ஆதித்ய வர்மா – விமர்சனம்

கோபம், குடி, காதல்… இந்த மூன்றும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதுதான் ‘ஆதித்ய வர்மா’.

மங்களூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறார் த்ருவ் விக்ரம். எல்லாவற்றிலும் டாப்பராக விளங்கும் அவர், கோபத்திலும் அவ்வாறே இருக்கிறார். கோபத்தைக் கட்டுப்படுத்துவது என்பது அவருக்கு இயலாத காரியம். அது தன்னுடைய இயல்பு என்று நியாயம் கற்பிக்கிறார்.

விளையாட்டுப் போட்டி ஒன்றில் நடந்த சண்டைக்காக, மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிறார் த்ருவ் விக்ரம். ஆனால், அவர் மறுத்து, கல்லூரியை விட்டே கிளம்ப முடிவெடுக்க, அந்த நேரத்தில் முதலாம் ஆண்டு சேர்ந்த ஜூனியர் பெண்ணான பனிட்டா சந்துவைச் சந்திக்கிறார். பார்த்த உடனேயே அவர்மீது காதல் பிறக்கிறது. எனவே, மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு, அந்தக் கல்லூரியிலேயே தொடர்ந்து படிக்கிறார். பனிட்டாவுக்கும் த்ருவ் மீது காதல் உண்டாக, இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டு கெதராகத் தங்குகின்றனர். உடலுறவு வைத்துக் கொள்கின்றனர்.

இந்த விஷயம் பனிட்டா வீட்டுக்குத் தெரியவர, பிரச்னையாகிறது. இதனால், குடி உள்ளிட்ட போதை மருந்துகளுக்கு அடிமையாகிறார் த்ருவ் விக்ரம். அதிலிருந்து அவர் மீண்டாரா? காதலர்கள் இணைந்தார்களா? என்பது மீதிக்கதை.

தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக் இது. அதில், முதல்நிலை உதவி இயக்குநராகப் பணியாற்றி கிரிசாயா, இந்தப் படத்தை இயக்கியுள்ளார். எனவே, ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை ஜெராக்ஸ் எடுத்தது போல இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். அதனால், படத்தின் கதை, திரைக்கதை பற்றிப் பெரிதாக எந்த விமர்சனமும் வைக்க முடியாது.

ஆதி கதாபாத்திரத்தில் நூற்றுக்கு இருநூறு சதவீதம் சரியாகப் பொருந்துகிறார் த்ருவ் விக்ரம். முதல் படம் என்று சொல்லும்படி எந்த தடுமாற்றமும் அவரிடம் இல்லை. கோபம், காதல், போதை, காமம், குரோதம் என எல்லாவிதமான உணர்வுகளையும் சரியாகப் பிரதிபலிக்கிறார். அவ்வப்போது விக்ரமின் சாயலையும் குரலையும் நினைவுபடுத்துகிறார்.

உருகி உருகிக் காதலிக்கும் மீரா கதாபாத்திரத்தில் பனிட்டா சந்து. ‘இன்னும் ரெண்டு நாள் உன்கூட தங்கிட்டு போறேன் பேபி’ எனக் காதலுடன் கெஞ்சுமிடங்களில், காதலின் வலியைக் கடத்துகிறார். த்ருவ்வின் நண்பனாக அன்புதாசன் அடிக்கடி சிரிக்க வைப்பதோடு மட்டுமின்றி, சில இடங்களில் நெகிழவும் வைக்கிறார். நாயகன், நாயகிக்குப் பிறகு படம் முழுவதும் வரும் கதாபாத்திரம் இவருக்கு.

த்ருவ்வின் அப்பாவாக ராஜா, அம்மாவாக தீபா ராமானுஜம், பாட்டியாக லீலா சாம்ஸன், நடிகையாகவே வரும் ப்ரியா ஆனந்த் எனக் கதாபாத்திரங்கள் அனைவருமே தங்களுடைய பங்களிப்பை மிகச் சரியாகக் கொடுத்துள்ளனர்.

த்ருவ் தனியாகத் தங்கியிருக்கும் வீடு, கலை இயக்குநரின் கற்பனைத்திறனுக்கு சபாஷ் சொல்ல வைக்கிறது. அதுவும் மது பாட்டில் மூடிகளைக் கொண்டே புல்லட் பைக் போல வடிவமைத்த விதம் அருமை. அத்தனையையும் கச்சிதமாக காட்சிப்படுத்தியுள்ளது ரவி கே சந்திரனின் கேமரா. காதல் காட்சிகளின் ஒவ்வொரு ப்ரேமும், ஒரு கவிதையைப் படித்தவுடன் வரும் புன்முறுவல் போல அழகான தருணங்களாக இருக்கின்றன.

ரதனின் இசையில் ‘எதற்கடி வலி தந்தாய்’ பாடல், திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கும் ரகம். இந்தப் பாடலின் மூலம் பாடகர் மற்றும் ராப் பாடலாசிரியராகவும் அறிமுகமாகியிருக்கிறார் த்ருவ் விக்ரம். பின்னணி இசை மூலம் படத்தை ரசிக்கச்செய்தவர், இரண்டாம் பாதியின் தேவையான இடங்களில் மெளனம் தந்து காட்சிகளின் சூழ்நிலைக்கு வலிமை சேர்க்கிறார்.

பனிட்டா சந்து கருவுற்றதைப் பார்த்தபிறகு த்ருவ் விக்ரம் ஐரோப்பா செல்வதும், அந்தச் சமயத்தில் இடம்பெறும் பாடலும் தேவையில்லாததாகத் தோன்றுகிறது. அதைக் கத்தரித்திருந்தால், இன்னும் கொஞ்சம் ரசனையுடன் படம் இருந்திருக்கும்.

ஒரு மனிதன் பிறக்குறது, அன்பு செலுத்துறது, இறக்குறது எல்லாமே 10 சதவீதம்தான். மத்த 90 சதவீதம் அவர்களைப் பற்றிய தருணங்களின் நினைவுகள்தான் என வாழ்க்கையின் யதார்த்தத்தை மிக இயல்பாகத் தந்தையிடம் த்ருவ் விக்ரம் எடுத்துச் சொல்லும் இடம், அழகிய கவிதை.

எலைட் மக்களை, அவர்களின் மனநிலையைப் பிரதிபலித்துள்ள இந்தப் படத்தை, எல்லோரும் ரசிக்கும் வகையில் எடுத்துள்ளார் கிரிசாயா.

‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபிர் சிங்’ பார்த்தவர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும். அந்தப் படங்களைப் பார்க்காதவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.

 

Read previous post:
0a1b
கேடி (எ) கருப்பு துரை – விமர்சனம்

வயதான குழந்தைக்கும், பெரிய மனிதனின் மனப்பான்மையுடன் திகழும் சிறுவனுக்கும் இடையிலான உறவின் அழகியல்தான் ‘கே.டி.’ மூப்பின் தள்ளாமையால் படுத்த படுக்கையாகிறார் கருப்பு துரை. அவரைப் பராமரிப்பது ஒருகட்டத்தில்

Close