எமன் – விமர்சனம்

சமகால இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், இரண்டு வகையான அரசியல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

  1. தேர்தல் அரசியல்:

தேர்தலில் போட்டியிடுவது, சூதுவாது செய்து தேர்தலில் வெற்றி பெறுவது, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சுய ஆதாயத்தை பெருக்கிக் கொள்வது, இதற்கு இடையூறு செய்தால் கொலை – கொள்ளையில் ஈடுபடுவது…

  1. போராட்ட அரசியல்:

தேர்தல் அரசியலை ஒரு பொருட்டாக மதிக்காமல், மக்கள் நலன் சார்ந்து போராட்டங்கள் நடத்துவது. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், டாஸ்மாக் ஒழிப்பு போராட்டம், ஜல்லிக்கட்டு உரிமை போராட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் போன்றவை இத்தகையவை. (தேர்தல் அரசியல் கட்சிகள் கூட ஏதாவதொரு பொதுப் பிரச்சனையை முன்னிறுத்தி போராட்டங்கள் நடத்துவது உண்டு. ஆனால் அவை வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்வது, வாக்கு வங்கியை பெருக்கிக்கொள்வது என்ற தேர்தல் அரசியல் சார்ந்த உத்தி தானே தவிர, போராட்ட அரசியல் என்ற வரம்புக்குள் வராதவை.)

இவ்விரு அரசியல்களில், தேர்தல் அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், விஜய் ஆண்டனியின் ‘எமன்’. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பான ‘பிரேக்கிங் நியூஸ்’கள் வெளியாகி, தேர்தல் அரசியல்வாதிகளின் நயவஞ்சக முகங்கள் அம்பலப்பட்டு வரும் இன்றைய தமிழக தேர்தல் அரசியல் சூழலில் வெளிவந்திருப்பதால், ‘எமன்’ படம் கூடுதல் கவனம் பெறுகிறது.

நாயகன் விஜய் ஆண்டனி (தமிழரசன்) கைக்குழந்தையாக இருக்கும்போது, அவரது அப்பா தேர்தல் அரசியல் சூழ்ச்சி காரணமாக படுகொலை செய்யப்படுகிறார். இத்துயரம் தாங்காமல் விஷத்தை குழந்தைக்கு கொடுத்து, தானும் உண்ணுகிறார் அம்மா. இதில் அம்மா இறந்துவிட, குழந்தை உயிர் பிழைத்துக் கொள்கிறது. அப்பா, அம்மா இருவரது உயிரிழப்புக்கும் இக்குழந்தையின் பிறப்பு தான் காரணம் என நம்பும் ஊரார், அதை “எமன்” என கரித்துக்கொட்டுகிறார்கள். இப்படியாக “எமன்” ஆகிறார் விஜய் ஆண்டனி.

நாயகன் விஜய் ஆண்டனி 30 வயது இளைஞனாக இருக்கும்போது, அவருடைய ஒரே துணையான தாத்தா சங்கிலி முருகனின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மருத்துவச் செலவுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. இப்பண தேவையை பூர்த்தி செய்வதற்காக, செய்யாத ஒரு குற்றத்தை செய்ததாகச் சொல்லி சிறை செல்ல சம்மதிக்கிறார் விஜய் ஆண்டனி. தேர்தல் அரசியலில் கிழக்கும் மேற்குமாக இருக்கும் மாரிமுத்து, ஜெயக்குமார் ஆகியோரை அவர் சிறையில் சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் மூலம் முன்னாள் எம்.எல்.ஏவான தியாகராஜன் தொடர்பு கிடைக்கிறது. அவருடைய சிபாரிசில், மந்திரி அருள் சங்கரின் ஆதரவில் ஒரு ஏசி பாருக்கு முதலாளி ஆகிறார் விஜய் ஆண்டனி.

அடுத்தடுத்து நடக்கும் சில அயோக்கியத்தனமான விஷயங்கள் அவரை தேர்தல் அரசியலில் இறங்க வைக்கிறது. சூழ்ச்சியும், வன்மமும் கொண்ட தேர்தல் அரசியல் களத்தில் அவரால் தாக்குப் பிடிக்க முடிந்ததா, இல்லையா என்பது படத்தின் பரபரப்பான மீதிக் கதை.

படத்துக்குப் படம் வித்தியாசமான கதையையும், வித்தியாசமான – அதேநேரத்தில் தனக்கு பொருத்தமான – கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் என பெயர் பெற்றிருக்கும் விஜய் ஆண்டனி இந்த படத்திலும் அதை சாதித்துள்ளார். சாதி மறுப்பு திருமணம் செய்த அப்பா, கபட தேர்தல் அரசியல்வாதிகளின் உயிர் பறிக்கும் மகன் என இரண்டு வேடங்களில் அவர் நடித்துள்ளார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் அற்புதமாக உயிர் கொடுத்துள்ளார். இந்த படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் அவர், நடிப்பின் அடுத்த கட்டத்துக்கு நம்பிக்கையுடன் நகர்ந்திருக்கிறார்.

நடிகை கதாபாத்திரத்தில் வரும் நாயகி மியா ஜார்ஜ், தனது பாத்திரம் உணர்ந்து யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர்  வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது. மியா ஒரு பாடலுக்கு சிறப்பாக நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அமைச்சராக அருள்சங்கர், அமைச்சரின் பி.ஏ.வாக சார்லி, முன்னாள் எம்.எல்.ஏ.வாக தியாகராஜன், அரசியல்வாதிகளாக மாரிமுத்து, ஜெயக்குமார், நாயகனின் தாத்தாவாக சங்கிலி முருகன், நண்பராக சுவாமிநாதன் என அனைவரும் தத்தமது கதாபாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

தேர்தல் அரசியலில் புரையோடிக் கிடக்கும் அசிங்கங்களையும், அபத்தங்களையும் தோலுரித்துக் காட்ட முயன்றதற்காக இயக்குனர் ஜீவா சங்கரை பாராட்டலாம். தேர்தல் அரசியல் சூழ்ச்சிகளை சித்தரிக்கும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. திரைக்கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்கள், விறுவிறுப்பைக் கூட்டி, படத்துக்கு வலு சேர்த்துள்ளன. அனல் தெறிக்கும் வசனங்கள் படத்துக்கு கூடுதல் பலம்.

பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் விஜய் ஆண்டனி. குறிப்பாக, அடிக்கடி ரிப்பீட் ஆகும் தீம் மியூசிக் மிரட்டல். “என் மேல கை வைச்சா காலி” என்ற பாடலின் இசையும், வரிகளும் சிறப்பு.

இயக்குனர் ஜீவா சங்கரின் ஒளிப்பதிவு மனநிறைவை அளிக்கிறது. படத்தொகுப்பு செய்துள்ள வீரசெந்தில் ராஜ், படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் நறுக்கியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

தேர்தல் அரசியலை வெறுத்து, போராட்ட அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இளைய தலைமுறை என்பது தான் இன்றைய யதார்த்தம். இந்த யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் விஜய் ஆண்டனி ஒரு படம் பண்ண வேண்டும் என்பது இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை விஜய் ஆண்டனி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே நம் விருப்பமும் கூட…!