மூத்தகுடி – விமர்சனம்

நடிப்பு: தருண் கோபி, பிரகாஷ் சந்திரா, அன்விஷா, கே.ஆர்.விஜயா, ஆர்.சுந்தர்ராஜன், ராஜ்கபூர், யார் கண்ணன், சிங்கம் புலி மற்றும் பலர்

இயக்கம்: ரவி பார்கவன்

இசை: ஜே.ஆர்.முருகானந்தம்

ஒளிப்பதிவு: கந்தா ரவிச்சந்திரன்

படத்தொகுப்பு: வளர்பாண்டி

தயாரிப்பு: பிரகாஷ் சந்திரா

பத்திரிகை தொடர்பு: மணவை புவன்

மூத்தகுடி என்ற ஊரில் உள்ள சரக்குட்டி என்ற பெரியவர், தங்கள் ஊருக்குள் மதுபானக்கடை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து ஊர்மக்களைத் திரட்டி உண்ணாவிரதம் இருக்கிறார். இந்த தகவல் அறிந்து, அவரை பேட்டி எடுக்கவரும் தொலைக்காட்சி நிருபரிடம், தங்களது ஊரின் கதையை ஃபிளாஷ்பேக்காக சொல்லத் தொடங்குகிறார் சரக்குட்டி. இப்படியாக தொடங்குகிறது ‘மூத்தகுடி’ திரைப்படம்.

அந்த ஊரில் பெரிய குடும்பத்து பெண்மணியாக இருப்பவர் மூக்கம்மா (கே.ஆர்.விஜயா). அவரது சொல்லுக்கு மறுசொல் சொல்லாமல் ஊரே கட்டுப்படுகிறது. அவருடைய தம்பி பழைய சோறு (யார் கண்ணன்).

பல வருடங்களுக்கு முன்னால் மூக்கம்மா தன் குடும்பத்தினருடனும், ஊர் மக்கள் சிலருடனும் லாரியில் குலசாமி கோயிலுக்கு சாமி கும்பிடச் செல்கிறார். வழியில், மது அருந்துவதற்காக லாரி டிரைவர் லாரியை நிறுத்தும்போது ஏற்பட்ட பிரச்சனையால் லாரி விபத்துக்குள்ளாகி அதில் வந்தவர்கள் ஏராளமான பேர் இறந்து போகிறார்கள். மூக்கம்மா, அவருடைய தம்பி பழைய சோறு மற்றும் பேரக்குழந்தைகளான வீரய்யன், அய்யாதுரை, ஜோதி ஆகியோர் மட்டும் உயிர் பிழைக்கிறார்கள்.

பலரது உயிரைக் குடிக்கக் காரணமான மதுவை ஒழித்துக்கட்ட முடிவு செய்யும் மூக்கம்மா, தனது ஊரில் யாரும் மது குடிக்கக் கூடாது, அப்படி யாராவது குடித்தால் அவர் ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்படுவார் என்று கட்டுப்பாடு விதிக்கிறார். அவருடைய கட்டுப்பாட்டை ஏற்கும் மூத்தகுடி ஊர்மக்கள் மது குடிக்காமல் வாழ்ந்து வருவதோடு, அந்த ஊரில் மது விற்க விடாமலும் தடுத்து வருகிறார்கள். ஆனால் தொழிலதிபர் செந்தூரப்பாண்டியன் (ராஜ்கபூர்), ஊர் கட்டுப்பாட்டைத் தகர்க்கும் வண்ணம் அங்கு மதுபான தொழிற்சாலை கட்டவும், அமோகமாக மதுபான வியாபாரம் செய்யவும் திட்டம் தீட்டி சதி வேலைகளில் இறங்குகிறார்.

0a1g

இதற்கிடையே, பெற்றோர்களை இழந்த பேரக்குழந்தைகளான வீரய்யனையும், அய்யாதுரையையும் பழைய சோறுவும், ஜோதியை மூக்கம்மாவும் எடுத்து வளர்க்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்து இளமைப் பருவத்தை எய்துகிறார்கள்.

முறைப்பெண்ணான ஜோதியை (அன்விஷா), வீரய்யனுக்கு (தருண் கோபி) திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே பெரியவர்கள் பேசி வந்ததால், ஜோதியை வீரய்யன் வெறித்தனமாக காதலித்து வருகிறார். ஆனால், ஜோதியோ வீரய்யனின் தம்பி அய்யாதுரையை (பிரகாஷ் சந்திரா) காதலிக்கிறார்.

ஜோதி – அய்யாதுரை காதல் தெரிய வரும்போது வீரய்யன் எப்படி எரிமலையாய் வெடிக்கிறார்? தொழிலதிபர் செந்தூரப்பாண்டியனின் மதுபான தொழிற்சாலைத் திட்டம் எப்படி முறியடிக்கப்படுகிறது? என்பது ’மூத்தகுடி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தருண் கோபி மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார். நாயகியை ஒருதலையாகக் காதலிக்கும் வீரய்யன் கதாபாத்திரத்தில் வரும் அவர், ஆரம்பத்தில் அளவாக இயல்பாக நடித்திருக்கிறார். ஆனால், நாயகி தன்னை காதலிக்கவில்லை என தெரிந்தபின் ஏமாற்றத்தையும் ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தும்போது, அளவுக்கதிகமாக நடிப்பைக் கொட்டி கவனத்தைக் கவர முயன்றிருக்கிறார்.

அவரது தம்பி அய்யாதுரையாக பிரகாஷ் சந்திராவும், அய்யாதுரையின் காதலி ஜோதியாக அன்விஷாவும் வருகிறார்கள். இருவரும் இன்னும் கொஞ்சம் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டால் நடிப்புக் கலைஞர்களாக நிச்சயம் அங்கீகாரம் பெறலாம்.

பெரிய குடும்பத்துப் பெண்மணி மூக்கம்மாவாக வரும் கே.ஆர்.விஜயா, தொழிலதிபர் செந்தூரப்பாண்டியனாக வரும் ராஜ்கபூர், பழைய சோறுவாக வரும் யார் கண்ணன் ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பால், தத்தமது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

நச்சாளியாக ஆர்.சுந்தர்ராஜனும், பஞ்சுபெட்டியாக சிங்கம் புலியும் வந்து, காமெடி பண்ணி, சிற்சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.

”ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை” என்று சொலவடை சொல்வார்களே… அதுபோல, லோ-பட்ஜெட்டுக்கு ஏற்றபடி ரவி பார்கவனின் இயக்கமும், கந்தா ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவும், ஜே.ஆர்.முருகானந்தத்தின் இசையும் பயணித்திருக்கின்றன.

‘மூத்தகுடி’ – மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கண்டெண்ட்டுக்காக ஒருமுறை பார்க்கலாம்!