உயிரே உயிரே – விமர்சனம்

இந்தியிலும் தெலுங்கிலும் வெற்றி பெற்ற ‘இஷ்க்’ படத்தின் தமிழ் மறுஆக்கம் தான் பிரபல நடிகை ஜெயப்ரதாவின் மகன் நாயகனாக அறிமுகமாகியுள்ள இந்த ‘உயிரே உயிரே’.

நாயகன் சித்து சென்னை வருவதற்காக மும்பையில் விமானம் ஏறுகிறார். அதே விமானத்தில் நாயகி ஹன்சிகாவும் பயணிக்கிறார். சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானம் திடீரென்று கோவாவில் தரையிறங்கிவிட, அங்கே நடக்கும் சம்பவங்களால் சித்து – ஹன்சிகா இருவரது மனதிலும் காதல் மலர்கிறது.

சென்னையில் இறங்கியதும் ஹன்சிகாவிடம் தனது காதலைச் சொல்ல சித்து முயற்சிக்கும்போது, அவரது அண்ணனைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகி தனது காதலை மறைத்துவிடுகிறார். பிறகு ஹன்சிகா தனது காதல் குறித்தும், சித்து குறித்தும் அவரது அண்ணனிடம் சொல்ல, அவரது அண்ணனோ, ”நீ யாரை வேண்டுமானாலும் காதலி. நான் சேர்த்து வைக்கிறேன், இவன் மட்டும் வேண்டாம்” என்று சித்துவுடனான காதலுக்கு தடைபோட, இந்த தடையை மீறி ஹன்சிகா தனது காதலருடன் சேர்ந்தாரா, இல்லையா? சித்துவுக்கும் ஹன்சிகாவின் அண்ணனுக்கும் இடையே என்ன பிரச்சனை என்பது படத்தின் மீதிக்கதை.

ஒரு ஹீரோவுக்கு உரிய தோற்றத்தில் இருக்கும் அறிமுக நாயகன் சித்து நடனம், ஆக்‌ஷன் என அமர்க்களப்படுத்துகிறார். ஆனால், நடிப்பில் எந்தவிதமான வலிமையையும் காட்டவில்லை. மேலும், அவருக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் வாய்ஸ், ஆண்மைத் தன்மையை வெளிப்படுத்தாமல், குழந்தை பேசுவது போல உள்ளது.

ஹன்சிகா வழக்கம் போல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, அளவாக நடித்திருக்கிறார்.

ஹன்சிகாவின் அண்ணனாக வரும் நரேன் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்.

இவர்களைத் தவிர, படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்களும் நடிப்பும் சொல்லும்படியாக இல்லை.

அனுப் ரூபனின் இசையில் ’அழகே அழகே…” என்ற மெலொடி பாடல் அருமை. மற்ற பாடல்கள் சுமார் ரகம். தான்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணை கவர்கின்றன. எனினும் கோவா, ஆலப்புழா போன்ற லொக்கேஷன்களின் அழகை அவர் இன்னும் சிறப்பாக காட்டியிருக்கலாம்.

ஹன்சிகா – சித்து காதல் காட்சிகள் ரசிக்கும்படி சொன்னதற்காக இயக்குனரை பாராட்டலாம். படத்தில் வரும் அண்ணன் டிவிஸ்ட் சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், இறுதியில் என்ன நடக்கப்போகிறது என்பதை இயக்குநர் முன்பே சொல்லிவிடுவதால், படத்தில் எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது. காமெடி காட்சிகளில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

குறைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் –

‘உயிரே உயிரே’ – உயரத்தில்!