தோழா – விமர்சனம்

காதல் கதைகளைப் போல நட்பை ஆராதிக்கும் கதைகள் என்றென்றும் பசுமையானவை. தேச எல்லைகளற்று உலகின் அனைத்து மனிதர்களாலும் வரவேற்று ரசிக்கப்படுபவை. அந்த நட்பை மையப் பொருளாகக் கொண்டு பிரெஞ்சு மொழியில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற ‘Intouchables’ என்ற படத்தின் தமிழ் மறுஆக்கமே ‘தோழா’.

சென்னையில் சாதாரண அடுக்குமாடி குடியிருப்பில் அம்மா, தம்பி, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் கார்த்தி. அவர் திருட்டுத் தொழில் செய்து அடிக்கடி ஜெயிலுக்குப் போய் வருவதால் அவரது குடும்பத்தில் அவரை யாருக்கும் பிடிக்கவில்லை. யாரும் அவரை மதிப்பதும் இல்லை. ஒரு கட்டத்தில் பெற்ற தாயே அவரை வீட்டைவிட்டு துரத்திவிடுகிறார். அவரை திருத்தி நல்வழிப்படுத்த அவரது நண்பரும் வக்கீலுமான விவேக் முயலுகிறார். தனக்கு தெரிந்தவர்களிடம் அவரை வேலைக்கு சேர்த்துவிடுகிறார். ஆனால் அந்த வேலையெல்லாம் கார்த்திக்கு பிடிப்பதில்லை.

நாகார்ஜூனா கார் பந்தய சாம்பியன். பெரிய பணக்காரர். வெளிநாட்டில் நடக்கும் ஒரு விபத்தில் சிக்கி, ம்யிரிழையில் உயிர் பிழைக்கிறார். என்னும், அவரது கழுத்துக்குக் கீழ் உடம்பு உணர்விழந்து செயலற்றதாகி விடுகிறது. இதனால் அவருடைய வாழ்க்கை சக்கர நாற்காலியே கதி என முடங்கிப்போய் விடுகிறது. தனது அன்றாட கடமைகளைக்கூட சுயமாக செய்துகொள்ள இயலாமல் இருக்கும் அவரை, அருகிலேயே இருந்து பராமரிக்க ஒரு ஆள் தேவைப்படுகிறது. இதற்கென விளம்பரம் கொடுக்கிறார்.

இந்த விளம்பரத்தை பார்த்து நிறைய பேர் இண்டர்வியூவுக்கு வருகிறார்கள். அவர்களில் ஒருவராக வந்திருக்கும் கார்த்தியின் ஒளிவுமறைவு இல்லாத படபட பேச்சும், நடவடிக்கைகளும் நாகார்ஜூனாவுக்குப் பிடித்துப்போகிறது. அதனால் தன்னை கவனித்து பராமரிக்கும் பணியாளராக கார்த்தியை அவர் நியமிக்கிறார்.

இது நாகார்ஜூனாவின் தனி உதவியாளரான தமன்னாவுக்கும், நாகார்ஜூனாவின் நெருங்கிய நண்பரான பிரகாஷ்ராஜூக்கும் பிடிக்கவில்லை.

உடலை அசைக்கக்கூட முடியாத நிலையில், சக்கர நாற்காலியில்  வலம்வரும் நாகர்ஜுனாவுக்கு பணிவிடைகள் செய்ய முதலில் கார்த்தி தயங்கினாலும், ஒருகட்டத்தில் நாகர்ஜுனாவின் நல்ல மனதை புரிந்துகொண்டு அவருடன் நெருங்கி பழகுகிறார். நல்லதொரு தோழனாய் மாறி அவர் நகார்ஜுனாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றுவது, சின்னச் சின்ன உணவகங்களுக்கு அழைத்துப்போய் சாப்பிட வைப்பது என வெளியுலகத்தைக் காட்டி புத்துணர்வூட்டுகிறார். நாகர்ஜுனாவும் கார்த்தியை தனது தம்பி போலவே பாவிக்கிறார்.

இதற்கிடையே, நாகார்ஜூனாவின் தனி உதவியாளரான தமன்னாவை ஒருதலையாக காதலிக்கிறார் கார்த்தி.

இந்நிலையில், தனது தங்கை ஒருவரை காதல் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என தெரிந்து, அதை தடுத்து நிறுத்தச் செல்லும் கார்த்திக்கு அவமானமே மிஞ்சுகிறது. இது நாகர்ஜுனாவுக்கு தெரியவர, அவர் தலையிட்டு, கார்த்தியின் தங்கை திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி வைக்கிறார். இதனால் கார்த்தி – நாகார்ஜூனா தோழமை மேலும் பலமடைகிறது.

ஒருநாள் நாகார்ஜுனாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். மரணத்தின் விளிம்பு வரை சென்ற நாகார்ஜூனா, தீவிர சிகிச்சைக்குப்பின் மீள்கிறார்.

உடல்நலம் தேறும் நாகார்ஜூனாவை, அவருக்கு பிடித்தமான பாரீஸ் நகரத்துக்கு அழைத்துச் செல்கிறார் கார்த்தி. அங்கே நாகார்ஜூனாவின் முன்னாள் காதலியான அனுஷ்காவை சந்திக்க வைக்கிறார்.

அனுஷ்காவுடனான சந்திப்பு, நாகார்ஜூனாவுக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுகிறது? தமன்னா மீதான கார்த்தியின் காதல் என்ன ஆகிறது? என்பது மீதிக்கதை.

கழுத்துக்கு கீழே செயலிழந்த உடலுடன் சக்கர நாற்காலியில் முடங்கிப்போன பெரிய பணக்காரராக வரும் நாகார்ஜூனா, படுத்துக்கொண்டும், உட்கார்ந்துகொண்டும் நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார். ஆக்ஷன் ஹீரோவாகவே அதிகம் அறியப்பட்டுள்ள அவருக்கு இது முற்றிலும் மாறுபட்ட வாழ்நாள் சாதனையான கதாபாத்திரம். மனிதர் பணக்கார மாற்றுத் திறனாளியாகவே வாழ்ந்திருக்கிறார்.

பணக்கார மாற்றுத் திறனாளியை பராமரிக்கும் சாமான்ய இளைஞனாக வரும் கார்த்திக்கு, விலா நோக சிரிக்க வைக்கும் காமெடி நாயக கதாபாத்திரம். அசத்தியிருக்கிறார். அவருடைய யதார்த்தமான நடிப்பும், தமாஷான வசன உச்சரிப்பும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

பணக்கார நாகார்ஜூனாவின் பி.ஏ.வாக வரும் தமன்னாவின் அழகில் மெருகு கொஞ்சம் அல்ல, நிறையவே கூடியிருக்கிறது. ரசிகர்களின் இதயங்களை கொள்ளைகொள்ளும் கனவுக்கன்னியாக இன்னொரு ரவுண்டு வருவார் என்பது நிச்சயம்.

பிரகாஷ்ராஜ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். விவேக் சில காட்சிகள் வந்தாலும் மனதில் பதிகிறார்.

பிரெஞ்சு கதையை தமிழர்களின் ரசனைக்கு ஏற்ப மாறுதல்கள் செய்து, காமெடியும் எமோஷனும் சரிவிகிதத்தில் கலந்து, நல்லதொரு படைப்பைக் கொடுத்ததற்காக இயக்குனர் வம்சியை பாராட்டலாம்.

கோபி சந்தரின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே செம ஹிட். படத்தில் பார்க்கும்போது அவை இன்னும் அருமையாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவும், ராஜூமுருகனின் வசனமும் படத்துக்கு மிகப்பெரிய பலம்.

‘தோழா’ – பார்க்கலாம்; ரசிக்கலாம்!