தப்பாட்டம் – விமர்சனம்

நாயகன் துரை சுதாகர் தனது மாமா மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து தப்பாட்டம் அடித்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். மாமாவின் போதைனைப்படியே அனைத்து காரியங்கையும் செய்யும் துரை சுதாகர், மாமா, நண்பர்களுடன் இணைந்து மதுக்டையே கதி என்று இருந்து வருகிறார். அவருக்கு திருமணமான அக்காவும், அக்காவின் இளம் பிராயத்து மகளான நாயகி டோனா ரோசாரியாவும் இருக்கின்றனர். அக்கா மற்றும் டோனா மீது மிகுந்த பாசத்துடன் இருக்கும் துரை சுதாகர் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறான்.

அதே ஊரில் முக்கிய நபர்களுள் ஒருவரான பண்ணையாரின் மகன் ஊர் சுற்றி வருவதோடு, அந்த ஊரில் வயதுக்கு வரும் இளம் பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறான். இதனாலேயே அந்த ஊர் மக்கள் வயதுக்கு வரும் பெண்களுக்கு உடனடி திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். அதே போல் வயதுக்கு வந்த நாயகி டோனா ரோசாரியாவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ய, டோனா அங்கிருந்து தப்பி ஓடி அவளது அம்மாவிடம் தெரிவிக்கிறாள்.

வேறு யாரிடமும் இதுகுறித்து கூறவேண்டாம் என்று அவளுக்கு திருமண ஏற்பாடுகளை தீவிரப்படுத்துகிறாள். இதையடுத்து துரை சுதாகருக்கும், டோனாவுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணமான சில மாதங்களில் டோனா கர்ப்பம் தரிக்கிறாள். ஒருநாள் சுதாகரின் மாமா வெளியூருக்கு சென்ற சமயத்தில், மதுக்கடையில் பண்ணையாரின் மகன், துரை சுதாகரின் திருமணத்திற்கு முன்பே அவனது மனைவியுடன் உறவு வைத்துக் கொண்டதாக கூற இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.

அவனது பேச்சைக் கேட்ட துரை சுதாகர், டோனாவிடம் முன்பு போல் இல்லாமல் சண்டை பிடிக்க ஆரம்பிக்கிறார். கடைசியில் இருவரும் பிரியும் நிலைக்கு செல்கின்றனர். தனது மகளின் வாழ்க்கையை நினைத்து டோனாவின் அம்மாவும் மனநோயால் இறந்து போகிறாள். இந்நிலையில், ஊரில் இருந்து வரும் துரை சுதாகரின் மாமா இருவரையும் சேர்த்து வைத்தாரா? துரை சுதாகருக்கு உண்மை தெரிந்ததா? மீண்டும் டோனாவுடன் வாழ்க்கை நடத்தினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.

பப்ளிக் ஸ்டார் என்ற பட்டத்தை கொண்ட துரை சுதாகர் தப்பாட்டம் அடிக்கும் இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நடை, பேச்சு என அனைத்துமே குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு ஒப்பாகவே இருந்தது சிறப்பு. முதல் பாகத்தில் விளையாட்டுப் பெண்ணாக இருக்கும் நாயகி டோனா ரோசாரியா, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுப்பு வந்தது போல் நடித்திருப்பது ஏற்கும்படியாக இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.

திருமணம் என்னும் பந்தத்திற்குள் கணவன் – மனைவியாக வாழும் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் யாரோ ஒருவர் சொல்வதை கேட்டு பலர் அவர்களது வாழ்க்கையை அவர்களே நாசம் செய்துவிடுகின்றனர். அதுபோன்று நடக்காமல் மனைவி மீது முழு நம்பிக்கை வைத்து வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்ற சமூகத்து தேவையான ஒரு கருத்தை பதிவு செய்திருக்கும் எஸ்.முஜிபுர் ரகுமானுக்கு பாராட்டுக்கள். இந்த காலகட்டத்திற்கு தேவையான குறுந்தகவலுடன் படத்தை மக்களிடம் சென்று சேர்த்திருக்கிறார்.

பழனி பாலுவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி வந்திருக்கிறது. பாடல்கள் வரும் இடங்களும் அந்த சூழ்நிலையை உணர்த்தும்படியாக இருப்பது சிறப்பு. ராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி வந்திருக்கிறது.

மொத்தத்தில் `தப்பாட்டம்’ ஆடக்கூடாது.