காதலும் கடந்து போகும் – விமர்சனம்

தென்கொரியப் படங்களை டிவிடியில் பார்த்து, அவற்றை திருட்டுத்தனமாக உல்டா செய்து தமிழ் படங்களாகக் கொடுத்து, “புதுமை இயக்குனர்” என போலியாய் பெயர் வாங்கி மார் தட்டித் திரியும் அரைவேக்காடுகள் மத்தியில், ‘மை டியர் டெஸ்பரடோ’ எனும் தென்கொரியப் படத்தின் உரிமையை ரூ.40 லட்சத்துக்கு அதிகாரப்பூர்வமாக வாங்கி, அதை தமிழ் சூழலுக்கேற்ப மறுஆக்கம் செய்திருக்கிறார் இயக்குனர் நலன் குமரசாமி. ‘சூது கவ்வும்’ படத்தை அடுத்து அவருக்கு இது இரண்டாவது படம்; அவரும், விஜய் சேதுபதியும் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம்; ‘பிரேமம்’ மலையாளப் படத்தில் செலின் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை வாரிக் குவித்த மடோனா செபாஸ்டியன் தமிழில் அறிமுகமாகும் படம் என பல சிறப்புகளைத் தாங்கி வெளிவந்திருக்கிறது ‘காதலும் கடந்து போகும்’.

பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடும் புதுமைப் பெண்ணுக்கும், ‘பார்’ ஓனராக வேண்டும் என்ற லட்சியத்துடன் தாதா உலகத்துக்குள் தவிக்கும் சாதாரண இளைஞனுக்கும் இடையிலான உறவை யதார்த்தமாய், அழகாய், மனதை கொள்ளை கொள்ளும் விதமாய் சித்தரிக்கிறது இந்த படம். அந்த புதுமைப் பெண் யாழினி (மடோனா செபாஸ்டியன்). அந்த இளைஞன் கதிரவன் (விஜய் சேதுபதி).

விழுப்புரத்தைச் சேர்ந்தவள் யாழினி. அப்பா ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். வசதிக்கு ஒன்றும் குறைவில்லை. எனினும், சுயசம்பாத்தியத்தில் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறாள் யாழினி. மகளை வெளியூருக்கு அனுப்ப பெற்றோர்கள் அஞ்சுவதால், உள்ளூரில் உள்ள ஒரு மொக்கை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடித்திருக்கும் அவள், வேலை தேடி, பெற்றோர்களின் எதிர்ப்பையும் கடந்து சென்னைக்கு வருகிறாள். அவளுக்கு வேலை கொடுக்கும் ஒரு மொக்கை ஐடி நிறுவனம் மூன்றே மாதங்களில் திவாலாகிவிட, செய்வதறியாது பரிதவிக்கிறாள். மீண்டும் வேலை தேடி அலைகிறாள். பிரபலம் இல்லாத கல்லூரியில் படித்தது, வேலையில் முன்அனுபவம் இல்லாதது போன்ற காரணங்களால் அவளுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. திரும்ப வீட்டுக்குப் போனால் விழுப்புரத்தைத் தாண்டி வேலைக்குப் போக பெற்றோர்கள் விடமாட்டார்கள் என்பதால், சென்னையிலேயே ஒரு அப்பார்மெண்டில் குறைந்த வாடகையில் ஒரு ஃபிளாட்டில் தங்கி வேலை தேடும் படலத்தைத் தொடருகிறாள்.

எதிர்ஃபிளாட்டில் குடியிருக்கிறான் கதிரவன். அப்பாவி. “செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டு ஜெயிலுக்குப் போய் வா; நீ வெளியே வந்ததும் உன்னை பார் ஓனர் ஆக்குகிறேன்” என்று லோக்கல் தாதா உறுதியளித்ததின் பேரில் சிறைக்குச் சென்று தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்திருப்பவன். “அண்ணா, சொன்னபடி என்னை பார் ஓனர் ஆக்கு’ண்ணா” என்று அவ்வப்போது லோக்கல் தாதாவிடம் கெஞ்சிக் கொண்டிருப்பவன்.

கதிரவனுடன் யாழினிக்கு ஏற்படும் அறிமுகமே முற்றிலும் கோணலாக அமைகிறது. தொடரும் சுவாரஸ்யமான மோதல்களுக்குப்பின் இருவரும் சேர்ந்து சரக்கடிக்கும் அளவுக்கு நட்பு ஏற்படுகிறது. இவர்களுக்குள் காதல் மலர்ந்ததா? அது கடந்து போய்விடுகிறதா? இருவரும் தத்தமது லட்சியத்தை அடைவதில் வெற்றி பெற்றார்களா? என்பது மீதிக்கதை.

எதார்த்தமான கதை. சினிமாத்தனம் இல்லாத கதை மனிதர்கள்.

நடை, உடை, பாவனை, உடல் மொழி, ஃபெர்பாமன்ஸ் என எல்லாவற்றிலும் விஜய் சேதுபதி கதிரவன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். படத்தை தன் அசாத்திய நடிப்பால் தூக்கி நிறுத்தியுள்ளார்.

.படத்திற்கு மிகப் பெரிய பலம் நாயகி மடோனா செபாஸ்டியன். ஸ்கோர் செய்ய அவருக்கு நிறைய வாய்ப்புகள். அத்தனை வாய்ப்புகளையும் மிகச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். அழகும், நடிப்பாற்றலும் கொண்ட இவரை, தமிழ் சினிமா அத்தனை சீக்கிரம் கேரளாவுக்கு திருப்பி அனுப்பாது என நம்பலாம்.

சமுத்திரக்கனிக்கு மூன்றே மூன்று காட்சிகள் தான். வழக்கம் போல வந்து போகிறார்.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் அட்டகாசம். மோகன்ராஜன் வரிகளில் கககபோ பாடல் ரசிக்க வைக்கிறது.

நல்ல கதை, தரமான ஒளிப்பதிவு, கலக்கல் இசை என்று எல்லாவற்றையுமே சிறப்பாக வைத்து, மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார் இயக்குனர் நலன் குமரசாமி.

ரொமான்டிக் காமெடி டிராமா ஜானரில் காட்சிகள் மெதுவாக நகர்வதை குறையாகச் சொல்ல முடியாது. ஆனால், திரைக்கதையை இன்னும் கொஞ்சம் செதுக்கி இருக்கலாம். படத்தின் இறுதிக்காட்சியான பெட்ரோல் பங்க் காட்சியை தூக்கி வீசிவிட்டு, அதற்கு முந்தைய காட்சியுடன் படத்தை முடித்திருக்கலாம்.

எனினும், காதலை தமிழ் சினிமா படுகேவலமாக ரொமாண்டிஸைஸ் பண்ணிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், ‘காதலும் கடந்து போகும்’ என்று தலைப்பு வைப்பதற்கே தில் வேண்டும். மேலும், காதலை “தேவலோக சமாச்சாரமாக” நெக்குருகிச் சொல்லாமல், மனித வாழ்க்கையின் யதார்த்தமாக, மிக இயல்பாக நகர்த்திச் செல்ல சரியான புரிதல் இருக்க வேண்டும். இந்த தில்லும், புரிதலும் இயக்குனர் நலன் குமாரசாமிக்கு இருப்பதால் அவருக்கு மீண்டும் ஒரு வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.

‘காதலும் கடந்து போகும்’ – நெஞ்சில் என்றும் நிற்கும்!