கன்னா பின்னா – விமர்சனம்

கதையில், நாயகி அஞ்சலி ராவுக்கு திரைப்பட இயக்குனராக வேண்டும் என்பது லட்சியம். இவரைப் போலவே ஒளிப்பதிவாளராக வேண்டும், இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவுகளோடு அவரது நண்பர்களும் உடனிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள்.

நாயகி ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்வதற்காக செல்கிறார். அந்த தயாரிப்பாளர், ஆக்ஷன், செண்டிமெண்ட் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடியான ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள், படம் பண்ணலாம் என்று கேட்கிறார். நாயகியும் தன்னிடம் ‘கன்னா பின்னா’ என்ற தலைப்பில் ஒரு காமெடி கதை இருப்பதாக அவரிடம் கூறுகிறார்.

தலைப்பிலேயே மயங்கிப்போன தயாரிப்பாளர் மேற்கொண்டு அவரிடம் கதை கேட்காமல், அட்வான்ஸ் தொகையாக ரூ.5 லட்சத்தை கொடுத்து, அவரை ஒப்பந்தம் செய்கிறார். வீட்டுக்கு திரும்பிய நாயகி, தனது நண்பர்களிடம் நடந்ததை சொல்கிறார். கதையே இல்லாமல் கதை இருப்பதாக பொய் சொல்லி தயாரிப்பாளரிடம் பணம் வாங்கி வந்திருப்பதாக நாயகி ஒரு குண்டை போடுகிறார்.

இருப்பினும், தயாரிப்பாளர் கொடுத்த தேதிக்குள் ஒரு காமெடி கதையை தயார் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மூன்று பேரும் கதை தேடி புறப்படுகிறார்கள். அப்போது, நாயகன் தியா நாயரை சந்திக்கிறார்கள். பஸ் ஸ்டாண்டில் சாக்லேட் கொடுத்து பெண்களை தன்னை காதலிக்கும்படி கெஞ்சும் நாயகனை பார்த்ததும், அவனை சுற்றி வந்தால் ஒரு காமெடி கதை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவனை பின்தொடர முடிவு செய்கிறார்கள்.

இறுதியில் அவர்களுக்கு நல்ல கதை கிடைத்து, படம் எடுத்தார்களா? நாயகனைச் சுற்றி எந்த மாதிரியான சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதை நகைச்சுவையுடன் சொல்ல கடுமையாக முயற்சி செய்திருக்கும் படம்தான் ‘கன்னா பின்னா’.

இப்படத்தின் நாயகன் தியா நாயர்தான் இயக்குனரும்கூட. படம் முழுக்க அவர் வெகுளித்தனத்துடன் நடித்திருக்கிறார். எந்தளவுக்கு வெகுளித்தனம் என்றால், பேஸ்புக் கணக்கை தொடங்குவதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்யக்கூடிய அளவுக்கு வெகுளியான ஆள். வில்லத்தனமான கதாபாத்திரத்திற்கு பொருந்தக்கூடிய உடலமைப்பை வைத்துக்கொண்டு கோமாளித்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்க்கும்போது ஏனோ ரசிக்க முடியவில்லை.

அதேபோல் நாயகி அஞ்சலி ராவ், படத்தை பார்ப்பவர்களின் வேதனை தெரியாமல், அடிக்கடி வந்து சிரித்து பார்ப்பவர்களை மேலும் வெறுப்பேற்றியிருக்கிறார். வில்லனாக வரும் சிவாவுக்கு வில்லத்தனமான கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடலமைப்பு இருந்தும், இவருடைய நடிப்புக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லாதது வருத்தம். இனிவரும் படங்களில் தனக்கு பொருந்தக்கூடிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தால் சிறப்பாக இருக்கும்.

நாயகனின் நண்பர்களாக வருபவர்களும், நாயகியின் நண்பர்களாக வருபவர்களும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்தில் வரும் நிறைய கதாபாத்திரங்களும் ஜிம்மில் ஓர்க் அவுட் பண்ணியவர்கள் போல கட்டுமஸ்தான உடம்புடனே வருகிறார்கள். அந்த உடம்பை வைத்துவிட்டு காமெடி பண்ணுவதுபோல் நடிக்க முற்படும்போது அது எடுபடாமல் போய்விடுகிறது. இயக்குனர் தியா நாயர் படத்தின் தலைப்புக்கேற்றவாறு கன்னா பின்னாவென்று படத்தை எடுத்து வைத்திருக்கிறார்.

ரோஷன் சேதுராமன் இசையில் ‘லிங்கரி மிட்டாய்’ பாடல் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், அதை படமாக்கியவிதம் அபத்தம். மற்ற பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜெரால்டு ராஜமாணிக்கத்தின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம்தான்.

‘கன்னா பின்னா’ – கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு பார்க்கலாம்!

Read previous post:
0
ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் போட்டி!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த ஓபிஎஸ் அணி ஆட்சி மன்றக்

Close