“தமிழை இந்தியாவின் ஆட்சிமொழி ஆக்க சொன்னேன்”: சகாயம் ஐ.ஏ.எஸ். பேச்சு!

‘இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழியை ஆக்கலாம்?’ என கேட்டதற்கு, பழமையான இலக்கண, இலக்கிய வளம் கொண்ட, உலகின் வாழும் மொழிகளில் மிக மூத்த மொழியான தமிழையே ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என பதில் அளித்ததாக சகாயம் ஐ.ஏ.எஸ். கூறினார்.

தமிழ் மொழியறிஞர் குணா எழுதிய ‘தமிழரின் தொன்மை’ நூல் வெளியீட்டு விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ். ஆற்றிய உரை (பகுதி1):-

என் அன்பிற்குரிய பழம்பெருமை கொண்ட இந்தத் தமிழ் இனத்தின் மக்களே..

1989ஆம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது தமிழக அரசு நடத்திய இந்திய குடிமை பணிக்கான (ஐஏஎஸ்) பயிற்சியகத்தில் சேர்ந்து பயின்று வந்தேன்.

அந்தப் பயிற்சியகத்தில் பயின்ற 50 பேரில் 49 பேர் பயிற்சியக விடுதியில் தங்கி பயின்றுவந்தனர். நான் ஒருவன் மட்டும் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டு, ஒரு தொண்டு நிறுவனத்தில் ஊழியனாக பணிபுரிந்துகொண்டு, மூன்றாவதாக குடிமைப்பணி பயிற்சியையும் பெற்று வந்தேன்.

குடிமைப்பணி ஆரம்ப நிலைத்தேர்வில் மூன்று மாணவர்கள் வெற்றி பெற்றனர். அந்த மூவரில் நான் ஒருவன்.

இரண்டாவதாக, முதல்நிலைத்தேர்வில் இரண்டு மாண்வர்கள் வெற்றி பெற்றனர். அந்த இருவரில் நான் ஒருவன்.

இறுதியாக, நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வதற்காக அதுவரை வரலாற்று புத்தகத்தில் மட்டுமே படித்த டெல்லி பட்டினத்தில் முதன்முறையாக நேரில் சென்று இறங்கினேன்.

UPSC வளாகத்தில் எங்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றது.

நேர்முகத்தேர்வில் எனக்கு முன்னால் பல வடநாட்டு அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். அதில் ஒரு அதிகாரி என்னைப் பார்த்து கேட்டார்.  “தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும் இந்தியை எதிர்த்துப் போராட்டம் என்று ஆரம்பித்து விடுகிறீர்களே… ஏன்?” என்று. .நான் அந்த அதிகாரிக்கு, “ஐயா, நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல.. இந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள்” என்ற விளக்கத்தை அளித்தேன்.

இறுதியாக, இந்திபேசும் மாநிலமான மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த அந்த அதிகாரி என்னிடம் கேட்டார்.. “இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழியை ஆக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ..?” என்று.

வாழ்வின் மிக முக்கியமான தருணத்தில் இருப்பதை நான் நன்கு உணர்ந்தேன். எல்லா இளைஞர்களின் கனவான மாவட்ட ஆட்சியர் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு எனக்கு கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது. ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து வந்த ஒரு ஏழை விவசாயின் மகன் நான். நான் அளிக்கப்போகும் பதில் என் கனவுகளை, என் இலட்சியங்களை, என் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது என்பது எனக்குத் தெரியும். அந்த கடுமையான சூழ்நிலையிலும் இந்தியை தாய்மொழியாகக் கொண்ட அந்த அதிகாரியிடம் நான் தயங்காமல் சொன்னேன்.. “பழமையான இலக்கண, இலக்கிய வளம் கொண்ட, உலகின் வாழும் மொழிகளில் மிக மூத்த மொழியான தமிழையே ஆட்சி மொழியாக்க வேண்டுமென்று சொல்லுவேன்” என்றேன்.

இதை எப்படி என்னால் சொல்ல முடிந்தது என்று நான் யோசித்துப் பார்க்கிறேன். நான் எந்த அரசியல் இயக்கத்திலும் நான் அன்றிலிருந்து இன்றுவரை உறுப்பினராக இருந்தது இல்லை. எந்த மன்றத்திலும் நான் உறுப்பினராக இல்லை. பின் எப்படி இந்தத் தமிழ் உணர்வு என் உள்ளுக்குள்ளும் செல்லுக்குள்ளும் வந்தது என்று யோசித்தால்.. ஐம்பதனாயிரம் ஆண்டுகளாக இந்த மொழியை பேசுகின்ற இந்த மண் எனக்கு ஊட்டிய உணர்வு அது. இந்த மண்ணில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு பிள்ளையிடத்தும் அந்த உணர்வு இயல்பாகவே உண்டாகிறது.