“தமிழ் ராக்கர்ஸ்” திருட்டு பிசினஸை ஒழிக்க தயாரிப்பாளர்களுக்கு சில யோசனைகள்!

தமிழில் புதிய படம் வெளியாகும் போதெல்லாம் ட்ரெண்டாகும் ஒரு விஷயம் தமிழ் ராக்கர்ஸ் தான். நடிகர் – நடிகைகள் தங்கள் படத்தை ப்ரொமோட் செய்யும் போதெல்லாம் மறக்காமல், “தியேட்டரில் சென்று படம் பார்க்க வேண்டும்” என்று கெஞ்சுவதும், பட விழாக்களில் தமிழ் ராக்கர்ஸை மானே தேனே பொன்மானே என்று கவிதை ததும்ப திட்டுவதும் வாடிக்கை ஆகி விட்டது. அமெரிக்காவை அழிக்க வந்த வேற்று கிரகவாசியைப் பார்த்து அவர்கள் பதறுவார்களே… அதைப்போல் தமிழ் சினிமா உலகம் பதறி துடித்துக்கொண்டு இருக்கிறது. போதாக்குறைக்கு முகநூலிலும் “நான் ஏன் தமிழ் ராக்கர்ஸை ஆதரிக்கிறேன்?” என்பதை ட்ரெண்டாக்கி தெறிக்க விடுகிறார்கள்.

இது தமிழ் ராக்கர்ஸை ஆதரிக்கும் பதிவு கிடையாது என்பதை இங்கு ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன்.

சரி, ஒரு கற்பனையில் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் திருட்டு விசிடிக்களே இல்லை என்று வைத்து கொள்ளலாம். அப்போது நாம் திரைப்படங்களை பார்ப்பதற்கு நமக்கு என்னென்ன வழிகள் இருக்கிறது?

1. திரையரங்கில் சென்று திரைப்படங்களை பார்த்து மகிழ்வது.

2. திரையரங்கில் தவறவிட்ட படங்களை ஒரு பண்டிகை நாளன்று  வீட்டில் டிவி முன் உட்கார்ந்து நொறுக்கு தீனியுடன் பார்ப்பது.

இதை தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா? இந்த இடத்தில தான் தமிழ் ராக்கர்ஸின் வெற்றியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய நிலையில் ஒரு திரைப்படத்தின் வாழ்வு ஒரு வாரம் மட்டுமே. அந்த ஒரு வாரத்திற்குள் நீங்கள் திரையரங்கில் பார்த்தால் தான் உண்டு. இல்லையேல் வேறு வாய்ப்புகளே இல்லை. இதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘துருவங்கள் 16’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ ஆகிய இரு திரைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இரு படங்களுமே பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றன. விமரிசனம் வெளிவந்து, படம் பார்க்கலாம் என்று நினைக்கும்பொழுது திரையரங்கில் அந்த படங்கள் இல்லை. ஆனாலும் இப்போது எனக்கு அந்த படங்களை பார்க்க வேண்டும். என்ன வழி? இருக்கும் ஒரே வழி, இணையத்தில் தரவிறக்கம் செய்து பார்ப்பது தான்.

இங்கு அப்படியே கட் செய்யுங்கள். ஒரு கதை சொல்கிறேன். ஐசிஎல் தெரியுமா உங்களுக்கு? இந்தியன் கிரிக்கெட் லீக். 2007 உலக கோப்பையில் இந்திய முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறிய நேரம். பிசிசிஐ மற்றும் வீரர்களின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. அப்போது ஆரம்பிக்கப்பட்டது தான் ஐசிஎல். ஆரம்பித்த வேகத்தில் பல முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் அதில் சேர்ந்தார்கள். அந்த ஆண்டே அவர்கள் பிரிமியர் லீக் தொடரை நடத்தி காட்டினார்கள். பிசிசிஐ மற்றும் ஐசிசி ஆகிய இரு அமைப்புகளும் சேர்ந்து அதை தடை செய்தன. அப்போதும் ஐசிஎல்-ற்கான வரவேற்பு குறையவில்லை. பொறுத்துப் பார்த்த பிசிசிஐ, ஐசிஎல்-ற்கு போட்டியாக ஐபிஎல் போட்டிகளை அறிவித்தது. 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை நடத்திக் காட்டியது. அதோடு ஐசிஎல்-ற்கு மூடுவிழா நடத்தப்பட்டது. சொல்லப் போனால், இன்று உலகம் எங்கும் நடந்து கொண்டிருக்கும் பிரிமியர் கிரிக்கெட் தொடர்களின் வெற்றிக்கு முக்கியமான காரணம் ஐசிஎல் தான்.

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், தமிழ் ராக்கர்ஸ் உருவாக்கிருப்பது மிக பெரிய வியாபார சந்தை. தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் உருவாக்கியிருப்பது ஒரு பிசினஸ் மாடல். உண்மையில் இது போன்ற ஒரு மாடலை தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் தான் உருவாக்கி இருக்க வேண்டும்.

தமிழ் சினிமா திரையரங்க உரிமையாளர்களிடமும், சாட்டிலைட் டீவிக்களிடமும் அடிமையாகி கிடக்கிறது. இப்போதைக்கு தமிழ் சினிமா வியாபாரம் என்பது திரையரங்கம், சாட்டிலைட் உரிமை இவை இரண்டை நம்பி மட்டுமே உள்ளது. ஆனால் சினிமா இல்லையேல் இவை இரண்டுமே இல்லை என்பதே நிதர்சனம். எப்போது என்ன படம் வெளியாக வேண்டும், அவை எத்தனை நாள் ஓட வேண்டும் என்பது வரை விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் தான் தீர்மானிக்கின்றனர். (பெரிய நடிகர்கள் படத்துக்கு இது பொருந்தாது).

தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக செய்வதை சினிமா தயாரிப்பாளர்கள் முறையாக செய்தாலே திருட்டு விசிடி யை ஒழிக்க முடியும்.

ஒரு படம் வெளியாகி 10-வது நாள் ஒரிஜினல் டிவிடியை ரிலீஸ் செய்ய வேண்டும்.

1. ஆன்லைனில் டவுன்லோட் செய்வதற்கு வழி செய்ய வேண்டும்.

2. டிவிடிக்கள் ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும்.

3. முகவர்கள் மூலம் டிவிடிக்கள் விற்பனை செய்யலாம். (இந்த முறையில் சேரன் சி2ஹெச் என்று ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து படங்கள் கிடைக்காமல் தோல்வி அடைந்துள்ளார். அவருடைய பிசினஸ் மாடலை அப்படியே வாங்கி பயன்படுத்தலாம்.)

4. செல்போன் விற்பனை செய்யும் சில்லறை வர்த்தகர்களுடன் ஒப்பந்தம் செய்து, அவர்களிடமிருந்தும் தரவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யலாம்.

இப்படி செய்தால் திருட்டு விசிடி ஒழிந்து விடுமா என்று கேட்கலாம். ஆனால், இதுவும் ஒரு வியாபாரமே. சிறிய படங்கள் மற்றும் நல்ல படங்கள் என்று அடையாளம் காணப்பட்டு திரையரங்கில் ஓடாத படங்களின் தயாரிப்பாளர்களுக்கு அவர்களின் நஷ்டம் குறைய வாய்ப்பு இருக்கிறது.
நூற்றுக்கணக்கான குறைந்த பட்ஜெட் படங்கள் தியேட்டர் கிடைக்காமல் ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கி உள்ளது. முறையான மார்கெடிங், விளம்பரம் மூலம் இதை வெற்றிகரமாக நடத்த முடியும். டிவிடிகளில் ஜாக்கிசான் படத்தில் வருவதைப் போல் படப்பிடிப்பின்போது நடந்த சம்பவங்களை எடிட் செய்து ஒரு வேல்யூ ஆட்டெட் ஆக கொடுக்கும்போது ரசிகர்களையும் விரும்பி வாங்க வைக்க முடியும்.

கடந்த சில வருடங்களாகவே ஹோம் தியேட்டர் பிசினஸ் நல்ல நிலையை அடைந்துள்ளது. ஆனால் ஒரிஜினல் டிவிடிக்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இவை எல்லாமே வியாபார வாய்ப்புகள் தான். விஷத்தைக் கூட மருந்தாக பயன்படுத்த முடியும். அதேபோல் தான் இதுவும். இப்படி சில மாற்று வழிகளை செய்துவிட்டு பிறகு அறம் பற்றி பேசினால் எடுபடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் உழைப்பு திருடு போகிறது என்று நினைப்பவர்கள், 10 ரூபாய் மதிப்புள்ள பாப்கார்னை 90 ரூபாய்க்கு வாங்க வேண்டும் என்ற நிலையில் எங்கள் உழைப்பும் திருடப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

MAHADEVAN CM