காற்று வெளியிடை – விமர்சனம்

இந்திய ஒன்றியத்தை தற்போது நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ்.க. ஆட்சி செய்வதைப் போல, முன்பு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சி செய்த காலகட்டத்தில், 1999-ல், இப்படத்தின் கதை ஆரம்பமாகிறது…

அப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கார்கில் போரில், இந்திய விமானப் படை பைலட்டான நாயகன் கார்த்தி பங்கேற்கிறார். அவர் பயணித்த போர் விமானம் பாகிஸ்தானியரின் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதில் உயிர் தப்பிக்கும் கார்த்தி பாகிஸ்தானுக்குள் போய் விழுகிறார். அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து, சிறையில் இருட்டறையில் அடைக்கிறது. அவர் அங்கிருந்தபடியே தனது கடந்தகால நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கிறார். பிளாஷ் பேக் ஆரம்பம்…

கார்த்தி காஷ்மீரில் விமானப் படை பைலட்டாக பணிபுரிகிறார். ஒருநாள் அவர்  ஜீப்பில் பயணம் செய்யும்போது சிறிய விபத்து நிகழ்கிறது. ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கார்த்தியை, ராணுவத்தில் டாக்டராக பணிபுரியும் நாயகி அதிதி ராவ் ஹைதரி சிகிச்சை அளித்து குணப்படுத்துகிறார். அதற்குப்பின் இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. சின்ன சின்ன சண்டைகள், ஈகோ, கருத்து வேறுபாடுகள் என அவ்வப்போது மோதலும், சமரசமுமாக காதல் வளருகிறது.

ஒரு கட்டத்தில் திருமணத்திற்கு முன்பே இருவரும் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்கள். இதில் ராணுவ டாக்டர்(!) அதிதி ராவ் கர்ப்பமடைகிறார். இவர்களுக்குள் இருந்த சிறுசிறு மோதல்கள் ஒருநாள் பூதாகரமாக வெடிக்க, கோபத்தில் அதிதியை விட்டு பிரிந்து போகிறார் கார்த்தி.

அந்த நேரத்தில் தான் கார்கில் போர் ஆரம்பமாகிறது. அதில் பங்கேற்கும் கார்த்தி, பாகிஸ்தானியரிடம் சிக்கி, இருட்டறையில் சிறை வைக்கப்படுகிறார். பிளாஷ்பேக் முடிகிறது.

கர்ப்பிணியாக விட்டுவந்த தனது காதலியுடன் மீண்டும் சேர்ந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார் கார்த்தி. இதற்காக பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பிக்க முடிவு செய்கிறார். அவர் அங்கிருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்து தனது காதலியை கரம் பிடித்தாரா, இல்லையா? என்பது இப்படத்தின் மீதிக்கதை.

கார்த்தி இப்படத்தில் போர் விமான விமானியாக வருகிறார். அந்த கதாபாத்திரத்திற்கு ஓரளவுக்கு பொருந்தியிருக்கிறார் என்றாலும், ஆரிய பார்ப்பன சாயலில் மீசை இல்லாமல் மழித்த அவரது முகத்தை பார்க்கும் போதெல்லாம் “ப்ப்ப்ப்பாஆஆஆ” என்ற பயங்கர உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. தன்னால் இயன்ற அளவு சிறப்பாக நடித்திருக்கிறார்.

அதிதி ராவ் ஹைதரியின் நடிப்பு அபாரம். மகிழ்ச்சி, கோபம், அழுகை, கெஞ்சல் என்று உணர்வுகளை கண்களின் வழியே மிகச் சரியாக வெளிப்படுத்துகிறார். உள்ளச் சிக்கலை மிகச் சரியாக கையாண்டுள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவருடைய இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கலாம். ருக்மிணி விஜயகுமார், டெல்லி கணேஷ், ஷ்ரதா ஸ்ரீநாத், விபின் ஷர்மா ஆகியோர் பொருத்தமான தேர்வு.

ராணுவத்தில் பணிபுரியும் இருவரிடையே வரும் காதல் மற்றும் ஈகோ மோதலை இப்படத்தில் காட்டியிருக்கிறார் மணிரத்னம். ராணுவம் சம்பந்தப்பட்ட விஷயங்களை படத்தில் காட்டியிருந்தாலும், முழுக்க முழுக்க ஒரு காதல் கதையாகவே இதை படமாக்கியிருக்கிறார். நிறைய காட்சிகளில் அவரது பழைய படங்களின் சாயல் இருக்கிறது. காதல் படங்களுக்கு மணிரத்னத்தின் வசனங்கள் தான் பெரிய பலம். அது இந்த படத்திலும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

ரவிவர்மன் காஷ்மீர் அழகையும், பனிப் பகுதிகளையும், மலைத் தொடரையும் கேமராவுக்குள் அள்ளி வந்து கண்களுக்குள் கடத்துகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வான் வருவான், சாரட்டு வண்டியில பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை படத்துடன் ஒன்றிப் போகிறது.

ஸ்ரீகர் பிரசாத் சில இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம்.

‘காற்று வெளியிடை’ – மணிரத்னம் டெம்பிளேட்டில் இன்னொரு காதல் படம்!