தனுஷ், விஜய் சேதுபதி, வெற்றி மாறன், பார்த்திபனுக்கு விருதுகள்: குடியரசு துணைத் தலைவர் வழங்கினார்

ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் கலைஞர்களுக்கு இந்திய ஒன்றிய அரசு விருதுகள் வழங்கி கவுரவித்துவருகிறது. அந்த வகையில், 2019ஆம் ஆண்டுக்கான விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட விருது வழங்கும் விழா இன்று (25-10-2021) டெல்லியில் நடைபெற்றது.

இந்த விருது வழங்கும் விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஒன்றிய  அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

‘அசுரன்’ திரைப்படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார். அவருக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கினார். ஏற்கெனவே ’ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்ற தனுஷ், இரண்டாவது முறையாக தற்போது இந்த விருதை பெற்றுள்ளார்.

சிறந்த தமிழ்ப்படத்திற்கான  விருது ’அசுரன்’ படத்திற்கு இன்று வழங்கப்பட்டது. ’அசுரன்’ படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர்  விருதுகள் பெற்றனர்.

’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு, சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

’ஒத்த செருப்பு’ படத்துக்காக பார்த்திபனுக்கு ஜூரி விருதும், இதே படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும் வழங்கப்பட்டன.

’கே.டி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது வழங்கப்பட்டது.

‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலுக்காக டி.இமானுக்கு சிறந்த பாடல் இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.

Read previous post:
Kattam-Solludhu
கட்டம் சொல்லுது – விமர்சனம்

நடிப்பு: தீபா சங்கர், எஸ்.ஜி.எழிலன், டி.திடியன் மற்றும் பலர் எழுத்து - இயக்கம்: எஸ்.ஜி.எழிலன் தயாரிப்பு: கண்ணா கணேசன் புரொடக்‌ஷன்ஸ் இசை: தமீம் அன்சாரி ஒளிப்பதிவு: ஜே.சபரிஸ்

Close