கட்டப்பாவ காணோம் – விமர்சனம்

“நாய்கள் ஜாக்கிரதை” படத்தில் நாயுடன் நடித்து மகத்தான வெற்றி பெற்ற சிபிராஜ், வாஸ்து மீனுடன் இணைந்து நடித்துள்ள ‘கட்டப்பாவ காணோம்’ படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்…

பல தொழில்கள் செய்தும் முன்னேற முடியாமல் நஷ்டமடையும் சித்ரா லட்சுமணன், கடைசியில் ஜோதிடராக மாறி விடுகிறார். அவரது மகன் நாயகன் சிபிராஜ், “ராசி இல்லாதவர்” என்ற அவப்பெயரை சிறுவயதில் இருந்தே சுமந்து திரிகிறார்.

ஒருநாள் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷை கிளப்பில் பார்க்கிறார் சிபிராஜ். இருவரும் நட்புடன் பேசி நெருக்கம் கொள்கிறார்கள். “நான் ராசி இல்லாதவன்” என்று சிபிராஜ் சொல்ல, அந்த அப்பாவித்தனம் பிடித்துப்போய் அவரை காதலிக்கத் தொடங்குகிறார் ஐஸ்வர்யா. நாளடைவில் இருவரும் காதலர்கள் ஆகிறார்கள்.

“ராசி சரியில்லை” என்று சொல்லி இவர்களது திருமணத்துக்கு தடை போடுகிறார் சித்ரா லட்சுமணன். அதை பொருட்படுத்தாத காதலர்கள், திருமணம் செய்துகொண்டு, தனியாக வீடு பிடித்து குடியேறுகிறார்கள்.

இதற்கிடையே, பெரிய தாதாவாக இருக்கும் மைம் கோபி, ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உடையவர். இவர் ஒரு வாஸ்து மீன் வளர்த்து வருகிறார். அந்த மீனின் பெயர் – கட்டப்பா. வாஸ்து மீனான கட்டப்பா தன்னுடன் இருப்பதால் தான் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மைம் கோபி.

ஒரு நாள் கட்டப்பாவை திருடிச் செல்லும் யோகி பாபு, அதை தண்ணி லாரியில் போட்டு விடுகிறார். இறுதியில், வளர்ப்பு மீன்கள் கடை வைத்திருக்கும் லிவிங்ஸ்டன் வசம் கட்டப்பா சென்று சேர்ந்துவிடுகிறது. விமான பணிப்பெண்ணான சாந்தினி, கட்டப்பாவை வாங்கிக்கொண்டு போய், தனது பால்ய சினேகிதனான சிபிராஜூக்கு பரிசாக கொடுக்கிறார்.

இப்படியாக, ராசி இல்லாத சிபிராஜூக்கு, ராசியான கட்டப்பா கிடைக்கிறது. அதன்பின் சிபிராஜ் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன? களவுபோன கட்டப்பாவை கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பி தேடுதல் வேட்டை நடத்தும் மைம்கோபி, கட்டப்பாவை மீட்டாரா? என்பது மீதிக்கதை.

நாயகன் சிபிராஜ் ஹீரோயிசம், ஆக்ஷன் என்றெல்லாம் உதார் காட்டாமல், கதைக்குள் கதாநாயகனாக, முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அசத்தியிருக்கிறார். கதைக்கு தேவையான நடிப்பை மட்டும் கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.

மார்டன் பெண்ணாக வரும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மதுபானம் அருந்துவது, ஆபாசமான இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது என துணிச்சலாக நடித்து, ரசிகர்களுக்கு பயங்கர ஷாக் கொடுத்திருக்கிறார்.

விமான பணிப்பெண்ணாக வரும் சாந்தினி, கலகலப்பை வாரி இறைத்து ரசிக்க வைக்கிறார். மைம் கோபி வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

காளி வெங்கட்டும், யோகி பாபுவும் நகைச்சுவைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். சித்ரா லட்சுமணன், களவாணி திருமுருகன், டிடெக்டிவ் சரவணன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரம் உணர்ந்து தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் மணி சேயோன், வாஸ்து மீன் என்ற மூட நம்பிக்கையை மையமாக வைத்து, அதைச் சுற்றி கதை பின்னி, நகைச்சுவையோடு படத்தை நகர்த்திக்கொண்டு போயிருக்கிறார். வலிந்து திணித்த ஆபாசமான இரட்டை அர்த்த வசனங்களை தவிர்த்திருந்தால், குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் படமாக இது இருந்திருக்கும்.

ஆனந்த் ஜீவாவின் ஒளிப்பதிவு, காட்சிகளை அழகாக காட்டியிருக்கிறது. வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளை எல்லாம் தேவையான ஒளியில் படமாக்கி கைதட்டல் பெறுகிறார். பாடல் காட்சிகள் குளுமையாக இருக்கிறது.

சந்தோஷ் குமார் தயாநிதியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

‘கட்டப்பாவ காணோம்’ – ராசியை நம்பும் ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து!