மாப்ள சிங்கம் – விமர்சனம்

கதாநாயகன் விமல், கதாநாயகி அஞ்சலி, சிரிப்பு நடிகர் சூரி – இவர்களை வைத்து, சமூக அரசியலறிவு கொஞ்சமும் இல்லாத அறிமுக இயக்குனர் ராஜசேகர், உலகத் தரம் வாய்ந்த திரைப்படத்தையா கொடுத்துவிட முடியும்? அக்குளுக்குள் கையைவிட்டு கிச்சுக்கிச்சு மூட்டி, ‘கெக்கெ பிக்கே’ என சிரிக்க வைக்கும் சிரிப்பு மசாலா படம் தானே கொடுக்க முடியும்? கொடுத்திருக்கிறார் ராஜசேகர். அதுதான் ‘மாப்ள சிங்கம்’.

வீரபாண்டியூரில் ஒரு கோயில் தேர் இருக்கிறது.  20 ஆண்டுகாலமாக அந்த ஊரில் பஞ்சாயத்து சேர்மனாக இருக்கும் செல்வந்தரான ராதாரவி, “கோயிலை நாங்கள் தான் கட்டினோம்; எனவே தேரை நாங்கள் தான் இழுப்போம்” என்று சொல்ல, அவரை எதிர்த்து ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய இன்னொரு செல்வந்தரான முனீஸ்காந்த், “கோயிலை கட்டியது அவர்கள் தான். ஆனால் கோயில் இருப்பது எங்கள் நிலத்தில். எனவே நாங்கள் தான் தேர் இழுப்போம்” என்று எதிர்வாதம் செய்ய, கோஷ்டி மோதல் வெடித்து, வழக்கம் போல் தேரோட்டம் தடைபடுகிறது என்ற சமாச்சாரத்துடன் படம் ஆரம்பமாவதால், “ஒரு முக்கியமான பிரச்சனையை கையில் எடுத்திருக்காய்ங்க” என நிமிர்ந்து உட்காருகிறோம். ஆனால், அதற்குப் பிறகு அந்த பிரச்சனையை அப்படியே போட்டுவிட்டு, கிச்சுக்கிச்சு மூட்ட போய்விடுகிறார் இயக்குனர்.

ராதாரவியின் தம்பி மகன் விமல். அவர் பெரியப்பா ராதாரவிக்கு பக்கபலமாக இருக்கிறார். ஊரில் யார் காதலித்தாலும் அவருக்கு பிடிக்காது. அடித்து உதைத்து அந்த காதல் ஜோடியை பிரித்துவிடுவார். அப்படிப்பட்டவர், முனீஸ்காந்தின் மாமா மகளான அஞ்சலியைப் பார்த்ததும் தொபுக்கடீர் என்று ஒருதலைக் காதலில் விழுகிறார். அதனால், பஞ்சாயத்து சேர்மன் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் அஞ்சலிக்கு ஆதரவாக இருக்கிறார்; வெற்றியை கோட்டை விடுகிறார்; அதுவே அஞ்சலிக்குள்ளும் காதலை கிளப்பிவிடுகிறது. இதற்கிடையில் ராதாரவி மகள் மதுமிளாவுக்கும், அஞ்சலியின் அண்ணன் விஷ்ணுவுக்கும் காதல்… என்றெல்லாம் வழவழா கொழகொழா என்று கதை எங்கெங்கோ போகிறது. படம் முடியும் தறுவாய் நெருங்கியவுடன் இயக்குனருக்கு தேர் சமாச்சாரம் ஞாபகத்துக்கு வந்துவிடுகிறது. காதலர்களான விமலையும், அஞ்சலியையும் சேர்த்து வைத்து, இருவரும் சேர்ந்து தேர் இழுக்க, தேரோட்டம் நடக்கிறது என்று படத்தை முடித்து அசடு வழிகிறார் இயக்குனர்.

மோதல் காரணமாக சில ஊர்களில் தேரோட்டம் வருடக்கணக்கில் தடைபட்டு இருக்கிறது என்பது கசப்பான உண்மை. இதற்கும் நமது சாதிய சமூக அமைப்பு மற்றும் அதன் படிவரிசை முறை ஆகியவற்றுக்கும் உள்ள தொடர்பு என்பது சிரிப்புக் காட்டி மூடி மறைக்கும் விஷயமல்ல. அதை நேர்த்தியாக கையாள ‘ஆதித்யா சேனல்’ பார்ப்பதால் முடியாது. சமூக அரசியல் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன என்பதுகூட இயக்குனர் ராஜசேகருக்கு தெரியாது என்பதற்கு அமெச்சூர்தனமான இந்த படமே சாட்சி. சிரிப்பு காட்டுவதுதான் நோக்கம் என்றால், இனி இதுபோன்ற பிரச்சனைகளை அவர் தொடாமல் இருப்பதே நல்லது.

பாத்திர படைப்புகளும், காட்சியமைப்புகளும் அருதபழசு. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!

வேலைவெட்டிக்குப் போகாமல் பெரியப்பாவுக்கு எடுபடியாக இருக்கும் கதாபாத்திரம் விமலுக்கு. அஞ்சலியைப் பார்த்து காதல் வயப்படுகிறார். சூரியுடன் சேர்ந்து சிரிப்பு காட்டுகிறார். வில்லனின் ஆட்களுடன் டிஷ்யூம் டிஷ்யூம் போடுகிறார். தமிழ் சினிமாவில் ஒரு சுமாரான ஹீரோ செய்யும் இந்த வழக்கமான வேலைகளை விமல் கச்சிதமாக செய்திருக்கிறார்.

அஞ்சலி சில காட்சிகளில் தடிமனாகவும், சில காட்சிகளில் ஸ்லிம்மாகவும் தெரிகிறார். படத்தில் அவர் வழக்கறிஞர் என்று சொல்லுகிறார்கள். ஆனால், ஒரு வழக்கறிஞராக அவர் ஒரு ஆணியையும் புடுங்கவில்லை. பின் ஏன் அவரை வழக்கறிஞராக காட்டினார் என்பது இயக்குனர் ராஜசேகருக்கே வெளிச்சம்.

சூரி, காளி, முனீஸ்காந்த் அவ்வப்போது வசன காமெடி பண்ணி சிரிக்க வைக்கிறார்கள். விமல் கோஷ்டியோடு திரியும் வெள்ளைக்காரர் பேசும் தமிழும், அவர் உதிர்க்கும் கருத்துக்களும் ரசிகர்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்துகின்றன.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. தருண்பாலாஜியின் ஒளிப்பதிவு குளிர்ச்சி.

‘மாப்ள சிங்கம்’ – ரெடிமேட் சிரிப்பு சிங்கம்!