இயக்குனர் அமீருடன் மோதல்: பா.ரஞ்சித்துக்கு பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் வாழ்த்து!

நீட் தேர்வுக்கு எதிராகவும், மறைந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ் தேசிய வாதம் பேசும் இயக்குனர் அமீரும், தமிழ் தேசியத்துக்கு எதிராக தலித் வாதத்தை முன்வைக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்தும் ஒரே மேடையில் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இது பற்றிய செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, சமூக வலைத்தளங்களில் அமீருக்கு ஆதரவாக ஒரு சாராரும், ரஞ்சித்துக்கு ஆதரவாக மற்றொரு சாராரும் வரிந்துகட்டி, பிரிந்து நின்று, மல்லுக்கட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், நீட் தேர்வை ஆதரிப்பவரும், நடிகருமான எஸ்.வி.சேகர், ரஞ்சித்தை ஆதரித்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தன்னை தமிழன் என்று சொல்லாமல், தலித் என்று சொல்லும் ரஞ்சித். தன் ஜாதியை பெருமையாகச் சொல்லும் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்களுக்கும், வணக்கங்களும்” என்று கூறியுள்ளார்.

இந்த ட்விட் தொடர்பாக ‘கமெண்ட்’டில் சிலர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு எஸ்.வி.சேகர் சொன்ன பதில்களும் வருமாறு:

அமரன்: நீங்க எல்லாம் ஐயர் ஐயங்கார் என்று பெயர் வைத்து கொண்டு பெருமை பீத்தலாம், அவரு தலித் என்று சொல்லிக் கொள்ள கூடாதா?

எஸ்.வி.சேகர்: சொல்லலாம்.

மகேஷ் வாசுதேவன்: கண்டிப்பாக ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள். காரணம், தமிழன் தமிழன் என வீரம் பேசும் மாக்களுக்கு சவுக்கடி.

எஸ்.வி.சேகர்: நிஜம்.

அமிர்தசிவா: அவர் சொல்வது இருக்கட்டும். நீங்க என்ன சொல்றீங்க சார்?

எஸ்.வி.சேகர்: ஹி இஸ் ரைட்.

தீபன் சச்சின்: ஜாதி என்ற நோய் தீருமா நம் நாட்டில்? சொல்லுங்க சார்?

எஸ்.வி.சேகர்: தீராது.

ராஜவள்ளியப்பன்: பூணுல் தெரியுற மாதிரி போஸ் கொடுக்குறது எந்த வித சாதி வெளிப்பாடு ஐயரே?

எஸ்.வி.சேகர்: அது என் பெருமை. ஆனால் நான் எந்த சாதியினரையும் தாழ்வாக நினைப்பவன் அல்ல (என்று கூறிவிட்டு, தனது இப்படத்தை பதிவிட்டிருக்கிறார் எஸ்.வி.சேகர்.)

0a1e

மகேஷ் வாசுதேவன்: மன்னர்கள் விளைநிலத்தை தானமாக தலித்துக்கா கொடுத்தார்கள்? தீண்டத்தகாத ஜாதி என்று அழுத்திவிடப்பட்டவர்கள் அவர்கள். ரஞ்சித் கேள்வி நியாயமே.

எஸ்.வி.சேகர்: சமுதாயத்தில் தலித்துகளும் பிராமணர்களுமே ஒதுக்கப்பட்டவர்கள். அதுதான் உ.பி.யில் இணைந்தது.

மகேஷ் வாசுதேவன்: பிராமணர்களும் ஒரு நவீன தலித்துகளே – தமிழக அரசியலை பொறுத்தவரை.

எஸ்.வி.சேகர்: 100% ரைட்.

ஸ்ரீகாந்த் பாபி: ஜாதியை அழிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் எப்படி தலித் என்று கூறுகிறார்கள். ஒண்ணும் புரியல.

எஸ்.வி.சேகர்: ஜாதி, மதம் அழிக்க முடியாதது. இது நிஜம்.

(தொகுப்பு: அமரகீதன்)