ஃபில்டர் கோல்டு – விமர்சனம்

நடிப்பு: விஜயபாஸ்கர், சுகுமார் சண்முகம், டோராஸ்ரீ, சிவ இளங்கோ, வெற்றி

எழுத்து – இயக்கம்: விஜயபாஸ்கர்

தயாரிப்பு: ஆர்.எம்.நானு (சர்வைவல் பிக்சர்ஸ்)

இசை: ஹூமர் எழிலன்

ஒளிப்பதிவு: பரணிக்குமார்

‘திருநங்கை ஆக்சன் பிலிம்’ இது. அதாவது, ஒரு திருநங்கையை முதன்மை நாயகப் பாத்திரமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் படம் இது. அந்த வகையில் இந்த ரகம் தமிழுக்குப் புதுசு!

(திருநங்கையை மையமாகக் கொண்ட படத்துக்கு ‘ஃபில்டர் கோல்டு’ என்ற சிகரெட் பெயரை ஏன் வைத்தார்கள்? மறைமுகக் குறியீடு ஏதாவது இருக்குமோ?!)

திருநங்கைகள் விஜி (விஜயபாஸ்கர்), சாந்தி (சுகுமார் சண்முகம்), டோரா (டோராஸ்ரீ) ஆகிய மூன்று பேரும் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசித்துவருகிறார்கள். இவர்களில் தலைமைப் பண்புடன் திகழும் விஜி, கூலிக்கு கொலை செய்யக்கூடிய ஆள். மரக்கடை முதலாளியான ’ஆசாரி’ (சிவ இளங்கோ) கொடுக்கும் கூலியைப் பெற்றுக்கொண்டு, அவர் கைகாட்டும் நபரை அச்சுறுத்துவது, அடிப்பது, கொலையேகூட செய்வது என வாழ்ந்துவருகிறார். பெண்களுக்கோ, திருநங்கைகளுக்கோ ஓர் அவமானம் நேர்ந்தால், விஜி முதல் ஆளாகச் சென்று தட்டிக்கேட்டு தண்டனை கொடுப்பவராகவும் இருக்கிறார்.

விஜியுடன் வசித்துவரும் சாந்தி என்ற திருநங்கை பாலியல் தொழில் செய்துவருகிறார். ஒருநாள் பிளஸ்-2 மாணவன் ஒருவனால் சாந்தி கொலை செய்யப்படுகிறார்.

மரக்கடை முதலாளியின் மகனும், விஜியுடன் வசித்துவரும் இன்னொரு திருநங்கையான டோராவும் காதலிக்கிறார்கள். இவர்களின் காதலை ஏற்க மறுத்து எதிர்க்கும் மரக்கடை முதலாளி, டோராவை ஒழித்துக்கட்ட திட்டமிடுகிறார்.

டோராவை பாதுகாப்பது, சாந்தியை கொலை செய்தவனை தண்டிப்பது ஆகிய கடமைகளை கையிலெடுக்கும் விஜி, இக்கடமைகளை செவ்வனே செய்து முடித்தாரா, இல்லையா என்பது மீதிக்கதை.

filter gold still

விஜி என்ற திருநங்கையாக இயக்குனர் விஜயபாஸ்கர் நடித்திருக்கிறார். ஒரு ஆண்தான் நாயக திருநங்கையாக நடித்திருக்கிறார் என சொல்ல முடியாதபடி அச்சுஅசலான திருநங்கையாகவே அவர் வாழ்ந்திருக்கிறார். ஆத்திரமூட்டுகிறவர்களிடம் முரட்டுத்தனத்தையும், சக திருநங்கைகளிடம் அளப்பரிய அன்பையும் துல்லியமாக வெளிக்காட்டி சிறப்பாக நடித்திருக்கிறார்.

விஜியின் சக திருநங்கைகளாக வரும் சுகுமார் சண்முகம், டோராஸ்ரீ, மரக்கடை முதலாளியாக வரும் சிவ இளங்கோ, பிளஸ்-2 மாணவனாக வரும் வெற்றி உள்ளிட்ட அனைவரும் தத்தமது கதாபாத்திரத்துக்கு ஏற்ற இயல்பான நடிப்பை அளவாக வெளிப்படுத்தி சிறப்பாக பங்களித்திருக்கிறார்கள்.

அதிரடி ஆக்சன் கதையை அடிப்படைக்கதையாக எடுத்துக்கொண்டு, அதோடு ஒட்டுமொத்த திருநங்கைகளின் வாழ்வியலை இணைத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜயபாஸ்கர். விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையைக் கையாண்டு, திருநங்கைகளின் உலகத்தை ரத்தமும்சதையுமாக படம்பிடித்துக் காட்டிய இயக்குனர் விஜயபாஸ்கர் பாராட்டுக்கு உரியவர்.

பரணிக்குமார் ஒளிப்பதிவும், ஹூமர் எழிலன் இசையும் படத்துக்கு பலம்.

‘பில்டர் கோல்டு’ – புது உலகம்; புது அனுபவம்!