8 தோட்டாக்கள் – விமர்சனம்

கதாநாயகன் வெற்றி சிறுவயதிலேயே செய்யாத தப்புக்காக ஜெயிலுக்கு போகிறார். சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படும் வெற்றியை புரிந்துகொண்ட காவலர் ஒருவர் அவனுக்கு உதவி செய்ய நினைக்கிறார். அவனை போலீஸ் அதிகாரியாக ஆகும்படி வற்புறுத்துகிறார். போலீஸ் வேலையில் விருப்பம் இல்லாத வெற்றி, போலீஸ் அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க பெரியவனானதும் போலீசாகிறார்.

மைம் கோபி இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் போலீஸ் ஸ்டேஷனில் இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். போலீஸ் வேலையில் நேர்மையாக பணிபுரிந்து வருகிறார். இது அந்த ஸ்டேஷனில் பணிபுரியும் மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், அவரை எப்படியாவது அந்த ஸ்டேஷனில் இருந்து துரத்திவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இந்நிலையில், பிரபல ரவடி ஒருவரை பின்தொடர வேண்டும் என்ற வேலையை வெற்றிக்கு கொடுக்கிறார் மைம் கோபி. இதற்காக எட்டு தோட்டாக்கள் அடங்கிய ஒரு துப்பாக்கியை அவருடைய பாதுகாப்புக்காக கொடுக்கிறார்கள். அதை வாங்கிக்கொண்டு ரவுடியை பின்தொடரும் வெற்றி, பஸ்ஸில் துப்பாக்கியை பிக்பாக்கெட் அடிக்கும் சிறுவனிடம் பறிகொடுக்கிறார்.

துப்பாக்கி பறிபோனதும் பதட்டத்தில் இருக்கும் வெற்றி, நேரடியாக மைம் கோபியிடம் சென்று துப்பாக்கி தொலைந்துவிட்டது குறித்து முறையிடுகிறார். அவரோ, வெற்றிக்கு ஒருநாள் அவகாசம் கொடுத்து, துப்பாக்கியை அதற்குள் கண்டுபிடித்து வரவேண்டும் எனவும், இல்லையென்றால் மேலிடத்தில் தகவல் தெரிவித்துவிடுவேன் என்று எச்சரிக்கிறார்.

இதையடுத்து துப்பாக்கியை தேடி நாயகன் பல்வேறு வகையில் முயற்சி செய்கிறார். ஆனால், அதற்குள் அந்த துப்பாக்கி தடயம் தெரியாத நபர்களிடம் சிக்கி, அதில் உள்ள 7 தோட்டாக்கள் நகரத்தின் பல்வேறு இடங்களில் வெடிக்கிறது. இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து நாசர் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணையில் இறங்குகிறது.

அந்த துப்பாக்கி கடைசியில் யார் கையில் சிக்கியது? அந்த துப்பாக்கியை வைத்து நடந்த கொலைகளுக்கான காரணம் என்ன? என்றதுடன் கதை விறுவிறுப்புடன் நகர்கிறது.

நாயகன் வெற்றி, சிறுவயதிலிருந்தே செய்யாத தப்புக்காக சிறை சென்றுவிட்டோமே என்ற குற்ற உணர்வுடன் படம் முழுக்க சோகமயமாகவே வலம் வந்திருக்கிறார். போலீஸ் கெட்டப்புக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் என்றாலும், அவரது கதாபாத்திரத்திற்கு கம்பீரம் தேவைப்படவில்லை. எனவே, அதற்கேற்றார்போல் கனகச்சிதமாக நடித்திருக்கிறார்.

நாயகி அபர்ணா வழக்கம்போல் தமிழ் சினிமா கதாநாயகியாக வந்துபோகாமல் இந்த படத்தில் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. டிவி ரிப்போர்ட்டராக வரும் இவரது நடிப்பு பலே சொல்ல வைக்கிறது. தன்னுடைய தேவைக்காக எதைவேண்டுமானாலும் செய்யத் துணியும் கதாபாத்திரத்தில், ரொம்பவும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தில் போலித்தனம் இல்லாதது சிறப்பு.

எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் இன்னொரு நாயகன் என்று சொல்லலாம். அந்தளவுக்கு முக்கியமான கதாபாத்திரம் இவருடையது. தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரம் என்பதால் அதற்கு பொருத்தமாகவே இருக்கிறார். இவரது நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு படத்தில் ஒரு காட்சியில் 5 நிமிடத்திற்கும் மேல், இவர் தனது சோக கதையை சொல்லி அழும் காட்சிகளில், இவருடைய முகபாவணை மற்றும் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.

விசாரணை அதிகாரியாக வரும் நாசர், வாராவாரம் வெளியாகும் படங்களில் ஏதாவது ஒரு படத்தில் இவருடைய பங்களிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் வேறுபட்டு இருப்பது பாராட்டுக்குரியது. இந்த படத்திலும் இவருடைய நடிப்பு மெச்சும்படியாக இருக்கிறது.

இன்ஸ்பெக்டராக வரும் மைம் கோபி, போலீஸ் ஏட்டாக வரும் டி.சிவா, ரவுடி கும்பலின் தலைவனாக வரும் சார்லஸ் வினோத் மற்றும் இவருக்கு மனைவியாக நடித்தவர் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஸ்ரீகணேஷ் சிறுவயதிலேயே தனது முதல் படத்தை இவ்வளவு பக்குவத்தோடு இயக்கியிருப்பது சிறப்பு. கிரைம் கதையில் செண்டிமெண்ட், மென்மையான காதல், துரோகம் எல்லாம் கலந்த ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் மிகவும் கைதேர்ந்தவர்போல் கையாண்டிருப்பது ஆச்சர்யத்தை கொடுக்கிறது. படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதையும், வசனங்களும்தான். படத்தை ரொம்பவும் வேகமாக கொண்டுசெல்லாமல், நிறுத்தி நிதானமாக கொண்டுசென்று கடைசியில் அழகாக முடித்திருப்பது சிறப்பு.

தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி இருக்கிறது. சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை கதையின் ஓட்டத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘8 தோட்டாக்கள்’ வெடிக்கும்.