“பெருந்தன்மை” (நாடா) புயல் நாளை கடலூர் அருகே கரையை கடக்கிறது!

சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து புயலுக்கு பெயர் வைக்கும் முறையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த நவம்பரில் உருவான புயலுக்கு ‘கியாந்த்’ என மியான்மர் நாடு பெயரிட்டது.

தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு ‘நாடா’ என்ற பெயரை ஓமன் நாடு சூட்டியுள்ளது. ‘நாடா’ என்பதற்கு ஓமன் மொழியில் ‘பெருந்தன்மை’ என்று பொருள்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த “பெருந்தன்மை” (நாடா) புயல் வலுவிழந்துள்ள நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை புதுச்சேரி – வேதாரண்யம் இடையே, கடலூர் அருகே, கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘நாடா’ புயல் 6 மணி நேரத்தில் மணிக்கு 28 கி.மீ. வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

புதுச்சேரியில் இருந்து 270 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள ‘நாடா’ புயல் வலுவிழந்து வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது” என்றார்.