நீட் பிரச்சனை: “வணிக மசாலா” சினிமா இயக்குனர்களின் சண்டைக்குள் சிக்காதீர்!

தமிழ் மாநில பாடத்திட்டத்தில் படித்து, பிளஸ்2-ல் அதிக மதிப்பெண்கள் வாங்கியும், நீட் தேர்வில் மத்திய (சிபிஎஸ்சி) பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் அதில் தேர்ச்சி பெற இயலாமல், மருத்துவராகும் கனவு தகர்ந்த மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டார் அரியலூர் மாவட்டம் குழுமூர் மாணவி அனிதா.

நீட் தேர்வு விவகாரம் என்பது, அடிப்படையில் மாநில உரிமைகளைப் பிடுங்கி தன் வசம் குவித்து வைத்துக்கொண்டு, ‘பள்ளிக்கல்வி’யை ‘கோச்சிங் செண்டர் கல்வி’யாக மாற்றும் நோக்கில் சட்டாம்பிள்ளைத்தனம் செய்யும் மத்திய அரசுக்கும், மருத்துவராகும் கனவுடன் மாநில பாடத்திட்டத்தில் பயின்று, நீட் தேர்வுக்கான ‘கோச்சிங் செண்டரு’க்கு லட்சக்கணக்கில் கொட்டி அழ வசதி இல்லாத பெரும்பாலான ஏழை, எளிய மற்றும் கீழ்நடுத்தர வர்க்க மாணவ – மாணவியருக்கும் இடையிலான பிரச்சனை. ஆக, இது மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்சனை.

எனில், ஏனைய மாநிலங்கள் எல்லாம் முந்தானை விரித்து நீட் தேர்வை ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், தமிழகம் மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறது? மத்திய பாஜக அரசு மட்டும் அல்ல, உச்ச நீதிமன்றமும் கேட்கும் கேள்வி இது. இக்கேள்விக்கான பதில்: நீட் தேர்வில் உள்ள சமூக அநீதியை உணர்ந்திருக்கும் கல்வியாளர்களையும், சிந்தனையாளர்களையும், சமூக செயல்பாட்டாளர்களையும், இயக்கங்களையும், அரசியல் கட்சிகளையும் அதிக அளவில் கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு. அதனால் தான் பார்ப்பன வருணத்துப் பெண்ணாக இருந்தபோதிலும் ஜெயலலிதா, ‘தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம்’ என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதே காரணத்தால் தான் தமிழக சட்டப்பேரவை நீட்டுக்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதே காரணத்தால் தான் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

ஆக, நீட் தேர்வு என்பது மருத்துவராகும் கனவுடன் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் அனைத்து மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டிய பிரச்சனை. ஆனால், ஏனைய மாநில அரசுகள் எதிர்க்காததால் இன்றைய நிலையில் இது தமிழ் மாநிலப் பிரச்சனை; தமிழ் தேசப் பிரச்சனை; தமிழ் தேசியஇனப் பிரச்சனை.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவி அனிதா, உச்ச நீதிமன்றம் வரை தீரமுடன் சென்று வாதாடினார்; போராடினார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் அவர் அளித்த உருக்கமான பேட்டியின்படி, அவர் தனக்காக மட்டுமல்ல, தன்னைப் போன்ற வசதி வாய்ப்பு இல்லாத அனைத்து ஏழை, எளிய தமிழக மாணவர்களின் நலனுக்காகவும் இந்த போராட்டத்தை முன்னெடுத்தார். இருந்தும், நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்காததால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

அனிதா தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதற்காக இது தாழ்த்தப்பட்ட சாதியினர் பிரச்சனை மட்டும் அல்ல. அனிதாவை போல் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றபோதிலும், மாநில பாடத்திட்டத்தில் படித்து அதிக மதிப்பெண்கள் வாங்கியும், நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் பல மாணவர்கள் தமிழகத்தில் நடைபிணங்களாக இருக்கிறார்கள். அவர்கள் வாங்கிய மதிப்பெண்கள் பற்றியும், அவர்களின் மருத்துவக் கனவு அழிக்கப்பட்டது பற்றியும் சமூக வலைத்தளங்களில் படங்களுடன் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவர்களெல்லாம் மாநில அடிப்படையில் தமிழ்நாட்டு மாணவர்கள்; சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பிறந்த மாணவர்கள். வர்க்க அடிப்படையில் சிபிஎஸ்சி பள்ளியிலும், நீட் கோச்சிங் செண்டரிலும் சேர்ந்து படிக்க வசதி – வாய்ப்பு இல்லாத ஏழை, எளிய, கீழ்நடுத்தட்டு மாணவர்கள்.

எனவே, நீட் தேர்வை எதிர்த்தும், அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கோரியும் தமிழகம் முழுவதும் பள்ளி – கல்லூரி மாணவ மாணவிகளும், இளைஞர்களும் நடத்தும் வீரம் செறிந்த போராட்டங்களை ஆதரிப்போம்; பங்கேற்போம்.

நீட் பிரச்சனையின் சாரம் புரியாமல், அப்பிரச்சனையை திசை திருப்ப முயலும் ‘வணிக மசாலா’ சினிமா இயக்குனர்களின் மயிர் பிளக்கும் குறுங்குழுவாத சண்டைக்குள் சிக்கி சீரழியாமல், அவர்களை புறந்தள்ளி போர்க்களத்தில் முன்னேறுவோம்!

அமரகீதன்