சசிகலா அணி கூட்டத்தில் பா.வளர்மதி, நிர்மலா பெரியசாமி ‘குழாயடி’ சண்டை!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில், அந்த அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதை ஒட்டி, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி பேசும்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் அவர்கள் அதிக ஓட்டுகளை பெறுவார்கள் என்றார்.

அதற்கு பா.வளர்மதி, அவரை பற்றி இங்கு பேசக் கூடாது என்றார். பதிலுக்கு நிர்மலா பெரியசாமி, மக்கள் செல்வாக்கு உள்ளவரை பற்றி பேசுவதில் தவறில்லை என்றார்.

நீங்கள் எல்லாம் ஒரு முடிவோடு தான் இருக்கிறீர்களா? அப்படியென்றால் ஏன் இங்கு வருகிறீர்கள்? என்று பா.வளர்மதி அவரை பார்த்து கேட்டார்.

ஜெயலலிதா தொடங்கிய கட்சியும், இரட்டை இலை சின்னமும் இங்கு இருப்பதால் தான் வருகிறோம். உங்களிடம் பேசி பலனில்லை. யாரிடம் பேச வேண்டுமோ அவரிடம் பேசிக் கொள்கிறேன் என்று கூறி கூட்டத்தில் இருந்து நிர்மலா பெரியசாமி வெளிநடப்பு செய்ய முயன்றார்.

அப்போது பா.வளர்மதியும், நிர்மலா பெரியசாமியும் ஒருவரை ஒருவர் ஆவேசமாக திட்டி, ‘குழாயடி சண்டை’ பாணியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நிர்மலா பெரியசாமி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நிர்மலா பெரியசாமி கூறியதாவது:-

நான் எப்படியும் இரு அணிகளும் ஒன்றுபட்டுவிடும் என்று காத்திருந்தேன். அம்மாவின் கட்சியை விட்டு வெளியே போக விருப்பப்படவில்லை என்பதால் யோசித்துக்கொண்டிருந்தேன். என் மனதில் ஊசலாடிக்கொண்டிருந்த எண்ணத்தை இப்போது எடுக்க இறைவன் வழிகாட்டிவிட்டார்.

அதிமுக ஆலோசனை கூட்டத்தில், நான் அமைதியாக பேசிக்கொண்டிருந்தபோது, சி.ஆர்.சரஸ்வதி, குண்டுகல்யாணம் ஆகியோர் அதில் குறுக்கிட்டனர். ஓ.பி.எஸ் அண்ணன் நமக்கு எதிரியா என நான் கேட்டதை மட்டும் எடுத்துக்கொண்டு, அவர்கள் என்னை விமர்சனம் செய்தனர்.

ஓ.பி.எஸ் எதிரி இல்லை என்றால், நீங்கள் ஏன் கட்சியில் இருக்க வேண்டும் என்று என்னை கேட்டார். நீங்கள் யார் என்னை கட்சியை விட்டு வெளியேற சொல்ல என நான் கேட்டேன். அதற்குள், வளர்மதி வந்து என்னை அடக்க பார்த்தார். சொந்த தொகுதியில் மக்களால் விரட்டப்பட்ட வளர்மதி என்னை அடக்க முயல என்ன தகுதியுள்ளது?  சி.ஆர்.சரஸ்வதி, வளர்மதி ஆகியோர் அரசியல் வியாதி போன்றவர்கள்.

அதிமுகவிலுள்ள 90 சதவீதம் பேர் மனப்புழுக்கத்தில்தான் உள்ளனர். பதவி, கவுரவம் என அனைத்து சலுகைகள் கிடைத்தாலும்கூட அதிமுகவிலுள்ள பலரும் மன புழுக்கத்தில்தான் உள்ளனர். விரைவில் ஒவ்வொருவராக பன்னீர்செல்வம் அணியில் வந்து இணைவார்கள். பன்னீர்செல்வம் அணியிலிருந்து தற்போது 2 பேர் என்னிடம் பேசினர். அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என கூறினர். ஆனால் நான் எனது முடிவில் உறுதியாக உள்ளேன்” என்றார் நிர்மலா பெரியசாமி.