மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி நயன்தாரா!

சிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘ரெமோ’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துவரும் இப்படத்தை 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. மேலும், இப்படத்தின் பாடல்களை மே மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

‘ரெமோ’ படத்தைத் தொடர்ந்து 24AM ஸ்டுயோஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். மோகன் ராஜா இயக்க இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறது.

மேலும், சிவகார்த்திகேயனுடன் நடிக்க இருப்பவர்களுக்கான தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.