அம்மணமாகி நிற்க பழகிக் கொள்ளுங்கள்! இனி வரும் காலத்தில்….

கேள்விகள் மட்டுமே பதில்கள்:

தில்லியில் அம்மணமாக நின்றது விவசாயி மட்டுமா?

அம்மணம் ஆக்கப்பட்டிருப்பது உண்மையில் நீங்களும் நானும் தான். விவசாயி நம் அம்மணத்தின் நேரடி பிரதிபலிப்பு. அவ்வளவே.

பல நாட்களாக ஜந்தர் மந்தரில் நடந்து வரும் போராட்டம் வெறும் விவசாயத்துக்கான போராட்டம் மட்டும் அல்ல. வாழ்வாதாரத்துகான போராட்டம். விவசாயம் தான் வாழ்வாதாரமா? இல்லை.

வாழ்வுக்கான அடிப்படை ஆதாரங்கள் என்ன? கொஞ்சம் பள்ளிக்கூட சமூகவியல் புத்தகத்தை புரட்டுவோம். உடுத்த உடை, உண்ண உணவு, இருக்க இடம். இது மூன்றும் இன்று சாத்தியமா?

உடை, உணவு, இடம் என்பதை ஒரு குடிமகனுக்கு ஏற்படுத்தி கொடுப்பதே அரசின் கடமை. ஆனால் நம் அரசுகள் இவற்றை யாருக்கு ஏற்படுத்தி கொடுக்கின்றன? நீங்கள் போகும் நாற்கர சாலைகள் யாருக்கு போடப்பட்டன? ஏன் பல வருடங்கள் பணம் சேர்த்து நீங்கள் வாங்க போகும் வீட்டுமனை, நகரங்களுக்கு வெளியே இருக்கின்றன? நகரங்கள் யாருக்கு ஆனவை?

உங்களின் உணவை யார் விளைவிக்க போவது? உங்கள் உணவின் இடையே விக்கல் எடுத்ததும் நீங்கள் குடிக்கும் தண்ணீர் யார் கையில் இருக்கிறது? உங்கள் ஆடைகளுக்கான பருத்தி யார் கொடுக்கிறார்கள்? ஆடைகள் எங்கு நெய்யப்படுகின்றன? நீங்கள் வாழ்வதற்கு வாங்குகிற இடத்தை கைப்பற்றும் அதிகாரம் யாருக்கு போக போகிறது?

உங்கள் உணவில் எவ்வளவு விஷம் உள்ளது? நீண்ட காலம் தாங்கும் உடைகளின் விலை என்ன? இயற்கையான உணவுக்கு விலை ஏற்றப்பட்டது எப்படி?

சில காலத்துக்கு முன், இவை எவையும் இப்படி இருக்கவில்லை. உங்கள் உணவு உங்கள் ஊரில் விளைவிக்கப்பட்டிருந்தது. உங்கள் உடை உங்கள் ஊரில் நெய்யப்பட்டிருந்தது. உங்கள் சொந்த வீடு உங்கள் அலுவலகத்துக்கு அருகே இருந்தது. எல்லாமும் எப்போதிருந்து மாறியது? ஏன் மாறியது? யார் மாற்றியது? யாருக்காக மாற்றினார்கள்?

இவையெல்லாம் வெறும் அடிப்படை வாழ்வாதார தேவைகள் மட்டும் தான்.

சில பத்து வருடங்களுக்கு முன், நாட்டார் கடைக்கு வெளியே கல் உப்பை ஒரு மூட்டையில் வைத்திருப்பார்கள். மளிகை வாங்க வரும் எவரும், தேவையான அளவுக்கு எடுத்து கொள்ளலாம். இலவசம். காய்கறி வாங்குகையில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலவசமாக கொடுப்பார்கள். எந்த வீட்டிலும் நின்று ஒரு குவளை தண்ணீர் வாங்கி கொடுக்கலாம். தண்ணீரை விலைக்கு வாங்கி கொடுப்போம் என அன்று சொல்லி இருந்தால் அவன் முட்டாள் என அழைக்கப்பட்டிருப்பான்.

ஏன் இத்தனை வெயில்? ஏன் இத்தனை வறட்சி? ஆற்று நீரெல்லாம் எங்கு போயிற்று? நீர் நிலைகள் எல்லாம் என்னவாகின? மின்சாரம் எல்லாம் எங்கு போகிறது? மானியங்கள் யாருக்கு வழங்கப்படுகின்றன? சென்னைக்கு மட்டும் ‘கேன்’ தண்ணீர் எல்லா காலங்களிலும் எப்படி தவறாமல் கிடைக்கிறது? மழை ஏன் பொய்க்கிறது? நிலம் ஏன் மலடானது?

புவி ஏன் வெப்பம் ஆனது? ஏன் இத்தனை அணு உலைகள்? 2015 ம் ஆண்டு பாரிஸில் நடந்த COP என்னும் வானிலை மாற்றத்துக்கான கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது? இந்தியா என்ன சொன்னது? ஏன் தஞ்சை சுற்றுப்பகுதியில் மட்டும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் என பல திட்டங்கள்? ரஷியாவுக்கான அணு உலை ஏன் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டது? காவிரி நீர் பகிர்வு முடக்கப்படுவது ஏன்?

உங்கள் வாழ்க்கை, இருப்பு பணத்தில் கட்டமைக்கப்பட்டதா, கடனில் கட்டமைக்கப்பட்டதா? உங்களிடம் பணம் இருக்கிறதா? அது உங்கள் பணம்தான் என உறுதியாக கூற முடியுமா?

உங்களுக்கு உரிமையாக இருப்பது இங்கு என்ன, ஆதார் எண்ணை தவிர? ஆதார் எண்ணும் ஏன் உங்களுக்கு வழங்கப்படுகிறது? பண்டங்களின் பார் கோட் எண் போல், உயிருள்ள உங்களுக்கு, ஏன், மாடுகளுக்கு கூட வழங்கப்படுகிறதே ஆதார் எண், ஏன்?

இவை எல்லாம் வெறும் கேள்விகள் அல்ல. அனைத்தும் பதில்கள். நாம் அறிந்த பதில்கள். இந்த கேள்விகளை திரும்ப உருவாக்கும் வாய்ப்புகளை மட்டுமே நாம் தொடர்ந்து தேர்ந்தெடுக்கிறோம்.

மிகவும் முக்கியமான கேள்வி. உண்மையில் நாம்தான் தேர்ந்தெடுக்கிறோமா? இதற்கான பதிலும் நமக்கு தெரியும்.

அம்மணமாகி நிற்க பழகி கொள்ளுங்கள். இனி வரும் காலத்தில் ஒவ்வொரு தெருவிலும் பற்பல அம்மண கூட்டங்கள் நிற்கும்.

RAJASANGEETHAN JOHN