டார்லிங் 2 – விமர்சனம்

தற்கொலை செய்துகொண்ட ஒரு காதல் ஜோடி, தங்களது நண்பனின் துரோகத்தால் தான் தங்கள் காதல் தோற்றது என்று நினைத்து, ஆவியாக வந்து நண்பனைப் பழிவாங்கத் துடிப்பதுதான் ‘டார்லிங் 2’ படத்தின் அடிப்படை கதை.

கலையரசன், காளி, ரமீஸ், அர்ஜூனன், ஹரி, ராம் ஆகிய ஆறு நண்பர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். இவர்களில் ராம் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்கிறார். ஒரு வருடத்திற்குப் பிறகு, கலையரசனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. எனவே ‘பேச்சலர் பார்ட்டி’ கொண்டாட நண்பர்கள் வால்பாறைக்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கு அவர்கள் ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கியிருக்கும்போது, மரணமடைந்த நண்பர் ராம் ஆவியாக வந்து பயமுறுத்துகிறார். தன் மரணத்திற்கு காரணம் அந்த நண்பர்களில் ஒருவர்தான் என நினைத்து அவரை கொல்ல நினைக்கிறார். அவருடன் அவரது காதலி ஆவியும் சேர்ந்து கொள்கிறது.

ஒரு கட்டத்தில் கலையரசனின் உடலுக்குள் புகுந்துகொள்ளும் ராமின் ஆவி, கலையரசனை கொல்லப்போவதாக மிரட்டுகிறது. இதை அறிந்த மற்ற நண்பர்கள் என்ன செய்தார்கள்? கலையரசனால் ஆவிகளிடமிருந்து தப்பிக்க முடிந்ததா? என்பது மீதிக்கதை.

நண்பர்களாக வரும் அனைவரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். கண்களில் ஒளி கக்கப் பேயாக வருவது, பேயாகவும் நண்பனாகவும் மாறி மாறிப் பேசுவது என கலவரப்படுத்திவிட்டார் கலையரசன். அவர் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் காட்சிகள் அருமை.

காளியும், ஹரியும் அச்சத்தை அபாரமாக வெளிப்படுத்துகிறார்கள். ரமீஸ், ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார். இனி வாய்ப்புகள் அவரை தேடி வரலாம்.

இவர்களுடன் வால்பாறை வரதன் முனீஸ்காந்தும் சேர்ந்துகொண்டு, படத்துக்கு உரமூட்டி இருக்கிறார்.

நாயகி மாயா அழகாக இருக்கிறார். கண்களால் நட்பு பேசி, உதடுகளால் காதல் பேசுகிறார். ஒருவேளை இவருக்காகத்தான் ‘டார்லிங்’ என்று தலைப்பு வைத்தார்களோ என்னவோ…?

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

பொதுவாக பேய் படம் என்றால் இசைதான் மிரட்டும். இதிலும் அப்படித்தான். ரதன் இசையமைப்பில் பயம் நம்மை தொற்றிக் கொள்கிறது. ‘சொல்லட்டுமா’ பாடல் மனதை வருடுகிறது.

தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி, ஆவியாக வந்து பழிவாங்குவதற்கான காரணம் பொருத்தமாக இருக்கிறது. வால்பாறையில் பெரிய பங்களா, ஆறு, அடர்ந்த காடு, மிரட்டும் காட்டு யானை என்று கதைக்கான களம் அருமையாக அமைந்திருக்கிறது. இந்த களத்தையும், திறமையான நடிகர்களையும் வைத்துக்கொண்டு புகுந்து விளையாடி இருக்கிறார் இயக்குனர் சதீஸ் சந்திரசேகர். ராமைச் சுற்றியே செல்லும் திரைக்கதை ஆயிஷாவைப் பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்துவது சுவாரஸ்யமாக உள்ளது. கலையரசன் ஒரு கட்டத்தில் தன் உயிரைத் தர முன்வருவது மனதைத் தொடுகிறது. நட்பையும் காதலையும் காப்பாற்றும் விதத்தில் அமைந்திருக்கும் கடைசித் திருப்பம் பாராட்டத்தக்கது. பாராட்டுக்கு உரியவர் இயக்குனர்.

விளையாட்டாக செய்யும் சில விஷயங்கள் விபரீதமாய் மாறி மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும் என்ற இப்படத்தின் கருத்து பசுமரத்து ஆணி போல் மனதில் பதிகிறது.

‘டார்லிங் 2’ – திக்… திக்… திக்…!

Read previous post:
0a1b
ஹலோ நான் பேய் பேசுறேன் – விமர்சனம்

தமிழ் திரையுலகம் பேய்களின் உலகமாக மாறி வெகுநாட்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விதவிதமான பேய்கள் புறப்பட்டு வந்து ரசிகர்களுக்கு திகிலூட்டியும், சிரிக்க வைத்தும் கண்டெய்னர் கண்டெய்னராக கல்லா

Close