கட்டம் சொல்லுது – விமர்சனம்

நடிப்பு: தீபா சங்கர், எஸ்.ஜி.எழிலன், டி.திடியன் மற்றும் பலர்

எழுத்து – இயக்கம்: எஸ்.ஜி.எழிலன்

தயாரிப்பு: கண்ணா கணேசன் புரொடக்‌ஷன்ஸ்

இசை: தமீம் அன்சாரி

ஒளிப்பதிவு: ஜே.சபரிஸ்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சக்திகனி (தீபா சங்கர்) தன் மகளின் திருமணத்துக்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்துவருகிறார். அதாவது, திருமணத்துக்கான தேதியை நிர்ணயித்து, திருமண மண்டபத்துக்காரர், பந்தல்காரர், சமையல்காரர் உள்ளிட்டோருக்கு முன்பணம் கொடுத்து புக் செய்துவருகிறார். “மாப்பிள்ளை யார்?” என்று ஊர்க்காரர்கள் கேட்க, “இனிமேல் தான் பார்க்க வேண்டும்” என்று சொல்லி அதிர்ச்சி அளிக்கிறார். மாப்பிள்ளையே பார்க்காமல் எந்த நம்பிக்கையில் இந்த முன்னேற்பாடுகளைச் செய்துவருகிறார் என்று கேட்டால், ”எல்லாம் கட்டம் (ஜோதிடம்) சொன்னதை நம்பித்தான்” என்கிறார்.

“மாப்பிள்ளை வெளிமாநிலத்துக்காரர்; பெண் தெய்வத்தின் ஊரைச் சேர்ந்தவர்; சரித்திரப் பெயர் கொண்டவர்” என்று கட்டம் சொல்லியிருப்பதால், அப்படிப்பட்ட ஜாதகப் பொருத்தமுள்ள மாப்பிள்ளையை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்வதற்காக ஒரு ஜோதிடரை சந்திக்க வருகிறார் சக்திகனி. அங்கு ஜோதிடருக்காக அவர் காத்திருக்கும்போது உத்ராவதி (டி.திடியன்) என்ற பருமனான இளைஞனை சந்திக்கிறாள். அவனுடன் பேச்சு கொடுக்கும்போது, அவன் அண்டை மாநிலமான புதுச்சேரியைச் சேர்ந்தவன்; காரைக்கால் அம்மையாரின் ஊரான காரைக்காலில் வசிப்பவன்; அவனுக்கு வந்தியத்தேவன் என்ற சரித்திரப்பெயர் கொண்ட நண்பன் இருக்கிறான் என்ற விவரங்கள் சக்திகனிக்கு தெரியவருகிறது. தான் தேடும் மருமகன் வந்தியத்தேவனாக இருக்கலாம் என நினைக்கும் அவள், அவனை பற்றி நைசாக விசாரிக்கிறாள். நாம் விலா நோக, விழுந்து விழுந்து சிரிக்கும் வண்ணம் உத்ராவதி சொல்லும் வந்தியத்தேவன் கதை தான் இந்த படம்.

0a1b

வந்தியத்தேவனாக இப்படத்தின் இயக்குனர் எஸ்.ஜி.எழிலன் நடித்திருக்கிறார். நகைச்சுவை ஹீரோவாக அவர் புகுந்துவிளையாடியிருப்பதோடு, திரைத்துறையில் முன்அனுபவம் இல்லாத அவர், துளியும் ஆபாசம் இல்லாத, குடும்பப் பாங்கான நகைச்சுவைப் படமாக இதை எழுதி இயக்கியிருக்கிறார். பாராட்டுகள்.

இப்படத்தின் திரைக்கதையில் நிறைய ஃபிளாஷ்பேக்குகள் இருக்கின்றன. நிறைய ‘ட்விஸ்ட் அண்ட் டேர்ன்’ எனப்படும் திருப்பங்களும் இருக்கின்றன. இவை எல்லாம் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகின்றனவே தவிர சலிப்பை ஏற்படுத்தவில்லை. அதிலும், காதலியை பெண் பார்க்கச் செல்லும் வந்தியத்தேவன் அவளை மணக்க இயலாமல் திரும்பும் ட்விஸ்ட், வந்தியத்தேவனுக்கான க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் போன்றவை எல்லாம் வேற லெவல் காமெடி..

சக்திகனியாக வரும் தீபா சங்கர் தவிர ஏனைய நடிகர்கள் அனைவரும் புதுமுகங்கள் தான்; என்றாலும், ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்து தத்தமது கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.

தமீம் அன்சாரியின் இசையும், ஜே.சபரிஸின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.

’லோ பட்ஜெட்’ படம் என்பதால் அதற்குரிய சின்னச் சின்ன குறைகள், போதாமைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் செம ஜாலியான படம் இது.

‘கட்டம் சொல்லுது’ – வயிறு புண்ணாகும் அளவுக்கு உத்திரவாதமாக சிரிக்க வைக்கும்!

Read previous post:
0a1b
ஃபில்டர் கோல்டு – விமர்சனம்

நடிப்பு: விஜயபாஸ்கர், சுகுமார் சண்முகம், டோராஸ்ரீ, சிவ இளங்கோ, வெற்றி எழுத்து - இயக்கம்: விஜயபாஸ்கர் தயாரிப்பு: ஆர்.எம்.நானு (சர்வைவல் பிக்சர்ஸ்) இசை: ஹூமர் எழிலன் ஒளிப்பதிவு:

Close