தேமுதிக தவிர்த்து மக்கள்நல கூட்டணி அழைத்தால் ஆதரவு: சுப.உதயகுமாரன்

தேமுதிக தவிர்த்து, மக்கள் நலக் கூட்டணி அழைத்தால் ஆதரவு அளிப்போம்’ என்று பச்சை தமிழகம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பச்சை தமிழகம் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சுப. உதயகுமாரன் திருநெல்வேலியில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

ஆபத்தான கூடங்குளம் அணுமின் நிலையங்களை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். கடலுக்கும், கடலோடிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் தாதுமணல் ஆலைகள், ரசாயன ஆலைகள் அமைவது தடுக்கப்படும். சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பவை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன. அந்த அறிக்கை ராதாபுரம் மக்களோடு செய்துகொள்ளும் ஒப்பந்தம் என்று உதயகுமாரன் குறிப்பிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தை ஆள்வதற்கான அடிப்படை தகுதி விஜயகாந்துக்கு கிடையாது. அவரை முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது. திருமாவளவன், வைகோ ஆகியோர் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான எங்களது போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதனால், தேமுதிகவை தவிர்த்து, மக்கள் நலக் கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகள் அழைத்தால் ஆதரவு கொடுப்போம்.

தலித்துகளுக்கு எதிராக அரசியல் செய்யும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. எனவே அக்கட்சியை நாங்கள் ஆதரிக்கவில்லை. பச்சைத் தமிழகம் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது என்றார் உதயகுமாரன்.