“சசிகலாவை ஆதரிப்பதா?”: சொந்த தொகுதியில் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வும் சசிகலா ஆதரவாளருமான நடிகர் கருணாஸ் பங்கேற்கவும், பேருந்து நிலையத்தின் முன் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தேவர் சிலைக்கு கருணாஸ் மாலை அணிவிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தேவர் சிலை அருகே திரண்டிருந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பலரை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்து, தொண்டி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இந்நிலையில், மாலை 3 மணிக்கு கருணாஸ் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட பிறகு திருவாடானை பேருந்து நிலையம் முன் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சசிகலா ஆதரவு அ.தி.மு.க.வினர் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் சென்ற கார், முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபம் அருகே வந்தபோது, மண்டபத்தின் வாசலில் நின்று சிலர் கருணாஸை கண்டித்து முழக்கம் எழுப்பினர். மேலும், திருமண மண்டபத்தின் மாடியில் இருந்து கருணாஸ் சென்ற கார் மீது செருப்பும் தண்ணீர் பாட்டிலும் வீசப்பட்டன.

எனினும், கருணாஸ் காரும், உடன் சென்ற கார்களும் நிற்காமல் தேவர் சிலையை நோக்கிச் சென்றுவிட்டன. அங்கு தேவர் சிலைக்கு கருணாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அந்த பகுதியில் கூடி நின்ற இளைஞர்கள் கருணாஸூக்கு எதிராக முழக்கமிட்டனர்.

உடனே முக்குலத்தோர் புலிப்படை மாநில நிர்வாகி மற்றும் சிலர், முழக்கம் எழுப்பியவர்களை கண்டித்துப் பேசி தாக்க முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் கூட்டத்தினரை கலைத்தனர். அதன்பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கருணாஸ் பசும்பொன் புறப்பட்டு சென்றார்.

அப்போது அவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம், தனது காரை திருமண மண்டபத்தில் இருந்த சிலர் தாக்கியதாக புகார் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை உடனே விடுவிக்க வேண்டும் என கோரி, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தொண்டி – மதுரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.