ஜெயலலிதா பேசுவதாக தகவல்: அப்போலோ விரைந்தார் ஆளுநர்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் எழுந்து உட்கார்ந்து பேசுவதாகவும் அப்போலோ மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) தகவல் வெளியானது.

இதனை அடுத்து, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று (சனிக்கிழமை) காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். அங்கு ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் வார்டுக்குச் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். பின்னர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களிடம் சுமார் 25 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அவரது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.

பிறகு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். மருத்துவமனை வளாகத்தில் இருந்த செய்தியாளர்களை அவர் சந்திக்கவில்லை.

அதன்பின், ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட்டுள்ளதை அறிந்து ஆளுநர் மகிழ்ச்சி அடைந்ததாகவும், முதல்வருக்கு சிறப்பான சிகிச்சை அளித்துவரும் மருத்துவக் குழுவுக்கு அவர் பாராட்டு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய இதற்குமுன் இம்மாதம் 1ஆம் தேதி அப்போலோவுக்கு வந்த வித்யாசாகர் ராவ், இன்று இரண்டாவது முறையாக மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.