“ரஜினி சாரிடம் ஒன்லைன் கதை சொல்லிவிட்டேன்!” – பா.ரஞ்சித்!

பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பையும், அபார வசூலையும் வாரிக்குவித்து சாதனை படைத்துள்ள வெற்றிப்படம் ‘கபாலி’.

இதனை அடுத்து ஷங்கர் இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில், ரஜினி ‘எந்திரன்’ இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிந்துவிட்டது அடுத்து ரஜினி கொடுக்கும் கால்ஷீட்டில், ஒரே ஷெட்யூலில் மீதி படப்பிடிப்பும் முடிந்துவிடும். அதன்பிறகு அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கவனிக்க ஷங்கர் போய்விடுவார். ரஜினி ஃபிரியாகி விடுவார்.

எனவே, ‘2.0’க்கு பிறகு ரஜினி நடிக்கப்போகும் படம் எது? அதை இயக்கப்போவது யார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்தன. வழக்கம் போல் யூகச்செய்திகளாக கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட சுமார் அரை டஜன் முன்னணி இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டன.

இதற்கிடையே, ரஜினியை வைத்து ‘கபாலி’ சூப்பர்ஹிட் படம் கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித், அடுத்து எந்த நட்சத்திர நடிகரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சூர்யா, விஜய் ஆகிய நட்சத்திரங்களின் பெயர்கள் அடிபட்டன.

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், “2.0’ படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாகவும், அப்படத்தை நடிகர் தனுஷின் சொந்த பட நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும், தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று அதிகாரபூர்வமாக திடீரென அறிவித்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

“நான்  கர்வத்துடனும், பெருமையுடனும் அறிவிப்பு செய்கிறேன்.  எனது வுண்டர்பார் பிலிம்ஸ் பேனரில் உருவாகும் படத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிக்கிறார், ரஞ்சித் இயக்குகிறார்” என்று தனுஷ் அறிவித்த மறுநிமிடமே, “மகிழ்ச்சி…” என்று  ரஞ்சித் பதிலுக்கு ட்வீட் செய்ய, ரஜினி – ரஞ்சித் – தனுஷ் கூட்டணி உறுதியானது.

இதனையடுத்து, “இது ‘கபாலி’ படத்தின் இரண்டாம் பாகம்” என வாட்ஸ்ஆப்பில் யாரோ கிளப்பிவிட, அது காட்டுத்தீ போல் பரவி, முகநூலில் வாத, பிரதிவாதங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரஞ்சித்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “நீங்கள் அடுத்து இயக்கும் ரஜினி படம் ‘கபாலி’ இரண்டாம் பாகமா?” என்று கேட்டதற்கு, “கண்டிப்பாக ‘கபாலி 2’ படத்தை நான் இயக்கவில்லை. அடுத்து இயக்கப்போவது வேறு ஜேனர் கதை. ரஜினி சாரிடம் ஒன்லைன் கதை சொன்னேன். அவருக்கு மகிழ்ச்சி. தனுஷ் சார் படத்தை தயாரிக்கிறார்” என்று பதில் அளித்துள்ளார்.