ஒரு கனவு போல – விமர்சனம்
நாயகன் ராமகிருஷ்ணனும் – சவுந்தர ராஜாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். தாய், தந்தையை இழந்த சவுந்தரராஜா படிப்பை முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலைக்காக காத்திருக்கிறார். லாரி ஓட்டுநராக வரும் ராமகிருஷ்ணன் வீட்டிலேயே சவுந்தரராஜா வளர்ந்து வருகிறார். இருவரும் ஒருவருக்கொருவர் அன்போடு ஒருவரையொருவர் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமகிருஷ்ணனுக்கு நாயகி அமலா ரோஸை பெண் பார்க்க செல்கின்றனர். மாப்பிள்ளை லாரி ஓட்டுநர் என்பதால் ராமகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து கொடுக்க பெண் வீட்டார் மறுக்கின்றனர். ராமகிருஷ்ணனுக்கு பெண் பிடித்திருந்தால், அமலா ரோஸை சந்தித்து பேசும் சவுந்தர ராஜா இருவருக்கும் இடையேயான நட்பின் புனிதம் குறித்து கூற, அமலா திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.
இதையடுத்து ராமகிருஷ்ணனுக்கும், அமலாவுக்கும் திருமணமும் நடந்துவிடுகிறது. திருமணத்திற்கு பின்னர் தனியாக குடியேறும் ராமகிருஷ்ணன் தனது நண்பனை தனது வீட்டிலேயே சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துகிறார். ராமகிருஷ்ணனின் வற்புறுத்தலால் சவுந்தர ராஜா பெரும்பாலும் அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டு வருகிறார்.
ஒருநாள் வீட்டிற்கு உணவருந்த வந்த சவுந்தர் ராஜா மழை காரணமாக வெளியே செல்லமுடியாமல் ராமகிருஷ்ணன் வீட்டிலேயே தங்குகிறார். ராமகிருஷ்ணனுக்கு வேலையின் பளு காரணமாக வீட்டிற்கு வர தாமதமாகிறது. மழையால் ஏற்பட்ட ஒருவித உணர்ச்சியால் அமலாவை தொடுகிறார் சவுந்தரராஜா. தொட்டவுடன் அமலா பதறிக் கொண்டு எழுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் சவுந்தரராஜா அங்கிருந்து சென்றுவிடுகிறார். மேலும் தனது நண்பனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதை நினைத்து வருத்தம் கொண்டு மனம் நொந்து போகிறார்.
ராமகிருஷ்ணன் ஒரு படிக்காத லாரி டிரைவராவும், நட்புக்கு மரியாதை கொடுப்பவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நண்பன் மற்றும் மனைவி, மீது சந்தேகப்படாத கதாப்பாத்திரத்தை ஏற்று, அதை திறம்பட செய்திருக்கிறார். சவுந்தரராஜா ஒரு படித்த இளைஞராகவும், தனக்கு வாழ்க்கை கொடுத்த ராமகிருஷ்ணன் மீது மரியாதையும், பாசமும் கொண்டவராகவும் நடித்திருக்கிறார். செய்த தவறை எண்ணி, வருத்தப்படும் காட்சிகளில் நடிப்பில் முதிர்ச்சி பெற்றிருக்கிறார். நாயகி அமலா, குடும்பப்பெண்ணாக பொறுப்பான கதாபாத்திரத்தை ஏற்று பொறுப்புடன் நடித்திருக்கிறார்.
ஒரு ஆண், பெண் மீது ஏற்படும் சபலத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அதனால் ஏற்படும் பிரச்சனையும், நல்லவனாக இருந்தால் அந்த குற்ற உணர்ச்சியே அவனை கொன்று விடும் என்பதை மையக்கருவாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் சங்கர். இதில் நண்பர்களுக்குள் இருக்கும் ஆழமான நட்பையும், கணவன், மனைவிக்குள் இருக்கும் பாசத்தையும் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்.
ராம் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். அழகப்பனின் ஒளிப்பதிவும் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘ஒரு கனவு போல’ ஏக்கம்.