திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்: 5 ஆயிரம் பேர் கைது!

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு சம்பவத்தில் பலியான தமிழர்களுக்காக நினைவேந்தல் கூட்டத்தை, தமிழக அரசின் அராஜகத் தடையை மீறி நடத்தியதாக, திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது பாய்ந்த குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், நால்வரையும் சிறையிலிருந்து உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ் தேசிய அமைப்புகள், பெரியாரிய அமைப்புகள், மாணவர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், மகளிர் அமைப்புகள் ஆகியவற்றை சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து ஊர்வலமாக சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளதாக வேல்முருகன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால் முன்கூட்டியே சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். அங்கிருந்து முதல்வர் இல்லம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது வேல்முருகன் உள்ளிட்ட 5 ஆயிரம் பேரை போலீஸார் கைது செய்தனர்.