நடிகர் அருண்விஜய் சரண்! கைது! ஜாமீனில் விடுதலை!

போதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனம் மீது மோதிய வழக்கில் சரணடைந்த நடிகர் அருண் விஜய் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல ஸ்டார் ஓட்டலில் நடிகை ராதிகா மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 26ஆம் தேதி இரவில் நடந்தது. நடிகர் அருண் விஜய் தனது மனைவி ஆர்த்தியுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் தனது சொகுசு காரில் வீட்டுக்கு புறப்பட்டார். காரை அருண் விஜய் ஓட்ட, மனைவி அருகில் அமர்ந்து இருந்தார்.

நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகே அவரது கார் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த, போலீஸ் டெம்போ டிராவலர் வேன் மீது மோதியது. இதில் வேனின் பின்பகுதி மற்றும் இடது பக்கம் சேதம் அடைந்தன.

சம்பவம் நடந்தது இரவு நேரம் என்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விசாரணையில், வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த மது விருந்தில் கலந்துகொண்ட அருண்விஜய் அளவுக்கதிகமாக மது அருந்தியிருப்பது தெரிந்தது. மேலும், காரை வேகமாக ஓட்டி வந்ததால் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், காரை பறிமுதல் செய்தனர். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், காவல் நிலையத்தில் இருந்து அருண் விஜய், யாரிடமும் சொல்லாமல் தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அருண்விஜய் இன்று (செவ்வாய் கிழமை) போலீஸில் சரணடைந்தார். போலீஸார் அவரை கைது செய்து எழும்பூர் 13-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.