அகடு – விமர்சனம்

நடிப்பு: ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக், அஞ்சலி நாயர், ரவீனா, விஜய் ஆனந்த்

இயக்கம்: எஸ்.சுரேஷ்குமார்

 தயாரிப்பு: விடியல் ராஜு (சௌந்தர்யன் பிக்சர்ஸ்)

 இசை: ஜான் சிவநேசன்

ஒளிப்பதிவு: சாம்ராட்

கிரைம் த்ரில்லர் கதைகளில் “மூடுண்ட புதிர் (CLOSED PUZZLE)” என்றொரு ஜானர் உண்டு. அதாவது, கதையில் ஒரு குற்றம் நிகழ்கிறது. அதை செய்த குற்றவாளி யார் என்பது பார்வையாளர்களுக்குக் காட்டப்படவில்லை. எனவே, அந்த குற்றவாளி இவராக இருப்பாரோ, அவராக இருப்பாரோ என்று பல்வேறு கதாபாத்திரங்கள்மேல் சந்தேகம்கொள்ள வைத்து, பின்னர் இவர்கள் யாருமல்ல என சொல்லிவிட்டு, இதுவரை கிஞ்சித்தும் சந்தேகம் ஏற்படுத்தாத, அப்பாவி போல் இருக்கும் ஒருவரை கதை முடியப்போகும் தறுவாயில் சுட்டிக்காட்டி ’இவர்தான் குற்றவாளி’ என அம்பலப்படுத்துவது தான் ‘மூடுண்ட புதிர்’ ஜானர். இந்த ஜானருக்கு கச்சிதமான எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது ‘அகடு’ திரைப்படம்.

சிறு பிராயத்திலிருந்தே நட்புடன் இருக்கும் இளைஞர்கள் நான்கு பேர் கொடைக்கானலுக்கு இன்பச்சுற்றுலா வருகிறார்கள். காட்டுக்குள் இவர்கள் தங்கியிருக்கும் விருந்தினர் விடுதியின் இன்னொரு அறையில் சுற்றுலா வந்த ஒரு டாக்டர் (விஜய் ஆனந்த்)  தன் டாக்டர்மனைவி (அஞ்சலி நாயர்)  மற்றும் 13 வயது டீன்-ஏஜ் மகளுடன் தங்கியிருக்கிறார்.

டாக்டரின் குடும்பத்துடன் இளைஞர்களுக்கு அறிமுகமும் பழக்கமும் ஏற்படுகிறது. புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள டாக்டரின் டீன்–ஏஜ் மகள், அதே ஆர்வம் கொண்ட கார்த்திக் என்ற இளைஞனுடன் அன்யோன்யமாகப் பழகுகிறாள். அன்று இரவு டாக்டரின் மகள் திடீரென காணாமல் போகிறாள். இளைஞன் கார்த்திக்கும் மாயமாகிறான். பதைபதைப்புடனும் சந்தேகித்தல்களுடனும் தேடுதல் வேட்டை தொடர்கிறது. காட்டுப்புதர் பகுதியில் ரத்தக்காயங்களுடன் கார்த்திக் சடலம் கிடைக்கிறது.

கார்த்திக்கைக் கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? காணாமல் போன டாக்டர்மகள் என்ன ஆனாள்? என்ற கேள்விகளுக்கு திடுக்கிடச்செய்யும் பதிலைச் சொல்லி முடிகிறது படம்.

குற்றவாளி யார்? இளைஞன் கார்த்திக்கா? கார்த்திக்கின் நண்பர்களில் ஒருவனா? விருந்தினர் விடுதி பணியாளரா? செக்-போஸ்ட் காவலரா? அருவியில் குளிக்கும்போது வம்புச்சண்டை இழுத்த சமூக விரோதிகளா? போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் தான் குற்றவாளியா? என்றெல்லாம் பார்வையாளர்களை பல கோணங்களில் சந்தேகப்பட வைத்து, சஸ்பென்ஸை இம்மியளவும் கசியவிடாமல் காப்பாற்றிக்கொண்டே விறுவிறுப்பாக கதையை நகர்த்திச் சென்று, இறுதியில் யாரும் நினைத்துக்கூட பார்த்திராத குற்றவாளியை அம்பலப்படுத்தி பாராட்டுப் பெறுகிறார் இயக்குனர் சுரேஷ்குமார்.

குற்றத்தை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஜான் விஜய், தன் பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார். எனினும், எப்போதும் கேரட்டைக் கடித்துக்கொண்டே விசாரணை நடத்தும் அவரது மேனரிசத்தை ஆரம்பத்தில் ரசிக்க முடிந்தாலும், போகப் போக திகட்டிவிடுகிறது.

டாக்டராக வரும் விஜய் ஆனந்த், டாக்டரின் மனைவியாக வரும் அஞ்சலி நாயர், நண்பர்களாக வரும் சித்தார்த், ஶ்ரீராம் கார்த்திக் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

சாம்ராட் ஒளிப்பதிவில், மலைகள் சூழ்ந்த காடுகள் கண்களுக்குள் நிற்கின்றன. இசையமைப்பாளர் ஜான் சிவநேசனின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கனம் சேர்த்து இருக்கிறது.

’அகடு’ – சுவாரஸ்யமான விறுவிறு கிரைம் த்ரில்லர்!

 

 

 

Read previous post:
0a1f
Actor Jai Fights with American Robots

Actor Jai's upcoming film 'Breaking News' is produced by K. Thirukadal Uthayam in the banner of Rahul Films. Focusing on

Close