“ஆங்கில அடிமைகளுக்கு சுதந்திரம் பற்றி பேச உரிமை இல்லை!” – சகாயம் ஐ.ஏ.எஸ்.

“ஆங்கில அடிமைகளுக்கு சுதந்திரத்தை பற்றி பேசக்கூடிய உரிமை இல்லை” என்றார் சகாயம் ஐ.ஏ.எஸ்.

தமிழ் மொழியறிஞர் குணா எழுதிய ‘தமிழரின் தொன்மை’ நூல் வெளியீட்டு விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ். ஆற்றிய உரை (பகுதி2):-

ஒருமுறை நான் நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பண்புரிந்த காலம். திருச்செங்கோட்டில் வட்டார அளவிலான மக்கள் குறை தீர்ப்புக் கூட்டம்.. வருடம் ஒருமுறை மட்டுமே நடைபெறக்கூடிய, ஜமாபந்தி என்று சொல்லக்கூடிய அந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் மனுக்களை என்னிடம் அளித்துக்கொண்டிருந்தனர்.

அதில் விவசாயிகள் சிலரும் மனுவை என்னிடம் அளித்தனர்.

அதில் கையெழுத்திட்டிருந்தவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் பேர் ஆங்கிலேத்திலேயே கையெழுத்திட்டிருந்தனர். சாதாரண கிராமத்து விவசாயிகளான சுப்பையாவும், ராமசாமியும், கருப்பண்ணனும் ஆங்கிலத்தில் கையெழுத்து இட்டிருந்ததைக் கண்டு நான் வியந்தேன்.

நான் அந்த விவாசாயிகளிடம், “என்ன பிரச்சனைக்காக வந்துள்ளீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், “பட்டா மாறுதல் கேட்டு மூன்றாண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறோம். வட்டாட்சியர் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னார்கள்.

நான் அந்த விவசாயிகளிடம் சொன்னேன். “அந்த வட்டாட்சியர் ஒரு தமிழர். நீங்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டிருப்பதைக் கண்டு, ஆங்கிலேயர்கள் தான் பட்டா மாறுதலுக்கு வந்துவிட்டனரோ என்று அந்த அதிகாரிக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஆகவே நீங்கள் தமிழில் கையெழுத்திட்டு வாருங்கள்” என்று சொன்னேன்.

அந்த வட்டாட்சியர் எந்த நோக்கத்திற்காக இழுத்தடிக்கிறார் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. இருந்தபோதிலும், அந்த விவசாயிகளின் ஆங்கிலத்தில் கையெழுத்திடும் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே அப்படிச் சொன்னேன்.

அந்த விவசாயிகள், “தமிழில் கையெழுத்திட்டால் காசு கேட்காமலேயே பட்டா மாறுதலை வட்டாட்சியர் தந்து விடுவாரா?” என்று கேட்டனர். “கிடைத்துவிடும்” என்று சொல்லி, ஒருமுறை கையெழுத்திட்டால் பழக்கத்திற்கு வராது என்பதால் ஒரு தாளில் முன்னூறு முறை தமிழில் கையெழுத்திடச் சொல்லி வாங்கிவிட்டேன்.

அடுத்தநாள் செய்தித்தாளில், “விவசாயிகளை தமிழில் கையெழுத்திட சொன்ன கலெக்டர்” என்று செய்தி வந்தது. அதைப் பார்த்துவிட்டு ஓசூரிலிந்து ஒரு மனிதர் எனக்கு கடிதம் எழுதினார். “ஆங்கிலத்தில் கையெழுத்திடலாம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரம்.. ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை” என்று எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தைப் படித்துவிட்டு நான் என் உதவியாளரை அழைத்துச் சொன்னேன். “ சுதந்திரத்தை பற்றிப் பேசும் இந்த மனிதருக்குப் பதில் கடிதம் எழுதுங்கள்.. ‘ஆங்கில அடிமைகளுக்கு சுதந்திரத்தை பற்றி பேசக்கூடிய உரிமை இல்லை’ என்று…!”

Read previous post:
0a1e
“தமிழை இந்தியாவின் ஆட்சிமொழி ஆக்க சொன்னேன்”: சகாயம் ஐ.ஏ.எஸ். பேச்சு!

‘இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழியை ஆக்கலாம்?’ என கேட்டதற்கு, பழமையான இலக்கண, இலக்கிய வளம் கொண்ட, உலகின் வாழும் மொழிகளில் மிக மூத்த மொழியான தமிழையே

Close