இறைவன் – விமர்சனம்

நடிப்பு: ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன், விஜயலட்சுமி, ஆசிஷ் வித்யார்த்தி, ராகுல் போஸ், சார்லி, வினோத் கிஷன், அழகம் பெருமாள், பகவதி பெருமாள் மற்றும் பலர்

 எழுத்து & இயக்கம்: ஐ.அகமது

ஒளிப்பதிவு: ஹரி கே வேதாந்த்

படத்தொகுப்பு: ஜெ.வி.மணிகண்ட பாலாஜி

இசை: யுவன் சங்கர் ராஜா

தயாரிப்பு: ‘பேஷன் ஸ்டூடியோஸ்’ சுதன் சுந்தரம் & ஜெயராம் ஜி

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா (டிஒன்)

’என்றென்றும் புன்னகை’, ’மனிதன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்ற ஐ.அகமதுவின் மூன்றாவது படம் என்பதாலும், ஜெயம் ரவியும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்திருப்பதாலும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருப்பதாலும், ‘சைக்கோ கிரைம் திரில்லர்’ என விளம்பரம் செய்யப்பட்டதாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘இறைவன்’ திரைப்படம், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

அர்ஜுன் (ஜெயம் ரவி), ஆண்ட்ரூ (நரேன்) ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே சென்னையில் காவல்துறை உதவி ஆணையர்களாக பணியாற்றுபவர்கள்.

தனக்கென்று ஒரு குடும்பம் இல்லாமல் தனிக்கட்டையாக வாழும் அர்ஜுன் துணிச்சல்காரர்; முன்கோபி. அதனால் விதிகளை மதிக்காமல், அவசரப்பட்டு குற்றவாளிகளை ’என்கவுன்ட்டர்’ என்ற பெயரில் சுட்டுக் கொன்று விடுவார். இதற்காக உயர் அதிகாரிகளால் அடிக்கடி எச்சரிக்கப்படுகிறார்.

பொறுப்பும், பொறுமையும் கொண்ட ஆண்ட்ரூ, மனைவி (விஜயலட்சுமி), மகள், தங்கை ( நயன்தாரா) சகிதம் குடும்பமாக வாழ்கிறார். தன் நெருங்கிய நண்பர் அர்ஜுன் எது செய்தாலும் அவருக்கு ஆதரவாக எப்போதும் துணை நிற்கிறார்.

இந்நிலையில், இளம்பெண்களைக் கடத்தி, அவர்களை நிர்வாணமாக்கி, கண்களைத் தோண்டி, கால்களை வெட்டி, கழுத்தை அறுத்து, மேலும் விவரிக்க இயலாத அளவு சித்திரவதைகள் செய்து, கொடூரமான முறையில் கொலை செய்கிறான் பிரம்மா (ராகுல் போஸ்) என்ற ’ஸ்மைலி சைக்கோ கொலைகாரன்’. குறுகிய காலத்தில் அடுத்தடுத்து 12 பெண்கள் கடத்தப்பட்டு, இப்படி கொலை செய்யப்பட்டு விடுவதால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைகிறார்கள்.

சைக்கோ கொலையாளியைக் கண்டுபிடித்து கைது செய்வதற்காக அர்ஜுன், ஆண்ட்ரூ ஆகிய இருவர் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்படுகிறது. பிரம்மா இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, சுற்றி வளைத்துப் பிடிக்கும் முயற்சியில் ஆண்ட்ரூ கொல்லப்படுகிறார். எனினும், பிரம்மாவை மடக்கிப் பிடித்து சிறையில் அடைக்கிறார் அர்ஜுன்.

நண்பர் ஆண்ட்ரூ கொல்லப்பட்டதால் மனஉளைச்சலில் இருக்கும் அர்ஜுன், காவல்துறை பணிக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஒதுங்கி வாழ முயல்கிறார். ஆனால், சிறையிலிருந்து தப்பிக்கும் சைக்கோ பிரம்மா, அர்ஜுனை பழிவாங்க துரத்துகிறான். மீண்டும் பெண்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படும் படலம் தொடர்கிறது.

இதனால், பணியிலிருந்து விலகிய பின்னும், கொலையாளியைக் கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டுகிறார் அர்ஜுன். ஒரு கட்டத்தில், பிரம்மா மட்டும் அல்ல, இன்னொரு கொலைகாரனும் இருக்கிறான்; அவன் தான் அதிபயங்கர சைக்கோ என்று அர்ஜுன் யூகிக்கிறார். இதை காவல்துறையில் உள்ள எவரும் நம்ப மறுக்கிறார்கள்.

அந்த இன்னொரு சைக்கோ கொலைகாரன் யார்? அவன் ஏன், எப்படி சைக்கோ கொலைகாரன் ஆனான்? அவனை அர்ஜுன் கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘இறைவன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

அர்ஜுன் என்ற காவல்துறை உதவி ஆணையராக நாயகன் கதாபாத்திரத்தில் வருகிறார் ஜெயம் ரவி. அவர் ஏற்கனவே ’தனி ஒருவன்,’’அடங்க மறு’, ’போகன்’ உள்ளிட்ட படங்களில் காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்திருப்பதால், இதில் சிரமம் இல்லாமல், மொத்த படத்தையும் ஒற்றை ஆளாக வெற்றிகரமாக சுமந்து கரை சேர்த்திருக்கிறார். ‘எனக்கு பயம்னா என்னான்னே தெரியாது’ என்ற வசனத்துக்கேற்ற முகபாவனைகளையும் உணர்ச்சிகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அர்ஜுனின் நண்பர் ஆண்ட்ரூவாக நடித்திருக்கிறார் நரேன். படத்தில் அவர் சிறிது நேரமே வந்தாலும் பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்து விடுகிறார்.

ஆண்ட்ரூவின் தங்கையாகவும், அர்ஜுனை ஒருதலையாய் காதலிப்பவராகவும் நடித்திருக்கிறார் நயன்தாரா. இந்த கதாபாத்திரம் கனம் இல்லாமல், நாயகன் என்றால் அவரை காதலிக்க ஒரு பெண் வேண்டும் என்பதற்காக கட்டமைக்கப்பட்டது போல் இருக்கிறது. அதற்கு எதற்கு நயன்தாரா என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஸ்மைலி சைக்கோ கொலைகாரனாக வரும் ராகுல் போஸ், கண்களை உருட்டி, பார்வையாலேயே மிரட்டுகிறார். இரண்டாவது சைக்கோ கொலைகாரனாக வரும் வினோத் கிஷன், தனது குழப்பமான கதாபாத்திரத்துக்கு நடிப்பால் உயிர் கொடுப்பதுடன், கடைசி 30 நிமிட ஓட்டத்துக்கு தனது உடல்மொழியால் உதவியிருக்கிறார்.

விஜயலட்சுமி, சார்லி, ஆசிஷ் வித்யார்த்தி, அழகம் பெருமாள், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான பங்களிப்பை செலுத்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட சைக்கோ திரில்லர் திரைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகி இருப்பதால், அந்த திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு இதை காட்ட நினைத்திருக்கிறார் இயக்குனர் ஐ.அகமது. இதன் காரணமாக, படம் தொடங்கி 40 நிமிடத்திற்குள் கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டுவிடுகிறார். இதற்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது என்று பார்த்தால், கதையை இழுஇழுவென இழுத்து, போரடித்து, சொதப்பியிருக்கிறார் இயக்குனர். அளவுக்கு அதிகமாக – ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு – வன்முறை காட்சிகளைப் புகுத்திய இயக்குனர், அதை குறைத்துக்கொண்டு, பார்வையாளர்களுக்குப் பிடிக்கிற மாதிரி கதை, திரைக்கதையை அமைக்க மெனக்கெட்டிருந்தால், ‘இறைவன்’ திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கும்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம்.  ஹரி கே வேதாந்த் ஒளிப்பதிவு ஓ.கே. படத்தொகுப்பாளர் ஜெ.வி.மண்கண்ட பாலாஜி படத்தின் நீளத்தை இன்னும் ஒரு அரைமணி நேரத்துக்கு குறைத்திருக்கலாம்.

‘இறைவன்’ – ஒருமுறை பார்க்கலாம்!