பர்த் மார்க் – விமர்சனம்

நடிப்பு: ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் கல்லரக்கல், மிர்னா, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர்.வரலட்சுமி மற்றும் பலர்

இயக்கம்: விக்ரம் ஸ்ரீதரன்

ஒளிப்பதிவு: உதய் தங்கவேல்

இசை: விஷால் சந்திரசேகர்

தயாரிப்பு: ’சேப்பியன்ஸ் என்டர்டெய்ன்மென்ட்’ ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

திரைப்படத் துறையில் மூன்று வகையான படைப்பாளிகள் இருப்பதாகக் கூறுவார்கள். தங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, வெகுமக்களின் விருப்பம் அறிந்து அவர்களுக்குப் பிடிக்கிற விதமாக சினிமா எடுக்கும் படைப்பாளிகள் முதல் வகை. இவர்கள் ஜனரஞ்சக இயக்குநர்கள் எனப்படுவார்கள். இவர்களது படங்கள் தான் பிரமாதமாக கல்லா கட்டும். அடுத்து, வெகுமக்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அது பற்றி கவலைப்படாமல், தங்களுக்குப் பிடிக்கிற விதத்தில் சினிமா எடுக்கும் படைப்பாளிகள் இரண்டாவது வகை. இவர்கள் ஆர்ட் பிலிம் இயக்குநர்கள் எனப்படுவார்கள். இவர்களது படங்கள் கல்லாவை நிரப்பாது. ஆனால், பாராட்டுகளையும் விருதுகளையும் நிச்சயம் பெறும். அடுத்து, பாக்ஸ் ஆபீஸில் வசூலையும், திரைப்பட விழாக்கள் மற்றும் அரசுகள் தரும் விருதுகளையும் ஒருசேர வாரிக் குவிக்கும் சினிமா எடுக்கும் படைப்பாளிகள் மூன்றாவது வகை. இவர்கள் தரமான, அதே நேரத்தில் வெற்றிகரமான இயக்குநர்கள் என கொண்டாடப்படுவார்கள். தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘பர்த் மார்க்’ திரைப்படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் எந்த வகைப் படைப்பாளி? பார்ப்போம்…

0a1b

பா.இரஞ்சித்தின் ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் டான்ஸிங் ரோஸாக நடித்து புகழ் பெற்ற ஷபீர் கல்லரக்கலும், நெல்சன் திலீப்குமாரின் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து கவனம் பெற்ற மிர்னாவும் ’பர்த் மார்க்’ படத்தின் ஆரம்பத்தில் தத்தமது கண்களைக் கட்டிக்கொண்டு, காட்டுக்குள் துளாவியபடி அலைந்து திரிந்து, ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டவுடன், கண் கட்டுகளை அவிழ்த்துக்கொள்ள, அங்கே அவர்களுக்கு திருமணம் நடந்தேறுகிறது. அதாவது, ஒருவரைப் பற்றி ஒருவர் அறியாத நிலையில் அவர்களுக்கு திருமணம் நடத்தப்பட்டு விடுகிறது என்பது இதன் பொருள்.

உண்மையில், 1999-ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த கார்கில் போரில் பங்கேற்ற ராணுவ வீரரான ஷபீர், போருக்குப் பிந்தைய ’Post War Trauma’ எனும் உளவியல் சிக்கலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் பல்வேறு குழப்பமான சிந்தனைகள் அவருக்கு வந்து செல்கின்றன. எனினும், மனைவி மிர்னாவிடம் மிகவும் அன்பாக இருக்கிறார்.

மிர்னா கர்ப்பம் தரிக்கிறார். அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும்போது அவரைக் கூட்டிக்கொண்டு, கணவர் ஷபீர் காட்டுக்குள் பயணிக்கிறார். மிர்னாவுக்கு இயற்கையான முறையில் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, கேரளா அருகிலுள்ள மலைகிராமம் ஒன்றுக்கு அழைத்துப் போகிறார். அங்கு இயற்கையான முறையில் பிரசவம் பார்க்கும் மையமான ‘தவந்திரி பர்த்திங் வில்லேஜ்’ என்ற மையம் இருக்கிறது.

அங்கு ஷபீர் தன்னுடைய உளவியல் சிக்கலுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே, தன் மனைவியை கவனித்துக் கொள்கிறார். இயற்கை முறையில் பிரசவிப்பதற்கான உடற்பயிற்சிகள் மிர்னாவுக்கு அளிக்கப்படுகின்றன. ஆனால் அவருக்கோ  அந்த புதிய இடம் பயத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. சாலை வசதி மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை மருத்துவ வசதிகள் எதுவும் அங்கு இல்லாததால், பிரசவத்தை நினைத்து அஞ்சுகிறார்.

அந்த மையத்தில் சிகரெட் மற்றும் மது குடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடையை மீறி சிகரெட்  பிடிக்கிறார் கணவர் ஷபீர். இதை தட்டிக் கேட்ட மைய ஊழியரோடு தகராறு செய்து அவரை கொல்ல முயற்சி செய்கிறார். இரவு நேரத்தில் நிறைமாத கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு அவ்வப்போது வெளியே செல்கிறார். இதனால் மிர்னாவுக்கு மேலும் சந்தேகம் ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில், மிர்னாவின் வயிற்றில் இருப்பது தன்னுடைய குழந்தை இல்லை என்கிறார் கணவர் ஷபீர். அதை கேட்டு  மிர்னா அதிர்ச்சி அடைகிறார். இந்த குழந்தைக்குப் பதிலாக நாம் வேறொரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று ஷபீர் கூற, பயந்து நடுங்குகிறார் மிர்னா.  தன் குழந்தையைக் கொன்று விடுவார் என்ற பயத்தில், ஷபீரை குடிசையில் வைத்துப் பூட்டி தீ வைத்துவிட்டு தப்பிச் செல்கிறார்.

தீ பற்றி எரியும் குடிசையிலிருந்து தப்பி வெளியேறும் ஷபீர், மிர்னாவைத்  துரத்துகிறார்.  மிர்னாவுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அதே நேரத்தில் அவரை ஷபீர்  தாவிப் பிடிக்கிறார். அடுத்து என்ன நடந்தது? ஷபீர் மிர்னாவை என்ன செய்தார்? மிர்னாவுக்கு குழந்தை பிறந்ததா? அதை சபீர் என்ன செய்கிறார்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது ’பர்த் மார்க்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ்.

போர் முடிந்து, போர் முனையிலிருந்து வீடு திரும்பும் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், அதனால் ஏற்படும் தேவையற்ற பயம், பதற்றம், சந்தேகம் உள்ளிட்ட உளவியல் சிக்கல்களை தனது அற்புதமான நடிப்பின் மூலம் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஷபீர். படத்துக்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து வித்தியாசமாக நடிக்கும் ஷபீரை திரையுலகம் இன்னும் நன்றாக, இன்னும் அதிகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஷபீரை விடவும் சவாலான கதாபாத்திரம் மிர்னாவுக்கு. அவ்வளவு பெரிய வயிற்றுடன் காடு மேடெல்லாம் அலைந்து சுகப்பிரசவத்துக்கு வந்த இடத்தில், ஒவ்வொருவரும் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து பதற்றப்பட்டு பயந்து, ஒரு கட்டத்தில் கணவனையே பார்த்து பயந்து நடுங்கி, ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க அவர் படும் பாடு நம் இதயத்தைப் பிசைகிறது. மிர்னாவின் அர்ப்பணிப்புடன் கூடிய அபார நடிப்புக்கு இந்தப் படம் விருதுகளைப் பெற்றுத் தரும்.

வாய் பேச இயலாத செபாஸ்டின் கதாபாத்திரத்தில் வரும் இந்திரஜித், தவந்திரி பர்த்திங் மையத்து அம்முலு கதாபாத்திரத்தில் வரும் தீப்தி, மருத்துவர் ஆஷா கதாபாத்திரத்தில் வரும் பொற்கொடி உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன். சாதாரண பார்வையாளர்களுக்குப் பிடிக்குமா என்றெல்லாம் யோசிக்காமல், தனக்குப் பிடித்த விதத்தில், தனக்குப் பிடித்த ஸ்டாண்டர்டில் படத்தைப் படைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இயக்குநரின் விருப்பம் அறிந்து, அதற்கேற்ப பணிபுரிந்திருக்கிறார்கள்.

ஜனரஞ்சகமான திரை மொழியில் பேசாமல், கடினமான குறியீடுகள் மூலம் பேசும் இந்தப்படம், வெகுமக்களை சென்றடைவது கடினம் என்பதால், கல்லாவை நிரப்புமா என்பது சந்தேகமே. ஆனால், சோல்னாப் பை விமர்சகர்களின் பாராட்டுகளையும், விருதுகளையும் பெறும் என்பது நிச்சயம்.

‘பர்த் மார்க்’ – என்ன தான் இருக்கிறது படத்தில் என்பதை தெரிந்து கொள்வதற்காகவாவது ஒருமுறை பார்க்கலாம்!