“மோடி அரசின் பொது சிவில் சட்ட முயற்சியை தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும்!” – மு.க.ஸ்டாலின்

இந்திய நாட்டில் நிலவி வரும் ஏராளமான அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் பொதுசிவில் சட்ட முயற்சியை திமுக தொடர்ந்து எதிர்க்கும் என்று அக்கட்சியின் பொருளாளார் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

‘பாஜக தலைமையிலான மத்திய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்தார்கள்.

பொது சிவில் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கேட்டார்கள். அப்போது, மத்திய அரசு சமீபகாலமாக சிறுபான்மையின சமுதாயத்தின் நலன்களுக்கும், மத சுதந்திரத்திற்கும் எதிராக அவர்களது உரிமைகளில் குறுக்கிடும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறித்தும் விரிவாக விளக்கினார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரை அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை, நாட்டின் ஒருமைப்பாடு உள்ளிட்ட அடிப்படை கொள்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையே, இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பற்ற தன்மை, ஜனநாயகக் குடியரசு உள்ளிட்ட அடிப்படைக் கொள்கைகளின் கட்டமைப்பாகவே வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை மாற்றவோ, திருத்தவோ, ரத்து செய்யவோ பாராளுமன்றத்திற்கே அதிகாரம் இல்லை என்று அரசியல் சட்டத்தின் பாதுகாவலனாக இருக்கும் உச்சநீதிமன்றம் மிகவும் பிரபலமான கேசவானந்த பாரதி வழக்கில் 24.4.1973 அன்றே தீர்ப்பளித்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.எம்.சிக்ரி தலைமையிலான 13 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, இன்றைய அளவும் அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை பத்திரமாக பாதுகாத்துக்கொண்டிருக்கிறது.

பொது சிவில் சட்டம் உள்ளிட்ட அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளில் மத்திய அரசு எந்தவித மாற்றமும் கொண்டு வரக் கூடாது என்று திமுக பொதுக்குழுவில் 9.1.2015 அன்றே தெளிவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதவாத, மொழிவெறிப் பேச்சுக்களை கைவிட்டு மத்திய அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி நாட்டின் வளர்ச்சி குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றே அன்றைய தினமே அந்த தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் திமுக, பொது சிவில் சட்டம் போன்றவற்றை கொண்டு வந்து இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பங்கம் வருவதற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கும் நிச்சயம் இடமளிக்காது. அரசியல் சட்டப்படி சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்க எந்த விதத்திலும் அனுமதிக்காது.

இந்திய நாட்டில் நிலவி வரும் ஏராளமான அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான மத்திய அரசின் இந்த முயற்சியை திமுக தொடர்ந்து எதிர்க்கும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.