறிஞராக வரும் குரு சோமசுந்தரம் உட்பட நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் தனித்தன்மையோடு நடித்து தத்தமது கதாபாத்திரங்களை நிலை நிறுத்தியிருக்கிறார்கள்.

ஜனநாயகம், மனித உரிமை, அதிகாரம், காவல்துறை என்பதெல்லாம் விளிம்புநிலையில் வாழும் மனிதனுக்கு என்னவாக விடிகிறது என்கிற சரடை துல்லியமாக கதையின் சம்பவங்கள் கொண்டு நெய்திருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல்.

“போலீஸ்காரங்க எல்லாரும் தப்பானவங்க இல்லை. மக்களுக்கு நல்லது பண்ண நினைக்கிற போலீஸ்காரங்களும் இருக்காங்க” என்கிற போலீஸ் அதிகாரியிடம், “அப்படியா. அப்போ இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு வந்துடுங்க” என அவரின் கையில் நோட்டீஸை சூர்யா திணிக்கும்போது அதிகாரம் பல்லிளிக்கிறது. சிவப்பு புன்னகைக்கிறது. சந்துரு மிளிர்கிறார்.

மேலே சொன்ன காட்சி பதத்துக்கான ஒரு சோறுதான். பானைச் சோறு விருந்தாக காத்துக் கொண்டிருக்கிறது.

சுமார் இரண்டே முக்கால் மணி நேர படத்தை தனது வலிமையான திரைக்கதையாலும், நேர்த்தியான மேக்கிங்காலும் போரடிக்காமல் விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் த.செ.ஞானவேல். தமிழ் திரையுலகின் மிக முக்கியமான இயக்குனர்களின் பட்டியலில் இவர் பெயரும் இப்போது இணைந்திருப்பது மகிழ்ச்சி.

தமிழ்த்திரையுலகத்துக்கு மட்டுமல்ல, தமிழர் வாழ்க்கைச்சூழலுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்குமே ‘ஜெய்பீம்’ அவசியமான படம்.

நன்றி சூர்யா. நன்றி த.செ.ஞானவேல்.

அமேசான் ஓ.டி.டி-யில் வெளியாகியிருக்கும் இப்படத்தை கண்டிப்பாக அனைவரும் பாருங்கள். ஏனெனில் –

இந்த படத்துக்கு நாம் தரும் தீர்ப்பு – வெறும் தீர்ப்பல்ல; நம்பிக்கை!

 

Read previous post:
0a1k
“உதாரண புருஷராக வாழ்ந்து வரும் சூர்யாவுக்கு நன்றிகள்; ‘ஜெய் பீம்’ பெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்!”

நடிகர் சூரியாவின் புதிய படம் 'ஜெய் பீம்' அமேசான் பிரைம்மில் வெளியாகி இருக்கிறது. தொண்ணூறுகளில் இருளர் சமூகத்தினர் காவல் துறையால் எதிர்கொண்ட அடக்குமுறைகள் குறித்த உண்மைக் கதையை

Close